தென்னங்கன்றுகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!
Share
புதிய தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கிலும், இயற்கை பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் அபாயங்களில் இருந்து செய்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், தென்னங்கன்றுகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாய நலன்புரி காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாய அமைச்சின் தகவல்களின்படி, இத்திட்டத்தின் கீழ் ஒரு தென்னங்கன்றுக்கு ரூபா 40/- தவணைப் பிரீமியம் செலுத்துவதன் மூலம் வருடாந்தம் ரூபா 550/- காப்புறுதி ஈட்டைப் பெற முடியும். அதேபோல், அதிகபட்சமாக 6 வருட காலத்திற்கு ரூபா 875/- பிரீமியம் செலுத்தினால், ஒரு தென்னங்கன்றுக்கு வருடாந்தம் ரூபா 12,450/- வரையான காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம், அதிக மழை, பலத்த காற்று, நிலச்சரிவு மற்றும் காட்டு யானைகளின் ஊடுருவல்களால் தென்னைச் செய்கைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இத்திட்டத்தின் மூலம் காப்புறுதி வழங்கப்படுவதுடன், இதன்மூலம் பருவகால மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் அநிச்சயமான சூழ்நிலைகளை நிர்வகிக்கவும், எவ்வித அபாயமுமின்றி தென்னைத் தொழில்துறையைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இலங்கையின் முக்கிய தோட்டப் பயிர்த்துறைகளில் ஒன்றான தென்னைச் செய்கைக்கு நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


