Type to search

Articles விகடன் பிளஸ்

விண்வெளியை போர்க்களமாக்கும்அமெரிக்கா-சீனா

Share

ஈரானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் குறித்துப் பல நாடுகள் பதற்றம் கொள்கின்றன. ஆனால், ரணகளமான மாற்றங்கள் விண்வெளியில் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. 75 இற்கும் மேற்பட்ட நாடுகள், தங்களது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்வெளியில் நிறுத்தியிருக்கின்றன. இன்னும்கூடப் பல பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுத்த முடியும். போக்குவரத்து நெரிசல் ஆகிவிடப்போவதில்லை.


ஆனால், வேறொரு விபரீதத்துக்கான வாய்ப்பு உருவாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் பூமி கண்காணிப்புப் போட்டியை ‘21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான விண்வெளி மற்றும் தொழில்நுட்பப் போட்டி’ என்கிறார்கள்.


அமெரிக்கா 8,000 இற்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்தியிருக்கிறது. சீனாவின் பங்கு சுமார் 900. தொடக்கத்தில் செயற்கைக் கோள்கள் வானிலையைக் கணிக்கவே பயன்பட்டன. குறிப்பாக, புயல், வெள்ள எச்சரிக்கைகளைக் கூறுவதற்கு!


செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஏரிகள், அணைகள் எவ்வளவு நிரம்பியிருக்கின்றன, ஆறுகளின் ஓட்டம் எப்படி மாறுகிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. மழை, நிலப்பரப்பு, தாவர வளர்ச்சி போன்ற தரவுகளை இணைத்து, எந்தெந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைகிறது என்பதைக் கணிக்க முடியும்.

தவிர, செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஒரு நகரம் எந்தத் திசையில் வேகமாக வளர்கிறது, விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறுகின்றனவா என்பதையெல்லாம் அறிய முடிந்ததால், நகரத் திட்டமிடலுக்கும் செயற்கைக்கோள்கள் பயன்படத் தொடங்கின.


ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி அமெரிக்காவும் சீனாவும், இப்போது எதிரி நாடுகளை உளவு பார்க்கும் ஒற்றர்களாக செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இவற்றின் மூலம் மனிதர்கள் அல்லது வாகனங்கள் எல்லையைக் கடப்பது, இரவில் நடைபெறும் சந்தேகத்துக்கிடமான இயக்கங்களைக் கண்டறிய முடிகிறது.


அதேபோல அண்டை நாடுகள் தங்கள் எல்லையில் அமைக்கும் புதிய சாலைகள், இராணுவ முகாம்கள், பாலங்கள், பங்கர்கள், ரேடார் நிலையங்கள் போன்ற கட்டுமானங்களைக் கண்டறிய முடிவதால், அவற்றின் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தெளிவாக கவனிக்க முடிகிறது. உயர்ரக செயற்கைக்கோள் படங்கள் மூலம் எதிரி இராணுவத்தினரின் டேங்க் நகர்வு, ஏவுகணை அமைப்புகள், படை முகாம்கள், விமானத் தளங்கள் போன்றவற்றை அடையாளம் காண முடிகிறது.


அகச் சிவப்பு சென்சார்கள், எதிரி இராணுவத்தின் ஏவுகணை ஏவுதலின் வெப்பத்தைக் கண்டறிகின்றன. இதனால் எதிர்ப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுக்க முடிகிறது. ரேடார் செயற்கைக்கோள்கள் மூலம் மேகங்களையும் இருளையும் தாண்டி பார்க்க முடியும். தரையில் சிறிய மாற்றங்களையும் கண்டறியலாம்.


மிகத் தெளிவான படங்களை அளிக்கும் ஆப்டிக்கல் செயற்கைக்கோள்கள், இரவிலும் மேகங்களைக் கடந்து பார்க்க முடிகிற செயற்கை அபெர்ச்சர் ரேடார், செயற்கைக்கோள் தரவுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்யும் ஏஐ எனப் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பூமி கண்காணிப்புக்கு உதவுகின்றன.


அமெரிக்காவின் ‘லாண்ட்சாட் திட்டம்’ 1972 முதல் பூமிப் படங்களை சேகரித்துவருகிறது. அதன் டெர்ரா, அக்வா செயற்கைக்கோள்கள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன.


அமெரிக்கத் தனியார் நிறுவனமான ‘மக்ஸார்’ டெக்னாலஜீஸ் மிகத் துல்லியமான செயற்கைக்கோள் படங்களை வழங்குகிறது. ‘பிளானட் லாப்ஸ்’ எனப்படும் தனியார் நிறுவனம் நூற்றுக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்டு ஒட்டுமொத்த பூமி யையும் முழுமையாகப் படம் பிடித்துக் கண்காணிக்கும் திறன்கொண்டது. ‘பிளாக்ஸ்கை’ என்னும் நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பூமியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அமெரிக்க இராணுவத்துக்குத் தெரியப்படுத்துகிறது. “ஸ்பேஸ் எக்ஸ்” என்பதை இணைய சேவை வழங்கும் செயற்கைக்கோள் நிறுவனம் என எண்ணினாலும், அதில் ‘ஸ்டார்ஷீ ல்டு’ என்ற இராணுவப் பிரிவும் உண்டு. அதன் மூலம் புவி கண்காணிப்பு, உளவு செயற்கைக்கோள்களை அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக இயக்கி வருகி றார்கள்.


சீன அரசாங்கமும் விண்வெளித்துறையை, தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. இவை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்பது வேறு விடயம். சாங் குவாங் செயற்கைக் கோள் தொழில்நுட்பம் என்ற வணிக விண்வெளி நிறுவனம், உலகின் மிகப் பெரிய பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள் நெட்வொர்க்காக வளர்ந்திருக்கிறது.


‘ஸ்பேஸ் டி அண்ட் மினோஸ்பேஸ்’ என்ற நிறுவனம் சிறிய, நடுத்தர ரக செயற்கைக்கோள்களை அதிவேகமாகத் தயாரிக்கிறது.
ஆக, இரு நாட்டு இராணுவங்களும் தங்கள் உளவு வேலைக்காக தனியார் நிறுவனங்களின் தரவுகளைப் பெரிதும் நம்பத் தொடங்கியிருக்கின்றன.

சீனா கொஞ்சம் மெதுவாகத்தான் இந்தத் துறையில் நுழைந்தது என்றாலும் பெரும் வேகம் காட்டிவருகிறது. சீன தேசிய விண்வெளி நிர்வாகம், சீன அறிவியல் அகாடமி ஆகியவை இதற்கான முக்கிய அமைப்புகள். தென்சீனக் கடல் பகுதியில் சீன நடவடிக்கைகளை அமெரிக்கா கண் காணிக்கிறது. காரணம், இதன் வழியாக உலக கடல் வர்த்தகத்தின் மிகப்பெரிய
பகுதி நடைபெறுகிறது. சீனா இந்தப் பகுதியில் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, விமான ஓடுதளங்கள், ரேடார், ஏவுகணை அமைப்புகள், கடற்படைத் தளங்கள் போன்றவற்றை உருவாக்கியது. இந்தப் பகுதியை முழு மையாக சீனா கட்டுப்படுத்த ஆரம்பித் தால், பிற நாடுகளின் கப்பல் போக்குவரத் துக்கு பாதிப்பு ஏற்படலாம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் பாதிக்கப்படலாம்.


சரி, ஒரு நாட்டின் செயற்கைக் கோள், வேறு நாட்டைக் கண்காணிக்கலாமா?


‘கடல் போக்குவரத்து சுதந்திரம்’ என்ற பெயரில் அமெரிக்கா இதைச் செய்கி றது. பதிலுக்கு பூமி கண்காணிப்பு சாதனங்கள் மூலம், பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க இராணுவ இயக்கங்களை சீனா நோட்டமிடுகிறது. அமெரிக்காவுக்கு பசுபிக் பகுதியில் பல இராணுவத் தளங்கள் உள்ளன.


அமெரிக்க அணு நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணை தாங்கும் கப்பல்கள், நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் அங்கு இயங்குகின்றன. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில். இவற்றை சீனா ‘தன்னைச் சுற்றியுள்ள அமெரிக்கப் பாதுகாப்பு வளையம்’ எனக் காண்கிறது.


ஏஐ வளர்ச்சி, வர்த்தக செயற்கைக்கோள் சந்தை காரணமாக எதிர்காலத்தில் போட்டி மேலும் தீவிரமாகும். அது விண்வெளியைத் தாண்டி, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எதிரகால தொழில்நுட்ப ஆதிக்கத்தைத் தீர்மானிக்கும் போட்டியாக மாறும்.
எதிரி நாட்டின் செயற்கைக் கோள்களை உடனடியாக அழி ப்பதற்கு பதிலாக அவற்றைச் செயலிழக்கச் செய்வது அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போன்ற வழிகளில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது.


இதற்காக, செயற்கைக்கோள்களைப் பிடிக்கக்கூடிய ரோபோ கைகள், அவற்றைத் தொலை
தூர “கல்லறைச் சுற்றுப் பாதை” க்கு இழுத்துச் செல்லும் அமைப்புகள், மேலும் செயற்கைக்கோள் சமிக்ஞைகளைத் தடைசெய்யும் அல்லது ஊடுருவிக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் போன்றவை அங்கு உருவாக்கப்பட்டு வருகின்றன.


2022 ஜனவரியில்,
‘ஷிஜியான்-21’ என்ற சீன செயற்கைக்கோள், ரோபோ
கையைப் பயன்படுத்தி விண்வெளிக் குப்பைகளை அகற்றும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதில் செயலிழந்த செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாகப் பிடித்து, ‘கல்லறைச் சுற்றுப்பாதை’ எனப்படும் தொலைதூர சுற்று ப்பாதைக்குக் கொண்டு சென்று நிலைநிறுத்தியது.

இதே நுட்பத்தை எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை முடக்கப் பயன்படுத்தினால்?


ஒரு எதிரி நாட்டின் செயற்கைக்கோள்கள் அழிக்கப்பட்டால், அந்த நாட்டின் தகவல் தொடர்பு, கண்காணிப்பு, வழிகாட்டல் அமைப்புகள் மட்டுமல்லாமல் அதன் நிதி அமைப்புகள்கூடக் கடுமையாகச் செயலிழக்கக்கூடும்.


ஆக, ஒருவிதத்தில் விண் வெளி என்பது ஒரு போர் மண்டலமாகிவருகிறது. இதில் முந்துபவர்களுக்கே தரையில் அதிக பலம் கிடைக்கும் எனும் நிலை உருவாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link