Type to search

Articles ஆலடி மாநாடு

ஆலடி மாநாடு

Share

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்துநின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார்.

இலங்கை நிர்வாக சேவையில் அதி உயர்பதவிகளை வகித்தவரும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பரம்பரை அறங்காவலருமாகிய கந்தசாமி பரமலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார்.

நேர்மையான நிர்வாக சேவையை வழங்கிய பரமலிங்கம் அவர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக்கூற,அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து வாத்தியார் வைத்திலிங்கம் எழுந்தார்.

நம் அரசியல் புலத்தில் ஆழ்ந்த அறிவுடைமையும் கருத்துரைக்கும் ஆற்றலும் கொண்ட அப்பாத்துரை குமாரவேலு அவர்கள் கடந்த 12.04.2026 இல் காலமானார்.

சான்றாண்மை மிக்க மாணவர்களை உருவாக்கிய குமாரவேலு அவர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக் கூற, மீண்டும் அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து ஆலடி யில் அமைதி நிலவியது.

அமைதியைக் குலைக்க விதானையார் விசுவலிங்கம் குரல் கொடுத்தார்.

விதானையார்:- 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாக இருக்குது.

எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தத்தம் பாடத்துறை சார்ந்து, உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களை வழிப்படுத்த வேணும்.

பொதுவில சிங்கள மாணவர்களுக்கு சிங்களப் பேராசிரியர்கள் பாடரீதியான கருத் தரங்குகளை நடத்தி, அந்த மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்துகினம்.

அதுபோல, முஸ்லிம் சமூகம் சிங்களப் பேராசிரியர்களை அழைத்து தங்கட மாணவர்களுக்கு பாடரீதியான கருத்தரங்குகளை நடத்துவதில் அதீத ஆர்வத்துடன் செயற்படுகின்றது.

இதன் காரணமாக சிங்கள-முஸ்லிம் மாணவர்கள் உயர்தரத்தில் அதிசிறந்த பெறுபே றுகளைப் பெற்றுக் கொள்ளுகினம்.ஆனால் எங்கட தமிழ் மாணவர்களுக்கு அவ்வாறான கருத்தரங்குகள் கிடைப்பதில்லை.

எனவே இது விடயத்தில எங்கட யாழ்ப் பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் அதீத கவனம் செலுத்தி மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.

இது விடயத்தில யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்தர மாணவர்களுக்குப் பரீட்சை வழிகாட் டல் கருத்தரங்குகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

இதுபோல ஏனைய பீடங்களும் தத்தம் பாட த்துறை சார்ந்து உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடத்த வேணும்.

சிறாப்பர்:- விதானையார் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறன்.

உயர்தரப் பாடத்தில சில கருத்தரங்குகளை அந்தந்தக் கல்வி வலயங்கள் யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அழைத்து நடத்துகின்றன.

இவ்வாறு செய்வதால் மாணவர்கள் நன்மை அடைகினம்.

கடந்த 2025 ஆம் ஆண்டு, கணக்கியல் பாடம் சார்ந்து துறைசார் பேராசிரியர்களை அழைத்து வடமராட்சி கல்வி வலயம் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை நடத்தியது.

ஆனால், யாழ்ப்பாணக் கல்வி வலயம் அதைச் செய்யவில்லை. எனவே அனைத்துக் கல்வி வலயங்களும் துறை சார்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அழைத்து, உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகளை நட த்த வேணும்.

இதனை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கட்டாயப்படுத்தி உயர்தரத்தில் அனைத் துப் பாடங்களுக்கும் செயலமர்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது அவசியம்.

அப்போது தான் எங்கள் பிள்ளைகளும் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறமுடியும்.

கங்காணி:- ஓ! மாணவர்கள் கற்பதற்கு நாம் அனைவரும் உதவி செய்ய வேணும்.

அண்மையில யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில உள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தில மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆய்வுப் பரிசோதனைகளைச் செய்துள்ளனர்.

உண்மையில யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியின்ர இந்த முன்மாதிரியைப் பாராட்டத்தான் வேணும்.

எங்கட கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்கு எங்கட யாழ்ப் பாணச் சமுகம் கல்வி சார்ந்து ஏதேனும் உதவி செய்ததா? என்ற கேள் விக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆற்றும் சேவை நல்லதொரு பதிலாக அமையும்.

எங்கட தமிழ் மாணவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்ர ஆய்வுகூடத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுத்து எங்கட தமிழ் மாணவர்களுக்குப் பேருதவி புரிந்த யாழ்.இந்துக்கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட கல்லூரிச் சமூகத்தைப் பாராட்டத் தான் வேணும்.

சாத்திரியார்:- சொன்னாப் போல திருநெல்வேலிச் சந்தியில வீதிச் சமிக்ஞை உள்ள இடத் தில பயணிகள் தரித்து நிற்கிற நேரத்தில, வெயில் படாமல் இருக்கும் பொருட்டு நல்லூர்ப் பிரதேச சபை நிழல் படங்குகளைக் கட்டியிருப்பது உண்மையில பாராட்டப்பட வேண்டிய விடயம்.

இதுபோல வீதிச் சமிக்ஞை விளக்குகள் உள்ள இடங்களில இந்த வெயில்நேரத்தில, இப்படியான நிழல் படங்குகளைப் பொருத்துவது பொது மக்களுக்கு மிகுந்த நன்மை தருவதாக இருக்கும்.

இவ்வாறு சாத்திரியார் கூற, அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டா மணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link