இன்று ஒரு தகவல்
Share
எடையற்ற நிலை
“எடையைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம்” என்று கேட்டார் ஒருவர்.
“இது என்ன பெரிய விடயம் பேசாமல் புறப்பட்டு மேலே ஆகாயத்துக்குப் போய் விடுங்கள்! அங்கே போனால் உங்கள் எடை குறைந்துவிடும்!” என்றார் இன்னொருவர்,
இவர் வேடிக்கையாக இப்படி சொன்னாலும் கூட அவர் அப்படி சொன்னதிலே ஒன்றும் தவறு இல்லை.
இப்போது நாம் கூட ஆகாயத்துக்குப் புறப்பட்டுப் போனால் நம் எடை குறைந்துவிடும்.
ஒரு கட்டத்திலே நமக்கு எடையே இருக்காது, அந்தரத்திலே மிதக்க ஆரம்பித்து விடுவோம். விண்வெளியிலே ஏற்படுகின்ற இந்த நிலைமையை எடையற்ற நிலை என்று சொல்கிறார்கள்.
விண்வெளிக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படும் எல்லோருக்கும் இங்கேயே அது மாதிரி ஒரு ‘எடையற்ற நிலை”யை உண்டாக்கி பயிற்சி கொடுக்கிறார்கள்.
மைக் ரோஜர்ஸ் என்று ஒருவர். 64 வயது. இரண்டாவது உலக யுத்தத்திலே இடது காலை இழந்தவர். இந்த வயதிலே இந்த நிலையிலே அவருக்கு விண்வெளியிலே பிரயாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது.
வழக்கமாக எல்லோரும் அந்த வயதிலே மேலே போவதற்கு வழி என்ன என்றுதான் கவலையோடு காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர், அதனாலேதான் இப்படி ஆசைப்பட்டார். உடனே ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு விண்ணப்பம் போட்டார்.
அந்த அமைப்பும் சரி என்று ஒத்துக்கொண்டது.
உடனே இவருக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தது. அந்த பயிற்சி பிரான்ஸிலே நடக்கிறது. அது எப்படி என்றால்.
விண்வெளிக்குப் பிரயாணம் செய்பவர்கள் அங்கே போய் சேர்ந்த உடனே எடை இல்லாமல் போய்விடுகிறது இல்லையா? அதே மாதிரி ஒரு எடையற்ற நிலையை ஒரு விமானத்துக்குள்ளேயே உண்டாக்குகிறார்கள்.
அந்த விமானம் ஒரு தடவை மேலே கிளம்பியது என்றால் மேல்நோக்கிப் பாய்வதும் -கீழ் நோக்கிப் பாய்வதுமாக சுமாராக 2 1/2 மணி நேரம் பறக்குமாம். அந்த சமயத்திலே அது 40 தடவை கீழ்நோக்கிப் பாயுமாம். அதாவது அந்த விமானத்துக்குள்ளே இருக்கிறவர். ஒவ்வொரு தடவையும் 20 வினாடி விதமாக 40 தடவை எடையற்ற நிலைக்கு வந்துவிடுகிறாராம்.
நம் முதியவர் மைக்ரோஜர்ஸ் ஏறிப்போன விமானம் இது மாதிரி 30 தடவை எடையற்ற நிலையை உண்டாக்கியதாம்! இதிலே இன்னொரு அவஸ்தை உண்டு.
விமானம் வேகமாக மேலே போகும்போது உடம்பு எடை அளவுக்கு மீறி தெரியும். இந்த எடை அதிகரிப்பு அவஸ்தயை அனுபவித்ததற்கு பிறகுதான் ‘எடையில்லாத” சுகத்தை அனுபவிக்க முடியும்.
மேலே போய்விட்டு வந்த அந்த பெரியவர் தன்னுடைய அனுபவத்தை விபரமாக சொல்லி இருக்கிறார்.
தாடையை மார்பிலே பதித்தவாறு அவரை படுக்க வைத்திருந்தார்களாம்.
விமானம் வேகமாக மேலே போகும்போது அவருக்கு அவர் தலையோட எடை இரண்டு மடங்கு அதிகமாகப் போனது மாதிரி தெரிந்ததாம். மார்பிலே இருந்த கமரா ஏதோ ஒரு பாறாங் கல்லை தூக்கி வைத்தது மாதிரி அழுத்திச்சாம்!
ஆனால் விமானம் வேகமாக கீழே இறங்குகின்றப்போது. அவர் அவருடைய ஆசனத்திலே இல்லையாம். மேலே கிளம்பி அந்தரத்திலே மிதக்க ஆரம்பித்து விட்டராம்.
காலை லேசா உதைத்திருக்கிறார். உடனே பந்து மாதிரி இன்னும் கொஞ்சம் மேலே எழும்பினாராம். அவரோட கமராவும் அந்தரத்துலே மிதந்ததாம்.
அவர் பையிலே இருந்த பேனா வெளியே கிளம்பி அவருடைய மூக்குக்கு நேரா மிதந்து வேடிக்கை காட்டியதாம். “எடையற்ற நிலையிலே இருந்தப்போது எனக்கு ஒரு செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருக்கு என்பதையே நான் உணரவில்லை!” என்கிறார் அவர்.
சாதாரணமாக விமானத்திலே செல்பவர்களே இந்த எடையற்ற நிலையை ஓரளவுக்கு உணர முடியும்.
பொருட்காட்சியிலே ரங்கராட்டினத்திலே ஏறி சுற்றிப் பார்த்தாலும் இது தெரியும். மேலே எழும்பும்போது நம் உடம்பு எடை கூடினது மாதிரி தெரியும் – கீழே அழுத்தும். கீழே இறங்கும் போது உடம்பு எடை லேசானது மாதிரி தெரியும்! விண்வெளிப் பயணத்திலே இந்த ‘எடையற்ற நிலை” என்பது ஒரு முக்கியமான விடயம்!
‘அதெல்லாம் சரி..! அதை ஏன் வேலை மெனக்கெட்டு இந்த நேரத்திலே சொல்லிக்கொண்டிருக்க!” என்று நீங்கள் கேட்கலாம்.
வருங்காலத்திலே விண்வெளிப் பயணம் ரொம்ப சர்வசாதாரணமாக ஆகிவிடலாம்.
நாமும் அடிக்கடி போய்விட்டு வர வேண்டிய அவசியம் வந்தாலும் வருமே! அதனாலே தான்.
இருந்தாலும் ‘எடையற்ற நிலை” என்பதைவிட இருக்கின்ற எடையை குறைக்கிறது எப்படி என்பதுதான் நம்மிலே பலபேருடைய கவலை!
வெயிட்டைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம்?என்று யோசனை கேட்டார் ஒருவர்.
“தினமும் குதிரை சவாரி செய்யுங்களேன்!” என்றார் ஒரு டாக்டர். ஆறு மாதம் குதிரை சவாரி செய்தார் இவர்.
அதன்பின்பு டாக்டரிடம் போனார். “எவ்வளவு எடை குறைஞ்சிருக்கு?” என்று கேட்டார் அவர். “15 கிலோ குறைந்திருக்கு டாக்டர்!” என்றார். “உங்களுக்கா?” என்றார்.
“இல்லை. குதிரைக்கு” என்றார் அவர்.
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்


