இன்று ஒரு தகவல்
Share
நீதி விசாரணை
மனுநீதிசோழன் வரலாறு நமக்குத் தெரியும். அது மாதிரி நீதி தவறாத ஆட்சியாளர்கள் பலபேர் இருந்திருக்கிறார்கள் இந்த உலகத்திலே!
ஹஸரத் உமர்பின் கத்தாப் (ரலி) என்று ஒருத்தர். இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா இவர். அவருடைய ஆட்சிக் காலத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சி.
அந்த மன்னருக்கு ஒரு மகன். அவர் பெயர்அபூ ஷஹ்மா. அந்த மிசர் நாட்டு கவர்னர் அமர்பின் ஆஸ் (ரலி). அந்த மன்னருடைய மகன் கவர்னர் அவர்களுடைய கவனிப்புலே இருந்தார்.
அந்த சமயத்திலே ஒருநாள் அவர் மதுபானம் அருந்தினார். கவர்னருக்கு இது தெரிந்து விட்டது. என்ன செய்வது? அவருக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு.
தவறு செய்தது மன்னருடைய மகன். கவர்னர் யோசனை செய்தார். அவரை மெதுவாக தன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். அதிகமாக அவரைக் கஷ்டப்படுத்தாமல் ஒரு சிறு தண்டனையை கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்.
ஏதோ பேருக்கு ஒரு தண்டனை அவ்வளவுதான்.
இது நடந்து கொஞ்ச நாட்கள் கழிந்தன. மன்னருக்கு இந்த விடயம் தெரிய வந்தது. தன்னுடைய மகன் என்பதனாலேயே கவர்னர் லேசான தண்டனையோடு விட்டுவிட்டார் என்பதனை புரிந்து கொண்டார்.
உடனே கவர்னருக்குத் தகவல் அனுப்பினார். ‘அமர்பின் ஆஸ் அவர்களே! என்னுடைய மகன் மதுபானம் அருந்தியிருக்கிறான். அது உங்களுக்குத் தெரிந்தவுடனே தண்டனை கொடுத்திருக்கின்றீர்கள்.
கலீபாவின் மகன் என்கின்ற காரணத்தினாலே குறைவான தண்டணையைக் கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். இது ஷரீஅத்தின்படி மாபெரும் குற்றம். உங்களுடைய நடத்தையும் மன்னிக்கக் கூடியதல்ல.
இந்தக் கடிதம் கிடைத்தவுடனேயே மகன் ஆபூஷஹ்மாவை மதீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கடிதம் எழுதினார்.
அதைப் பார்த்தார் கவர்னர். உடனே கலிபாவின் மகனை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார். மன்னர் முன்னாலே நீதி விசாரணை நடந்தது. அதன்படி தன்னுடைய மகனுக்கு சவுக்கடி வழங்கும் படியாக உத்தரவிட்டார் ஹஜரத் உமர் கத்தாப். தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கூடியிருந்தவங்கள் எல்லாம் ஐயா கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்று சொல்லி மன்னரிடம் வேண்டிக்கொண்டார்கள. அந்த வேண்டுகோளை மன்னர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் சொன்னார்: “நீதியின் முன்னால் தந்தை – மகன் – அன்பு – நேசம் – உறவு முறைகளையெல்லாம் கவனிக்க முடியாது.
குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டியவர்! அவர் யாரா இருந்தாலும் சரி!” என்றார். எல்லா ஆட்சியாளர்களுமே கவனிக்க வேண்டிய ஒரு செய்தி இது.
அவர் ஒரு நாள் தன்னுடைய அரசாங்க கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்திலே அவரைப் பார்க்க ஒரு பெரிய மனிதர் வந்தார்.
இவர் தன்னுடைய சொந்த வேலை காரணமாக வந்திருக்கிறார் என்பதனை அவர் புரிந்துகொண்டார். உடனே அதுவரைக்கும் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டு இன்னொரு விளக்கை ஏற்றி வைத்தார்.
இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்று கேட்டிருக்கிறார் வந்தவர். இதற்கு அவர் சொன்னார்.
ஐயா! நீங்கள் வந்தபோது இங்கே எரிந்துகொண்டிருந்தது அரசாங்க விளக்கு. இப்போது எரிவது சொந்த விளக்கு.
சொந்த விடயங்களைப் பேசுகின்றபோது அரசாங்கப் பணத்தை செலவு செய்யக்கூடாது இல்லையா. அதனாலேதான் விளக்கை மாற்றினேன் என்றார்.
இப்படியெல்லாம் பலபேர் இந்த உலகத்திலே இருந்திருக்கார்கள். ஆனால் இப்போதெல்லாம் பலபேர் அப்படி இருக்கிறதில்லை! இப்போதும் ஒருத்தர் அப்படித்தான் அரசாங்க விடயங்களைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அந்த சமயத்திலே ஒரு பெரிய தொழிலதிபர் அவரைப் பார்க்க வந்தார். இவரு சடார்ன்னு எழுந்திருச்சு எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டார். எங்கும் ஒரே இருட்டு.
“ஏன் விளக்கை அணைத்தீர்கள்?” என்று கேட்டார் வந்தவர்.
இங்கே நடக்கறது மற்றவர்கள் கண்ணிலே பட்டுவிடக்கூடாது. அதனாலே தான் விளக்கை அணைத்தேன். நீங்கள் கொண்டுவந்திருப்பதை அப்படி ஒரு ஓரமாக வைத்துவிட்டுப் போய்விடுங்கள். அதுக்கப்புறமா விளக்கைப் போட்டுக்கிறேன்!” என்றார் இவர்.
தென்கச்சி.கோ. சுவாமிநாதன்


