Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

மனமும் சிந்தனையும்

ஒருத்தரைப் பார்த்து, உன்னுடைய நண்பர்கள் யார்? என்று ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள்.

கொஞ்சம் யோசித்து யோசித்து பதில் சொல்லுவார். அவரிடம் உன்னுடைய எதிரிகள் யார்? என்று கேளுங்கள். கட கட என்று ஒப்பிப்பார்.

நம்ம மனது இருக்கே. அது எப்படின்னா. நம்ம நண்பர்களைவிட எதிரிகளை அது நல்லா நினைவிலே வைத்திருக்கும்.

இது ஒரு ஆச்சரியமான உண்மை. உங்களாலே நண்பர்களை மறந்துவிட முடியும்.

ஆனால் எதிரிகளை மறந்துவிட முடியாது. இது ஒரு வேடிக்கையான நிலைதான்.

அழகான தருணங்களை நாம் ஏன் மறந்துவிடுகிறோம்? இது இயற்கை. நம்ம மனம் மலர்களை கவனிப்பதில்லை, முட்களைத் தான் கவனிக்கிறது.

தன்னைக் காயப்படுத்துகிற எதையும் அது உடனே கண்டு கொள்கின்றது.

ஒரு தெளிந்த சிந்தனையுடைய மனம் மிக அழகாக உள்ள எல்லாத்தையும் கவனிக்கும்.

தான் நன்றியுடன் உணரக்கூடிய எல்லாவற்றையும் பார்த்துக் குறித்துக் கொள்ளும். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை இயல்பாகவே நன்றாக அமையும்.

மனதிலே உள்ள ஒரு சிறிய அமைப்பை மாற்றுவதைப் பொறுத்ததுதான் இந்த விடயம் அப்படி என்கிறார் ஓஷோ.

ஒரு யூதக் கோயில் இருந்ததாம். அது யூதர்களின் மடமாவும் இருந்தது. அங்கே ஒரு தலைமைக் குரு அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அந்தக் கோவிலை ஒட்டி ஒரு தோட்டம்.

ஒரு நாள் காலையிலே அந்தத் தோட்டத்திலே இரண்டு இளம் யூதர்கள் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். காலையிலே ஒரு மணி நேரம், மாலையிலே ஒரு மணி நேரம் அவங்க அந்த தோட்டத்திலே நடக்க அனுமதி உண்டு.

மற்ற நேரங்களிலே அவர்கள் மத புத்தகங்களைப் படிக்க வேண்டும். பிற விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த இரண்டு பேருமே தொடர்ந்து புகைப்பிடிக்கற பழக்கம் உள்ளவர்கள். ஆனால் கோயில் மடத்திலே இருக்கும்போது அவர்கள் புகைப்பிடிக்க முடியாது. அது கடுமையான குற்றம்.

சரி. நாம் தோட்டத்திலே இருக்கும்போதாவது புகை பிடிக்கலாமே என்று ஒரு ஆசை அவங்க இரண்டு பேருக்குமே! இருந்தாலும் பயம்! இப்படிக் கேட்டால் மதகுரு என்ன செய்வாரோ என்கின்ற பயம்.

இப்படிக் கொஞ்ச நாள் ஆகிவிட்டது. ஒரு நாள் அந்த இரண்டு பேரிலே ஒருத்தன் ரொம்பக் கலங்கிப்போய் அந்தக் கோயிலிலே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

வந்தவன் நேராக தோட்டத்துப் பக்கம் போனான். அங்கே – இன்னொருத்தன் ஆனந்தமாக புகைப் பிடித்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் இவனுக்கு அதிர்ச்சி. அடக்கடவுளே! என்னஇது. நீ கேட்காமலே ஆரம்பித்து விட்டாயா? என்றான்.

இல்லையே. நான் கேட்டு விட்டேன்! என்றான் அவன்.

அப்படியா! என்ன மனிதன் இவர். நானும்தான் கேட்டேன். என்னை கன்னா பின்னான்னு திட்டிவிட்டார். இது என்ன கோயிலா? நரகமா? உனக்குப் புகைப்பிடிக்கணும் என்று ஆசையாக இருந்தால் நரகத்துக்குப் போ! என்றார்.

அதுசரி உன்னை மட்டும் எப்படி அனுமதித்தார்!” என்று கேட்டான் இவன். அவன் சிரித்துக்கொண்டே நீ எப்படி கேட்டாய் என்று சொல் என்றார். நாம் இந்தத் தோட்டத்துக்கு வர அனுமதிக்கப்பட்டிருக்கிறதே ஜெபத்துக்காகத் தானே.

அதனாலே நான் ஜெபம் சொல்லும் போது புகைப்பிடிக்கலாம்?” -என்று சும்மா கேட்டேன். அதுக்குத்தான் அவர் சத்தம் போட்டு என்னை அடிக்கவே வந்துவிட்டார்!” – அப்படி என்றான் இவன்.

நீ ஒரு மாதிரியாக கேட்டிருக்கிறாய்.நான் வேறு மாதிரியாக கேட்டிருக்கேன். ‘ஜெபம் சொல்லும் போது கைப்பிடிக்கலாமா? என்று நீ கேட்டிருக்கிறாய். “ஐயா! புகைப்பிடிக்கும் போது ஜெபிக்கலாமா?” என்று நான் கேட்டேன். அதிலே தவறேதும் இல்லை என்று பதில் சொன்னார்!” என்றான்.

ஒரு சிறிய மாற்றம் தான். அது மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி விட்டது.

மனது நல்ல விதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இல்லை.

ஒரு கஞ்சன் ஆற்றிலே விழுந்துவிட்டான். வெள்ளத்திலே தத்தளிச்சுக் கொண்டிருந்தான். கரையிலே நின்ற ஒருத்தர் உன் கையை கொண்டா இப்படி, பிடித்து இழுத்து கரையிலே சேர்த்துவிடுகிறேன் என்றார்.

எதையும் கொடுத்துப் பழக்கமில்லாத அவன் கையையும் கொடுக்க மாட்டேன் என்று விட்டான்.

இவர் பார்த்தார்.உன் கையைக்கொடு என்று சொல்வதற்குப் பதிலாக நான் என் கையைக் கொடுக்கிறேன் பிடிச்சுக்கோ!”என்றார் கப் என்று பிடித்துக்கொண்டான். இழுத்துக் கரையிலே போட்டுவிட்டார்.

தென்கச்சி.கோ. சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link