தரிசனம்
Share
யாழ்.போதனா வைத்தியசாலை 10
உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது மரணமாகவே இருக்க முடியும்.
எவர் நூறு வயதில் மரணித்தாலும் கூட அவரின் நினைவுகள் அவர் சார்ந்தவர்களை நெருடவே செய்யும்.
தவிர, எதிரிக்கும் தலை தாழ்த்துகின்ற ஓர் இடம் உண்டெனில், அது மரணமாக மட்டுமே இருக்க முடியும்.
இருந்தும் இவற்றையும் கடந்து மரணத்திலும் பணம் பறிக்கின்ற ஒரு கூட்டம் இருக்குமென்றால், அதை விட்ட மிலேச்சத்தனம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
ஆம், கற்பனையில் கூட நினைக்க நெஞ்சம் பதை பதைக்கின்ற அந்தக் காரியம் நம் மத்தியிலும் நட ந்தாகிறது.
என்ன செய்வது பிணங்களோடு காலம் கழிக்கின்ற அந்த சூழ்நிலைகள் உயிருள்ள மனிதர்களின் மனங்களையும் மரணிக்கச் செய்து விட்டது போலும்.
ஏழை-பணக்காரர் என்ற பேதமின்றி, இறந்தவர்களின் அவலங்கள் பற்றி ஒரு கணமும் சிந்திக்காமல் பணத்தை எதிர்பார்க்கின்ற அந்தக் கணம் மனித வாழ்வை வெறுக்க வைப்பது.
என்ன செய்வது பிணங்களை நாடுகின்ற கழுகுகளின் படைப்புக்களும் அந்தப் பிரம்மாவின் ஒரு பிடி மண்ணில் உற்பவமாகியவை என்பதால் எல்லாவற்றையும் தாங்குதல் நம் கடனாயிற்று.
ஆயினும் இறந்தவர் யார்? அந்தக் குடும்பத்தின் நிலை எவ்வாறாக? உள்ளது என ஒரு கணம் அறிந்து தனம் மிகுந்தவர்களாயின் அவர்களிடம் பணத்தை எதிர்பார்ப்பதும் ஏழைகள் என்றால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதும் அறம் சார்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தியாகால சேவை
உலகில் மிகப்பெரிய புலனாய்வு எது என்று கேட்டால், மொசாட் எனப் பலரும் பதிலளிப்பர். ஆனால் எம்மைப் பொறுத்த வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட அந்தியாகால சேவையினர் தான் இந்த உலகின் முதற்தரப் புலனாய்வு என்போம்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுகளில் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்த நோயாளர்கள் இறந்து விட் டால், அந்தத் தகவல் சம்பந் தப்பட்ட விடுதி மருத்துவருக்கு-சம்பந்தப்பட்டவருடன் உடனிருந்த பராமரிப்பா ளருக்கு-இறந்தவரின் குடும்பத்தினருக்கு தெரியமுதல், அந்தியாகால சேவையினரு க்கு தெரிந்து விடுகிறது எனில், அவர்களின் புலனாய்வு-அவர்களுக்குத் தகவல் வழங்குவதை மிகவும் சிறப்பாகச் செய்கின்ற ஒரு குறிப்பிட்ட சுகாதாரப் பணி யாளர்கள்-அவர்களுக்காக அந்தியாகால சேவையினர் வழங்குகின்ற கமிசன். அப்பாடா! ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனின் இறுதிக்காலம் என்பது தான் மிகவும் ஆபத்தானது போல தெரிகிறது.
ஆம், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் இறந்து விட்டால் இறந்தவரின் உறவினர்களை அந்தியாகால சேவையினர் சுற்றி வளைத்து விடுகின்றனர்.
ஏதோ தாங்களே எல்லாக் காரியங்களையும் செய்து இறந்தவரின் உடலை வெளியில் எடுத்து விடுவோம் என்பது போல அவர்களின் கதைகள் அமைந்திருக்கும்.
பரவாயில்லை. அந்தியாகால சேவை நிலையத்தை நடத்துகின்றவர்களின் இறை வழிபாடு என்பது அதிக வியாபாரம் நடக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.
மாறாக, அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் விடுதிகளிலும் கடமையாற்றுகின்ற ஒரு குறிப்பிட்ட சுகாதாரப் பணியாளர்கள்; அந்தியாகால சேவை நிலையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக இறப்புக ளின் தகவல்களை வழங்குவதென்பது நீதியாகாது.
தவிர, இவ்வாறு தக வல்களை வழங்குகின்றவர்கள், ஒரு நோயாளி உயிர் பிழைக்க வேண்டும் என நினைப்பார்களா? என்ற ஐயத்தையும் அது ஏற்படுத்தும்.
ஆகவே தயவுசெய்து சுகாதாரப் பணியாளர்கள் அந்தியாகால சேவையினருக்குத் தகவல் வழங்குவதை முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டும்.
அதேநேரம் சிற்றூழியர் களை மேற்பார்வை செய்கின்ற உத்தியோகத்தர்கள் சிலர் அவர்களிடம் சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் இவ்வாறு சலுகைகளை வழங்கிய சிற்றூழியர்கள் அவர்களுக்குக் கட்டுப்படாத நிலைமைகள் இருப்பதான தகவல்களும் உண்டு.
இவை சீராக்கம் செய்யப்பட வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.
ஆக, ஒட்டுமொத்தத்தில் எங்கள் தமிழினத்தின் ஒரு பெரும் சொத்தாக இருக்கின்ற யாழ்.போதனா வைத்தியசாலை மிகச் சிறப்பாக இயங்கி, எம் மக்களுக்கு அரும்பணியாற்ற வேண்டும் என்ற தாழ்மையான கோரிக்கையை இத்தரிசனத்தின் ஊடாக முன்வைக்கின்றோம்.
யாழ் .போதனா வைத்தியசாலை தரிசனம் முற்றுப்பெறுகிறது.


