Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 17

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனத்தில் தமிழகத்தில் ஆதீனங்களின் செல்வாக்குப் பற்றியும் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பெரியாரின் திராவிட சிந்தனையும் பற்றிப் பார்க்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக இருந்தது.

இங்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இந்துமதம் ஓரங் கட்டப்பட்டதன் சான்றுகளை முன்னிலைப்படுத்தியிருந்தோம்.

கூடவே சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்ராலின் கூறியதன் விளைவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கினர்.

இப்போது தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை ஆளுகிறது.

முதலமைச்சர் விஜயின் ஆடைக் கலாசாரத்தையும் அவரின் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களையும் தமிழக மக்கள் எவ்வாறு கருதிக் கொள்வர் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எதுவாயினும் சட்டசபை சபாநாயகர் பிரபாகர் தனது கன்னியுரையில்; 5000 பைபிள்களை இலவசமாக வழங்கினேன் எனக் கூறியதற்குள் 5000 பைபிள்களை இலவசமாக வழங்கி, ஐயாயிரம் பேரை அல்லது ஐயாயிரம் குடும்பங்களை தமிழகத்தில் மதமாற்றம் செய்தேன் எனும் மறைமுகச் செய்தி உண்டென்பதால், அது குறித்து தமிழக மக்களின் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதையும் மதிப்பீடு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் தேவை என்பதும் இங்கு குறித்துரைக்கப்பட வேண்டும்.

அதேநேரம் அன்னியராட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை இந்து சமயம் ஏமாந்தும் விட்டுக் கொடுத்தும் தன்னிலை இழந்தும் போவதுதான் தலைவிதியாயிற்று.

இத் தரிசனத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது, முகநூல் பதிவொன்றைப் பார்வையிட நேர்ந்தது.

அதில் தமிழகத்தின் முதலமைச்சராக அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் பதவி யேற்ற போது, அவரின் முதலமைச்சர் மேசையில் விபூதி பூசிய- உருத்திராக்கம் அணிந்த திருவள்ளுவரின் படம் இருந்தது எனக் குறிப்பிட்டு, திருவள்ளுவர் பெரு மான் திருநீற்றையும் உருத்திராக்கத்தையும் இழந்தது கலைஞர் கருணாநிதி முதல மைச்சராகிய போது தான் என அந்த முகநூலில் குறிப்பிட்டிருந்ததையும் கண்ணுற்றோம்.

ஆக, சைவ சமயம் மட்டுமே தனது அடையாளங்களை இழந்து தன் தமிழ்மொழியை முதன்மைப்படுத்துகிறது.

ஆயினும் சைவசமயம் தன் அடையாளங்களை இழந்ததேயன்றி, தமிழ் மொழியை முதன்மைப்படுத்தியதா? என்றால் அதற்கான பதில் மெளனமாகவே இருக்கும்.

ஆம், சைவ அடையாளங்களைப் புறந்தள்ளி தமிழை முதன்மைப்படுத்த முற்பட்ட போதிலும் மதம் மாறிய தமிழர்களைத் தமிழ்ப் பண்பாட்டின் வாசல்படிக்குக் கூட அழைத்து வர முடியவில்லை.

இதற்குத் தக்க உதாரணம் இரண்டு. அதில் ஒன்று தமிழக முதலமைச்சரான ஜோசப் விஜய், தமிழ்ப் பண்பாட்டை அடியோடு நிராகரித்து ஆங்கிலக் கத்தோலிக்கப் பண் பாட்டை பின்பற்றுவதாய் ஆடை அணிந்து கொண்டார்.

இது தவிர, திருவள்ளுவரின் அங்கத்தில் திரிபுடகமாக இருந்த திருநீற்றுக் குறிகளை அழித்து – உருத்திராக்க மாலையைக் கழற்றி அவரை வெறுமையாக்கிய கலைஞர் கருணாநிதியால் தமிழ்ப் புத்தாண்டை தமிழர்கள் என்ற பேரால் கூட, கத்தோலிக்க மக்களையும் அனுட்டிக்கவைக்க முடியவில்லை.

அதாவது நாம் எல்லோரும் தமிழர்கள் என்றால், சித்திரைத்திங்கள் முதலாம் நாளில் பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை, மதபேதமின்றி அனைத்துத் தமிழ் மக்களும் அனுஷ்டிக்க வேண்டும்.

ஆனால் தமிழ் சித்திரைப் புத்தாண்டு என்பது சைவத் தமிழர்களுக்கானதென்ற போது, சைவ சமயம் தவிர்ந்த ஏனைய மதங்கள் தங்களின் இனம்- தங்களின் மொழி என்பதை முதன்மைப்படுத்தாமல், தங்களின் மதம் என்பதை துலாம்பரப்படுத்தி நிற்பதை நாம் காண முடியும்.

இங்கு தான் கலைஞர் கருணாநிதி தனது வழமையான பாணியில் ஒரு திருகு தாளத்தை முன்வைக்கின்றார்.

ஆம், தமிழர்களின் புத்தாண்டு என்பது தைத்திங்கள் முதலாம் நாளே. சித்திரை மாதத்து முதலாம் திகதி தமிழர் புத்தாண்டன்று எனக் கூறி, தமிழர்களின் 60 ஆண்டுகள் என்ற காலச்சுற்றை கந்தறுக்க முற்பட்டார்.

ஆம், வானசாஸ்திரங்களின் அடிப்படையில் பன்னிரு இராசிகளில் முதல் இராசியாக இருக்கக் கூடிய மேட இராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கின்ற நாள் சித்திரை முதலாம் திகதியாக இருப்பதால், அதுவே தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பாகக் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழர்களின் வானசாஸ்திர அறிவியலை குழிதோன்றிப் புதைக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி செயற்பட்டாலும் அது தமிழகத்தில்- தமிழ் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் தமிழர்கள் மத்தியில் மத வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ்ப் பண்பாடு என்று வரும்போது, தமிழின் பெயரால் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு பின்பற்றுதல் என்பது தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலை – தமிழர் புத்தாண்டாகிய சித்திரைப் புத்தாண்டை கத்தோலிக்கம் மற்றும் கிறிஸ்தவம் சார்ந்த தமிழ் மக்களும் கொண்டாடுவதாக இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் இஃது தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கும் வலுச்சேர்க்கும்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link