Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

சாத்தானின் குரல்

ஒரு பெரிய கடல். அதிலே ஒரு பெரிய படகு சென்று கொண்டிருக்கிறது.

அந்தப் படகிலே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் ஒரு சாது! அதே படகிலே இன்னும் சிலபேர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் அந்த சாதுவை கேலி செய்வது – கிண்டல் செய்வது. அவர் மௌனமாக உட்கார்ந்திருக்கின்ற போது ஆ ஊ என்று சத்தம் போடுவது.

இப்படியே வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொந்தரவைப் பற்றியெல்லாம் அந்தப் பெரியவர் கவலைப்படவில்லை. அவர் பாட்டுக்குப் பொறுமையாக வந்துகொண்டிருக்கிறார்.

இருட்டிப் போனது. அந்தப் பெரியவர் கண்ணை மூடிக்கொண்டு தியானத்திலே இருந்தார். இதைப் பார்த்துவிட்டு ஒருவன் சொன்னான்.

“டேய்…இந்த சாது இப்போது தியானத்திலே இருக்கிறார். இதுதான் நாம் வம்பு வளர்க்கிறதுக்குச் சரியான நேரம்” என்றான்.

“ஆமாம்டா!” என்றான் இன்னொருத்தன்.

உடனே எல்லோரும் அவரைப் பற்றி கிண்டல் செய்து கன்னா பின்னா என்று பேச ஆரம்பித்தார்கள். அவர் கவனம் திரும்பவே இல்லை.

கீழே கிடந்ததையெல்லாம் எடுத்து அவர் மேலே போட்டுவிட்டுப்பார்த்தார்கள். அப்போதும் அவர் அசையவில்லை.

ஒருவன் கீழே கிடந்த ஒரு காலணியை எடுத்து அவர் தலையிலே அடித்தான்.

அப்போதும் அந்தச் சாது தியானத்திலேயே இருந்தார்.அவர் முகம் அன்பாகவே இருந்தது.

இந்த சமயத்திலே ஆகாயத்திலே இருந்து ஒரு குரல் – அதாவது அசரீரி! அந்தக் குரல் சொல்லியது: “என்னுடைய அன்புக்குரியவனே. நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விட்டு விடுகிறேன்!” என்றது.

இப்போதும் அந்தச் சாதுவுடைய தியானம் கலையவில்லை! ஆனால் அவரை கேலி செய்தவர்களும் அடித்தவர்களும் இந்தக் குரலைக் கேட்டுப் பயந்து விட்டார்கள்.

இந்தச் சாது சரி என்று சொன்னால் இந்தப் படகையே கவிழ்த்து விட்டு விடுகிறேன் என்றதே அந்த அசரீரி! இவர் சரி என்று சொல்லி விட்டால் நம் கதி என்ன ஆவது? என்று யோசித்துப் பார்த்தார்கள்.

விளையாட்டு வினையாக முடிந்து விடும் போல இருக்கிறதே என்று நினைத்து பயந்து போய்விட்டார்கள். உடனே எல்லோரும் அந்தப் பெரியவர் காலிலே விழுந்தார்கள் பொத்து என்று! “ஐயா… எங்களை மன்னித்து விடுங்கள்.

ஏதோ தெரியாமல் தவறு செய்துவிட்டோம்!” என்றார்கள்.

சாதுவுடைய தியானம் முடிந்தது.

மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தார். சுற்றி பயந்த முகத்தோடு மனிதர்கள்! உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. அவர்களைப் பார்த்து அந்தப் பெரியவர் – ‘கவலைப்படாதீர்கள்” என்றார். அவர்களை அமைதிப்படுத்தினார்.

அதன்பின் நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தார். வானத்தை நோக்கி கைகளை உயர்த்தினார். “என்னுடைய அன்பான கடவுளே! நீ எதற்காக சாத்தானின் மொழியிலே பேசுகிறாய் நீ கவிழ்த்து விளையாட வேண்டும் என்று நினைத்தால் அதற்காக இந்தப் படகைக் கவிழ்க்க வேண்டாம்.

நீ புரட்டித் திருப்ப வேண்டியது இந்தப் படகை இல்லை. இந்த மனிதர்களுடைய புத்தியை! புத்தியைத் திருப்பாமல் படகைத் திருப்புவதிலே என்ன பிரயோஜனம்?” என்றார்.

உடனே ஆகாயத்திலேயிருந்து பதில் வந்தது.

“என் அன்புக்குரியவனே. நான் ரொம்பவும் மகிழ்ச்சியடைகிறேன். நீ சரியான உண்மையைப் புரிந்துகொண்டாய்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒலித்தது என்னுடைய குரல் அல்ல.

அது சாத்தானின் குரல் எவன் ஒருவன் சாத்தானின் குரலைப் புரிந்துகொள்ள முடியுமோ அவன் மட்டுமே என்னுடைய குரலையும் புரிந்துகொள்ள முடியும்!” என்றது அந்தக் குரல்! இது ஒரு பெரியவர் (ஓஷோ) சொன்ன கதை.

சில சமயம் நமக்கு நல்லது செய்வது மாதிரி சிலபேர் புத்தி சொல்லுவார்கள் யோசனை சொல்லுவார்கள். அது சாத்தானின் குரல், அதுபடி நடந்தால் நாம் வம்பிலே மாட்டிக்கொள்வோம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒருநாள் இரவு கடவுளே எனக்கு ஒரு வரம் கொடு என்று வேண்டிக்கொண்டான் ஒருவன்.

உடனேஆகாயத்திலேயிருந்து “என்ன வேண்டும் என்று கேள்!” என்றது ஒரு குரல்.

“ஊருக்குப் போயிருக்கின்ற என் மனைவி நாளைக்கு திரும்பி வருவதாக லெட்டர் போட்டிருக்கிறாள். தயவு செய்து அவள் நாளைக்கு இங்கே வராதபடி செய்துவிட வேண்டும்! அவ்வளவுதான்!” என்றான்.

“அவ்வளவுதானே… கலைப்படாதே! நாளைக்கு நிச்சயமாக அவள் இங்கே வரமாட்டாள்! ஏன்னென்றால் இன்றைக்கே வந்துவிட்டாள்!”

என்று குரலை மாற்றிப் பேசிக்கொண்டே மாடியிலேயிருந்து இறங்கி வந்தார் அந்த அம்மா?

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link