Type to search

Articles ஆலடி மாநாடு

ஆலடி மாநாடு

Share

பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை வையுங்கள்

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதம பொது சுகாதாரப் பரிசோதகராக இருந்த பொ.சிவப்பிரகாசம் அவர்கள் காலமாகிவிட்டார்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் அவர்கள் கொழும்புத்துறை பிள்ளையார் கோவில் பரிபாலன சபையின் தலைவராக இருந்தவர்.

இது தவிர, சைவ சமயம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதியதுடன் அவற்றின் தொகுப்பாக புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார்.

சைவப்பாரம்பரியங்களையும் அனுட்டானங்களையும் வழுவாது பின்பற்றிய சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக் கூற, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளனஅஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது,

அமைதியைக் குலைக்க விதானையார் விசுவலிங்கம் எழுந்தார்.

விதானையார்:- அண்மையில் கொழும்புத்துறையில நடந்த இறுதிச் சடங்கொன்றிற்குச் சென்றிருந்தன்.

அங்க, இறந்தவரின் உடலை அவசர அவசரமாக எடுக்கும் நடவடிக்கை நடந்து கொண்டிருந்தது. ஏன்? என்ன சங்கதி அவசரப்படுகினம் என எனக்கருகில் இருந்த பெரியவர் ஒருவரைக் கேட்டன்.

அதற்கு அவர்; துண்டி இந்து மயானத்தில தகனம் செய்யிறதெண்டால், பிற்பகல் இரண்டு மணிக்கு முதல் பூதவுடலை தகனம் செய்ய வேணுமாம்.

பிற்பகல் இரண்டு மணிக்குப் பிந்தினால் அங்க தகனம் செய்ய விடமாட்டம் எண்டு அங்க குடியிருக்கிறவியள் சிலர் கடும் பிடியாகக் கூறுகினமாம் என அந்தப் பெரியவர் பெரு மூச்சுவிட்டவாறு கூறினார்.

அப்ப இது பற்றி நீங்கள் யாழ்ப்பாண மாநகர சபை, யாழ். அரச அதிபர் ஆகியோருக்கு முறையிடவில்லையோ என்று அவரிட்டக் கேட்டன்.

சிறிது நேரம் மெளனமாக இருந்த அவர், இங்க சைவம் அழிந்து போகுது, யாரிட்ட முறையிடுவது எண்டு தெரியல்ல.

சுடலைக்கு முன்னால கொண்டு வந்து ஒரு வழிபடும் இடத்தைக் கட்டினார்கள்.தொடர்ந்து மயானத்தை சூழ குடி மனைகள். காலாகாலமாக இருந்த துண்டி மயானம். அதில தான் எங்கட தவத்திரு யோகர் சுவாமிகளின் திருவுடல் தகனம் செய்யப்பட்டது.

ஆனால் இப்ப அந்த மயானத்தில பிற்பகலில தகனம் செய்வதற்கே முடியவில்லை என்று கூறும் போது அவரிடம் இருந்த வேதனை வெப்ப மூச்சாக அந்த இடத்தைச் சுட்டது.

வாத்தியார்:- எங்கட நாட்டில சைவ சமயத்திற்கு நடக்கிற நிந்தையை என்னவென்று சொல்வது. பலாலி விமான நிலையத்தில ஒரு நடேசர் சிலையை வைப்பதற்கு பெளத்தசாசன அமைச்சர் அனுமதி வழங்கிய போதிலும் கடற்றொழில் அமைச்சரான சந்திரசேகர் அதற்கு அனுமதி மறுப்பதாக இந்து- பெளத்த அமைப்பைச் சேர்ந்த மோகன் என்பவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சாத்திரியார்:- பலாலி விமான நிலையத்தில நடேசர் சிலையை வைக்கிறதை கடற் றொழில் அமைச்சர் ஏன்? தடுக்க வேணும் – ஏன்? மறுக்க வேணும்.

வாத்தியார்:- பலாலி விமான நிலையத்தில நடேசர் சிலையை வைத்தால் மதப் பிரச்சினை ஏற்படுமாம்.

சாத்திரியார்:- நாசமறுக்க தையிட்டியில புத்தரை பிரதிஷ்டை செய்த போது மதப்பிரச்சினை வரும் எண்டு நினைக்காதவர்கள் பலாலி விமான நிலையத்தில நடேசர் சிலையை வைத்தால் தான் பிரச்சினை ஏற்படும் எண்டால் இது எந்தவகையில நியாயம்.

மூப்பர்:- தாய்லாந்து விமான நிலையத்திற்கு சுவர்ணபூமி எண்டு பெயர்.

அந்த விமானநிலையத்தில பாற்கடலைக் கடைந்த காட்சியை மிக அற்புதமாக சிற்பமாகச் செய்து வைத்திருக்கின்றார்கள்.

அந்த விமான நிலையத்தினூடாகப் பயணத்தை மேற்கொள்கின்றவர்கள் பாற்கடலைக் கடைந்த அந்தக் காட்சி முன்நின்று புகைப்படம் எடுப்பதைப் பெரும் பேறாகக் கருதுகினம்.

ஆனால் எங்கட யாழ்ப்பாண சிவபூமியில, பலாலி விமான நிலையத்தில ஒரு நடேசர் சிலையை வைக்க முடியாத நிலையில தான் நாங்கள் இருக்கிறம்.

வாத்தியார்:- என்ன இருந்தாலும் பலாலி விமான நிலையத்தில நடேசர் சிலையை வைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகர் உரிய நடவடி க்கை எடுக்க வேணும்.

நடேசர் சிலையை வைத்தால் அது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எனக் கூறுவது பொருத்தமற்றது.

இவ்வாறாக யார் கூறினாலும் அது தமிழ் மக்களிடையே இருக்கக் கூடிய ஒற்றுமையை சிதைப்பதாகத்தான் இருக்கும்.

கங்காணி:- வாத்தியார் சொல்லுறது நூறுவீதம் உண்மை.

நடேசர் சிலையை வைப்பதால ஒரு போதும் மதநல்லிணக்கம் பாதிக்கப்படமாட்டாது.

ஆனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுமெண்டு சொல்லி நடேசர் சிலையை வைக்கா மல் தடுக்கிறது தான், மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும்.

ஆகையால இது விடயத்தில கால தாமதம் இல்லாமல் நடேசர் சிலையை பலாலி விமான நிலையத்தில வைக்கவேணும் எண்டொரு தீர்மானத்தை ஆலடியில நிறை வேற்றுவம்.

இவ்வாறு கங்காணி கூற, அதனைத் தானும் அங்கீகரிப்பது போல ஆலடிப்பிள்ளையார் கோவில் கண்டா மணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link