Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 04

Share

புதுச்சேரிக் கம்பன் விழாவில் முதன்மைக்குரியவராக கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களே இருந்தார்.

கழகத்தின் பொதுச் செயலாளரும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டசபை சபாநாயகருமான சிவகொழுந்து அவர்கள் கம்பவாரிதி தங்கிருந்த விடுதிக்கு வந்து சந்தித்தார்.

இதன்போது தான் கம்பன் விழா அழைப்பிதழை வழங்கச்சென்ற போது, அழைப் பிதழைப் பெற்றுக் கொண்ட அனைவரும் கேட்ட முதலாவது கேள்வி, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் விழாவுக்கு வருவாரா? என்பதுதான் என்ற தகவலைத் தெரிவித்திருந்தார்.

அந்தளவுக்கு கம்பவாரிதி மீது புதுச்சேரி மக்களும் அங்குள்ள பிரமுகர்களும் மிகுந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்தனர்.

முதல் நாள் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 58ஆவது விழா 2025 மே 09 ஆம் திகதி ஆரம்பமாகியது.

புதுவை நகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான மண்டபத்தில் மூன்று நாள் விழா.

அந்த மண்டபத்திற்கு கம்பன் கலையரங்கு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதெனில், புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் செல்வாக்கு எவ்வாறாகவுள்ளதென்பதை நாம் புரிந்து கொள்வதில் கடினமிருக்க முடியாது.

நகராட்சி மன்றத்தின் கலையரங்கு கம்பன் பெயரில் அமைந்ததால், விழா மண்டபத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கம்பனின் பிரமாண்டமான உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

விழா மண்டபத்தின் நுழைவாயில் விசேடமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூடவே விழாவை தெளிவுபடுத்துகின்ற பிரமாண்டமான பதாகைகள் உட்பட விழா மண்டபம் அமைந்த வளாகம் எங்கும் விசேடமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கம்பனின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கின்ற நிகழ்வே விழாவின் தொடக்கம்.

கம்பனின் சிலைக்கு புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ந.இரங்கசாமி அவர்கள் மாலை அணிவித்தார்.

ஏலவே குறிப்பிட்டது போல புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் புரவலராக மாநிலத்தின் முதலமைச்சரே இருப்பார்.

அந்தவகையில் புதுச்சேரி முதலமைச்சர் இரங்கசாமி அவர்கள் நேர காலத்தோடு அங்கு வந்திருந்தார்.

உயர்ந்த தோற்றம், சிரித்த முகம், நெற்றியில் திருநீறு சர்வசாதாரணமாக எல்லோ ருடனும் பழகிக் கொண்டார். அவரை எல்லோரும் உயர்வாக மதித்தனர்.

விருந்தினர்களை வரவேற்று அழைத்துச் செல்லுகின்ற நிகழ்வு மிக அற்புதமாக அமைந்திருந்தது.

ஒரு நிகழ்வின் நல்ல ஆரம்பம் அந்த நிகழ்வின் அரைவாசி வெற்றி என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி.

அந்தப்பழமொழியின் நிதர்சனத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 58 ஆவது விழாவில் தரிசித்தேன்.

கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கென தனியான வாகனம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து அவர் அந்த விசேட வாகனத்தில் விழா மண்டபத்திற்கு வந்து இறங்கிய போது, அங்கு நின்றவர்கள் எல்லோரும் கம்பவாரிதியை நோக்கி இருகரம் கூப்பி வணங்கினர்.

இன்னும் பலர் வயது வேறுபாடின்றி அவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றனர். வாகனத்தால் இறங்கும் போதே இவை நடந்தன.

இதில் மிகப் பெரும் மகிமை புதுச்சேரி மாநிலத்தின் மந்திரி பிரதானிகள், வர்த்தகப் பிரமுகர்கள் அனைவரும் கம்ப வாரிதி மீது கொண்டிருந்த மதிப்பு மரியாதையும் எனலாம்.

இவை யாவற்றையும் கண்ட எம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

எங்கள் ஈழத்தமிழ்ப் பேராளுமைக்கு இந்திய தேசத்தில் இருக்கக்கூடிய மதிப்பையும் மரியாதையையும் நேரில் கண்ணுற்ற போது, உண்மையிலேயே என் தோள் புயங்கள் உயர்ந்து கொண்டன.

இத்துணை பெருமை எங்கள் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களால் எங்கள் ஈழ மண்ணுக்குக் கிடைத்ததேயயன்றபுளகாங்கிதம்.

இவை காரணமாகவே இந்தப் பயணக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

ஆம், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களை தமிழகமும் புதுச்சேரியும் தங்கள் கேசத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.

அவரின் உரையைக் கேட்டால் அதுவே தங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்த உண்மையை எங்கள் ஈழத்தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே புதுச்சேரிப் பயணத்தை எழுத முனைந்தோம்.

விழா மண்டபத்திற்கு வருகைதந்த கம்பவாரிதியை கழகப்பிரமுகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரின் வருகையால் அவர்களின் மனம் பூரித்திருந்ததை அவர்களின் முகபாவனையில் இருந்து உணர்ந்து கொண்டேன்.

விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உரிய நேரத்தில் விழா ஆரம்பமாகியது. தமிழ்த்தாய் வாழ்த்தே அரங்க நிகழ்வில் இறைவணக்கமாகியது.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link