தமிழினத்துக்கு நீதி கிடைக்குமா?
Share
காலணித்துவ ஆட்சியின் கீழ் அடிமையாய் இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அழகிய இலங்கைத் தீவில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழலாம்.
அழகிய வளம் பல நிறைந்த இலங்கையின் கேந்திர நிலையம் மிக முக்கியமானதென்பதால், அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாறும் என அனைவரும் எண்ணிக்கொண்டனர்.
ஏனெனில் அதுவரை இலங்கையின் வளங்கள் மொத்தத்தையும் காலணித்துவ ஆட்சியாளர்கள் அட்டைபோல உறிஞ்சிக் கொண்டிருந்தனர் என்பது நிதர்சனம். ஆயினும் காலணித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களின் ஆளுகை அதிகரிக்கத் தொடங்கியது.
இதற்கு இனவாத அரசியல் வாதிகளே மூலகாரணமாயினர். தமிழினத்தின் பூர்வீகங்களை கபளீகரம் செய்யும் செயலை மிகத் தீவிரமாகச் செயற்படுத்தினர்.
இங்குதான் சிறுபான்மைத் தமிழினம் மறுக்கப்பட்ட தனது உரிமைக்காகப் போராடத் தொடங்கியது. அறவழிப் போரின் உச்சத்தை தட்டிக்கழித்தது பெரும்பான்மைச் சிங்கள தேசம்.
பொறுமையிழந்த தமிழ் இளைஞர்கள் தமிழினத்தின் உரிமை மீட்பிற்காக ஆயுதமேந்தினர். பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.
தமிழினத்தின் உரிமை மீட்பிற்கான போரைப் பயங்கரவாத முத்திரை குத்திய பேரினவாத அரசு அவர்களை அழிக்க முற்பட்டது.
ஆயினும் அது அவர்களுக்கு சர்வசாதாரணமான விடயமாக இருக்கவில்லை. தமது இனத்தின் விடுதலைக்கான போரில் உறுதி யாகவும் தியாகத் தன்மையுடனும் போரிட்ட தமிழ் இளைஞர்களின்
கை ஓங்கும் நிலையில் இருந்ததான வரலாறுகளே அதிகமாகியிருந்தன.
இந்த நிலையிலே போரை முடிவுக்குக் கொண்டுவர முற்பட்ட ராஜபக்ஷக்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பை சல்லடை போட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு இனச் சுத்திகரிப்பையே மேற்கொண்டு முடித்தனர்.
கட்டமைப்புமிக்க, கொண்ட கொள்கையில் மாறிடாத ஒரு இனத்தின் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு இறந்த அப்பாவிகளை பயங்கரவாதிகள் என வரையறை செய்து, போர் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர் ராஜபக்ஷக்கள்.
இனிவரும் ஈழத்து இளைஞர்களுக்கு மண்பற்று, இனப்பற்று, கொள்கை கொண்ட தலைவன் பின் அணிதிரள்வது போன்ற எந்தப் பண்புகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதற்காக அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் போதை.
வடக்கு – கிழக்கின் தமிழர் பிரதேசம் முழுவதும் போதை விதைப்பு தாராளமாக்கப்பட்டது.
பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட சர்வசா தாரணமாக போதைவஸ்துக்கள் கிடைக்கும்படி அவர்களின் செயற்திட்டம் அரங்கேற்றப்பட்டது.
விளைவு, இன்று தமிழினத்தின் பிரதேசமெங்கும் போதை வேரூன்றிக் கிடக்கின்றது.
போதைக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களை மீட்டெடுக்க அவர்கள் எதையும் செய்யவில்லை.
தமிழினம் தனது சுயத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்தினால் அதனூடாக தாம் நினைத் ததைப்போல நில அபகரிப்பையும் மதப்பரம்பலையும் மேற்கொள்ளலாம் என நினைத்தவர்களின் எண்ணம் தப்புக் கணக்காகிப் போனது.
அரசாங்கங்கள் மாறினாலும் அதன் கட்டமைப்புக்கள் மாறாது என்பதையே சமீபத்திய செயற்பாடுகள் எடுத்தியம்புகின்றன.
எவரும் எதிர்பாராத ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள போதிலும் காட்சிகள் அவ்வாறே இருக்கின்றன.
ஆம், குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் நிறைந்துள்ளது. எனவே அது பௌத்தத்திற்குரியது என்றும் வெகு விரைவில் குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் புத்தசாசன அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து தையிட்டியில் நிறு வப்பட்டிருக்கும் விகாரைக்குரிய காணிகளை மீண்டும் மக்களுக்கு
வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய நிலையில் அதன் அளவீடுகள் நடைபெறுவதாக காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விகாராதிபதி பொலிஸில் முறைப்பாடளித்ததைத் தொடர்ந்து அக்காணிகளை அளவிடும் பணி பிற்போடப்பட்டுள்ளது.
தவிர, பளைப் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்கள் காணிகளை படையினரின் தேவைக்காக சுவிகரிக்கும் அறிவித்தல்கள் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
இச்செயற்பாடுகள் பார்க்கும் போது, பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து ஆட்சிப்பீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசும் தொடர்ந்து தமிழினத்துக்கு இன்னல் இழைக்கின்றதோ எனும் எண்ணம் தமிழ் மக்களிடம் மேலோங்கத் தொடங்கியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில் தேர்தலை நடத்த அரசு பின்னிற்பது பெரும் ஐயங்களை ஏற்படுத்துகின்றது.
மாகாண சபைத் தேர்தல் என்பது சிங்கள மக்களுக்கு முக்கியத்து
வமில்லாமல் இருக்கலாம். ஆயினும் மாகாண சபை ஆட்சியை தமிழினம் மானசீகமான ஆட்சியாகப் பார்க்கிறது.
வடக்கு மாகாண அரசு அமைந்தால் அதனூடாக ஒரு ஆத்ம திருப்தியைத் தமிழ் மக்கள் பெறுவார்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விட
யம்.
இவை அனைத்தையும் தாண்டி வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடந்த போர் விதி மீறல்கள் தொடர்பிலும் அதற்கான நீதி தொடர்பிலும் தமிழ் மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைகளைத் தொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையிலேயே உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழின அழிப்புடன் தொடர்புடையவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடனும் தொடர்புபட்டிருப்பதால், எது எப்படியோ விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்.
ஆக, பெரும்பான்மை ஆட்சியாளர்களை நான்கு தசாப்தங்களுக்கு மேல் நம்பி ஏமாந்த தமிழினம் இனி என்னவாகப் போகிறது என்பதே இன்றைய கேள்வி.
அபிமன்யு.


