இன்று ஒரு தகவல்
Share
அளவும் அனுசரிப்பும்
ஒரு ஊரிலே ஒரு ஆள் இருந்தான். தையல் கடை வைத்திருந்தான்.
அவனிடம் ஒருவன் ஒரு சட்டைத் துணி எடுத்துக் கொடுத்து தைக்கச் சொல்லியிருந்தான்.
“வரும் சனிக்கிழமை வா. வந்து வாங்கிக்கொண்டுப் போ!” என்று அவன் சொல்லியிருந்தான்.
அதே மாதிரி இவன் வந்தான். அவன் தைத்து வைத்திருந்த சட்டையைக் கொடுத்தான். இவன் வாங்கி அங்கேயே போட்டுப் பார்த்தான். கை நீளம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தது. வலது கை இடது பக்கத்தைவிட நீளம் குறைவாக இருந்தது.அவன் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டான். “என்ன இது இப்படி தைத்துவிட்டியே!” என்று!
இதற்கு அவன் சொன்னான்! “ஐயோ… இதற்காகவோ சங்கடப்படுகிறீர்கள்? வலது கையை மட்டும் கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் சரியாகப் போகிறது! மற்றபடி அந்தச் சட்டையிலே உள்ள கலையம்சத்தை கவனியுங் கள்.
எவ்வளவு அற்புதமாக தைத்திருக்கிறேன் பாருங்கள். ஒரு சின்ன குறையை பொருட்படுத்தாதீர்கள். நான் சொன்னது மாதிரி கையை கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக்கொண்டு நடந்து போங்கள் ஜோரா இருக்கும்!” என்றான்.
அவனும் யோசித்துப் பார்த்தான் சரியான யோசனையாக தோன்றியது. கொஞ்சம் முயற்சி செய்து வலது கையை உள்ளே இழுத்து சட்டை சரியாக இருக்கின்ற மாதிரி செய்து கொண்டான்.
இப்போது மறுபடியும் ஒரு பிரச்சினை.
வலது கையை உள்ளே இழுத்த மாதிரி வைத்துக் கொண்டதும் முதுகுப் பக்கம் கொஞ்சம் துணி தளர்த்தித் தொங்குவது மாதிரி இருந்தது!
“என்ன இது. முதுகுப் பக்கம் துணி குவிந்து விட்டதே!” என்றான். அவன் மறுபடியும் ஆரம்பித்தான்.
“இதற்காகவா கவலைப்படுகிறாய்? உடம்பை அதற்குத் தகுந்தமாதிரி கொஞ்சம் வளைத்துக்கொண்டால் சரியாகப் போய்விடும்.
இதற்காக அந்த அழகான தையலைப் பிரித்து அதிலே உள்ள கலையம்சத்தை கெடுக்க என் மனது இடம் தரவில்லை! எவ்வளவுக்கு தளர்த்தியாக இருக்கோ அவ்வளவுக்கும் கொஞ்சம் உடம்பை வளைத்துக் கொடு போதும்!” என்றான்.
அதுவும் நல்ல யோசனையாகப் பட்டது இவனுக்கு!
சரி என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். தெருவிலே இறங்கினார். கையைக் கொஞ்சம் உள்ளே இழுத்தான்.
உடம்பைக் கொஞ்சம் வளைத்துக்கொண்டான். சட்டைக்குத் தகுந்த மாதிரி செய்து கொண்டான். மெதுவாக நடந்து போனார்.
இப்போது எதிரிலே இன்னொருவன் வந்தான்.
இவனைப் பார்த்தான். இவன் போட்டிருக்கின்ற சட்டையைப் பார்த்தான். “ஆஹா! அற்புதம்!” என்றான்.
“சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயமாக இது. இந்த ஊர் மேல்த் தெருவிலே ஒருவன் இருக்கானே அவன் தைத்ததாகத்தான் இருக்க வேண்டும்!” என்றான்.
இதைக் கேட்டதும் அவனுக்கு ஆச்சரியம்.
எப்படி அவ்வளவு ‘கரெக்டா” சொன்னீர்கள்?” என்று கேட்டான்.
இதற்கு அந்த வழிப்போக்கன் சொன்னான்:
“அவன் ரொம்பப் கெட்டிக்காரன். உங்களை மாதிரி உடம்பும் கையும் வளைந்துபோன ஒரு ஆளுக்கு அவனைத் தவிர வேறு யாராலேயும் இவ்வளவு பொருத்தமான சட்டையைத் தைக்க முடியாது!” என்றான்.
பாருங்கள்… அவனுக்காக இவன் அனுசரிக்கப் போய் இவனுடைய நிலைமை எப்படி ஆனது பாருங்கள்!
இதே மாதிரிதான் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்மை கோமாளியாக ஆக்கிவிட்டுவிடும்.
எதுவாய் இருந்தாலும் அதிலே அறிவுப்பூர்வமான அணுகுமுறை அவசியம்.
ஒரு நர்ஸ் அவசரமாக ஓடிவந்து டாக்டரிடம் சொல்லியதாம்!
“டாக்டர்! ஒரு தவறு நடந்து போனது! பத்தாம் நம்பர் பெட்டிலே இருக்கின்ற பேஷண்ட்டுக்கு காலிலே ஆப்ரேஷன் செய்வதற்குப் பதிலாக கையிலே ஆப்ரேஷன் செய்துவிட்டார்கள்!
கை ஆப்ரேஷன் செய்ய வேண்டிய ஆள் ஏழாம் நம்பர் பெட்டிலே இருக்கிறார்!” என்றதாம்.
அதற்கு இவர் பதற்றப்படாமல் சொன்னாராம்:“பரவாயில்லை! இவரைத் தூக்கி ஏழாம் நம்பர் பெட்டிலே போட்டுவிடு!” என்றாராம்.
தென்கச்சி கோ.சுவாமிநாதன்


