Type to search

Editorial

காங்கிரஸை இணைப்பது நடிகர் விஜய்க்கு நல்லதல்ல

Share

தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் நேற்று (07) பதவியேற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சராக நடிகர் விஜய் இன்று பதவியேற்ற கையோடு தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதை சட்டசபையில் நிரூபிக்கின்ற கடமையை நிறைவேற்ற வேண்டும்.

எனினும் காலப்பிழை போல 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு இன்னும் 12 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

இங்குதான் ஓர் இக்கட்டான சூழ்நிலைக்கு நடிகர் விஜய் தள்ளப்படுகிறார்.

ஆம், தனக்குத் தேவையான 12 ஆசனங் களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏனைய கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையுள்ளது.

அதேநேரம் இந்திய காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு வழங்க முண்டியடிக்கும் என்பது தெரிந்த விடயம்.

அதேநேரம் நடிகர் விஜய் காங்கிரஸின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப் பற்றுவதைப் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி ஒருபோதும் விரும்ப மாட்டாது.

தவிர, காங்கிரஸுடன் விஜய் கூட்டுச் சேர்வதாக இருந்தால், ஈழத் தமிழர்களின் நலன் தொடர்பில் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதென்பது நிறுதிட்டமான உண்மை.

ஆக, காங்கிரஸுடன் கூட்டுச்சேர்ந்து தமிழகத்தின் ஆட்சியை நடத்துவதென விஜய் முடிவு செய்வாராயின், அது மிகப்பெரிய அபத்தமாகவே முடியும்.

ஆம், பல வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகமும் இந்திய காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப் பரப்பில் கொடும் போர் நடந்தபோது, காங்கிர ஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டுச் சேர்ந்து மத்தியிலும் தமிழக மாநிலத்திலும் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன.

கொடும் போர் வன்னியில் நடந்தபோது – சிங்களப் பேரினவாதத்தால் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது – தமிழின அழிப்பு நடந்தபோது – முட்கம்பி வேலிக்குள் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அடைக் கப்பட்டபோது அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மெளனம் காத்தார்.

உண்ணாவிரதம் என்றொரு நாடகத்தை அவர் அரங்கேற்றியிருந்தாலும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள் என காங்கிரஸ் அரசிடம் கேட்கின்ற திராணி கலைஞர் கருணா நிதியிடம் இருக்கவில்லை.

சுருங்கக்கூறின் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இப்போது சரிந்து விழுவதற்கு காங்கிரஸ் கட்சியே மூலகாரணம் எனலாம்.

இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டுச் சேருமாயின் அது விஜயின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக முடியும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link