ஆச்சி அறிவுரை
Share
மானிப்பாய் துர்க்கா மில்லடி வீதியின் நிலை அறிவார்களா? பேராண்டி…
போன கிழமை மானிப்பாய்க்கு ஒரு அலுவலாப் போனனான். மானிப்பாய் காரைநகர் வீதியில் முனியப்பர் கோவிலடி, துர்க்கா மில்லடியில ஒரே சனக்கூட்டம்.
என்ன ஏதெண்டு பார்த்தால், ஒரு பொம்பிளப்பிள்ளையும் தகப்பனும் மோட்டார் சைக்கிளில வரேக்குள்ள வீழ்ந்ததில அந்தப்பிள்ளையின்ர கையில காயம். காயம் பெரிசா இருக்கு மெண்டும் எலும்பேதும் உடைஞ்சிருக்குமெண்டும் அங்க நிண்டவை கதைக்கினம்.
ஆனால் அந்தப் பிள்ளை தகப்பனிட்ட “அப்பா வாங்கோ நேரம் போட்டுது” எண்டு அந்தரப்படுகுது.
ஏனம்மா? எலும்பேதும் முறிஞ்சால் சிக்கலெல்லோ? ஆஸ்பத்திரிக்குப் போங்கோவன் எண்டு கேட்டன்.
இண்டைக்கு எனக்கு ஒரு முக்கியமான பரீட்சை இருக்குது. அதை தவறவிட்டால் அடுத்த வருசம் தான் திரும்ப எடுக்கலாம் எண்டு சொல்லவே அந்தப் பிள்ளையின்ர கண்ணில இருந்து கண்ணீர் பொலபொலவெண்டு ஓடுது.
பேராண்டி மூன்று மாதத்துக்கு முன்னம் அந்த வீதி பழுதாப் போச்சுது.
ரோட்டுக்குக் கீழ தாட்டிருந்த தண்ணீர்ப் பைப் உடைஞ்சு வீதி பொருமிட்டுதெண்டு பெரிய படைபட்டாளத்தோட வந்து, அதைக் கிண்டிச் சரிசெய்து, கிண்டின றோட்டையும் பூசிமெழுகிட்டுப் போட்டினம் அதிகாரிகள்.
றோட்டுப் போட்ட மூன்று நாளில மூன்று நிமிசம் பெய்த மழை அவையின்ர வண்டவாளத்தை தண்டவாளத்தில ஏத்திட்டுது.
மானிப்பாய் வீதி முழுவதும் காப்பற் வீதி, அந்தச் சிறு துண்டு மட்டும் குன்றும் குழியுமா, பயங்கர மோசமா இருக்குது.
அதைத் தெரியாத ஆக்கள் வேகமா வந்து சடுதியா பிறேக் அடிச்சால் விபத்துக்கள் வரும் தானே.
இதில இரவு வெளிச்சமேதும் இல்லை. வீதி சேதமெண்டுற அபாயக் குறியீடோ, சகிம்ஞையோ இல்லை.
மயான இருட்டா இருக்கிற இடத்தில சாதாரண வேகத்தில வாறவை சடுதியா குன்று குழிக்குள்ள வாகனம் விழ அந்தரப்பட்டு… விழுந்தடிச்சு… திட்டித் தீர்த்துக் கொண்டல்லோ போகினம்.
அந்த இடத்தில நிண்டவர் ஒருத்தர் சொன்னார், உந்த அதிகாரியளின்ர மனைவி, பிள்ளைகள் இந்த வீதியால
போய்வாறதெண்டால் இதை இப்பிடி மரணப் பொறியா விட்டிருப்பினமோ? எண்டு.
அதுவும் உண்மைதான் பேராண்டி. இந்த படுகுழி நிறைந்த வீதியோரமா ஒரு ரியூசனும் இருக்குது. பின்னேரங்களில பிள்ளைகளை படிக்க விட்டிட்டு பெற்றோரும் நிறையப் பேர் வீதியோரத்தில நிப்பினம்.
இப்பிடிப்பட்ட இடம் எப்பிடி இருக்க வேணும்? ஏன், சண்டிலிப்பாய் சந்திக்கண்மையில இருக்கிற வழுக்கையாற்றுப் பாலம் நிலத்தை விடக் கீழ் இறங்கியிருக்கு. அதால போய்வாற ஆக்களுக்கு அது எவ்வளவு உயிர் அச்சுறுத்தலா இருக்குது.
இது வலம்புரியில செய்தியாவும் வந்திருந்தது. ஆனாலும் அதிகாரிகள் அது பற்றி சிந்திக்கவேயில்லை.
அதுசரி அவைக்கு இதுகளைப் பார்கிறதுக்கு நேரமிருந்தால் தானே.
ஏன்தான் எங்கட சமூகம் இப்பிடி கந்தறுந்து போகுதோ எண்டுற ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது பேராண்டி.
ஆச்சி வருவா…


