பொலிஸார் தொடர்பில் யாருக்கும் பயம் ஏதும் இல்லை
Share
பயம் பக்தி இஃதிரண்டும் சேர்ந்து பயபக்தி யாகிற்று. பயபக்தி என்பது மிகவும் முக்கியமானது. தனித்து பயமோ அன்றி தனித்த பக்தியோ மீட்சியைத் தரமாட்டா.
ஆம், கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். கடவுளிடம் பக்தியை மட்டும் கொண்டி ருப்போமாயின், அஃது செருக்காக மாறும்.
திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஹேமநாத பாகவதரிடம் பக்தி இருந்தது. பயம் இருக்கவில்லை. அதனால் அவர் தலைக்கனம் கொண்டார்.
இதுபோலவே எங்கும் எதிலும் பயபக்தி இருக்க வேண்டும். இங்கு கடவுளிடம் பக்தியாக வெளிப்படும் சொற்பிரயோகம் மனிதச் சமூகக் கட்டமைப்பில் மதிப்பு மரியாதை என்றாகிறது.
ஆம், பாடசாலை அதிபர் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு பயமும் அதேநேரம் அவர்கள் மீது மரியாதையும் இருக்க வேண்டும். இதுபோலவே அனைத்து விடயத்திலும்.
ஆம், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் அமைப்புகள், சமய நிறுவனங்கள் என எங்கும் பயமும் மரியாதையும் பலந்த உணர்வு இருக்க வேண்டும்.
அப்போது தான் அங்கு நேர்மையும் நேர்த்தியுமான பணிகளும் நடந்தாகும்.
அந்தவகையில் அனைத்து பொதுமக்களும் சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்கின்ற பொதுமைக்கு ஆட்பட்டவர்கள்.
சிலவேளைகளில் அதிலிருந்து யாரேனும் விலகுவார்களாயினும், அவர்களை நெறிப் படுத்த – வழிப்படுத்த சட்டம் முன்னிற்கும்.
அதாவது இதை இன்னொரு விடயத்தில் கூறுவதாயின், சட்டங்கள் பக்கசார்பின்றி முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது பொதுமக்கள் அதனூடு அமைதியான -சுமூக மான – அச்சமற்ற வாழ்க்கையை வாழ முடியும்.
மாறாக, மக்கள் சமூகத்தில் குழப்பங்களும் வன்முறைகளும் சண்டை சச்சரவுகளும் கொலை கொள்ளைகளும் விபத்துக்களும் மலிந்து போகுமாயின் அதற்கான மூல காரணம் அங்கு சட்டம் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படவில்லை என்பதேயாகும்.
இதை நாம் கூறும் போது, பொதுமக்கள் சட்டத்தைப் பின்பற்றுவதும் அதை மீறுவது மான காரியம் சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிஸ் திணைக்களம் மற்றும் நீதி பரிபாலனம் என்பவற்றின் கைகளில் உள்ளது.
ஆம், சட்டத்தை மக்கள் பின்பற்றுவதென்பது உன்னதமடைய வேண்டுமாயின் அங்கு சட்டம் அமுலாகுவதைக் கண்காணிக்கின்ற பொலிஸ் திணைக்களம் மிகவும் விழிப்பாகவும் சிறப்பாகவும் நேர்மையாகவும் இயங்க வேண்டும்.
உன்னதமான பொலிஸ் சேவை இனமத பேதமின்றி இலஞ்ச ஊழல் யாதுமின்றி சீராக நடந்தாகுமாயின், அந்த மக்கள் சமுகம் நிச்சயம் சட்ட திட்டங்களில் விருப்பம் கொண்டு அதை அனுசரிக்கும்.
ஆனால் எங்கள் இலங்கை திருநாட்டில் அதிலும் குறிப்பாக எங்கள் தமிழர் தாயகத்தில் பொலிஸ் சேவை என்பது மாசுபட்டு விட்டது.
ஊழலும் இலஞ்சமும் பொலிஸ் சேவையைப் பங்கப்படுத்தி விட, பொலிஸ் குறித்து யாரும் அச்சம் கொள்வதாகவோ பொலிஸாருக்கு மரியாதை கொடுப்பதாகவோ இல்லாமல் போயிற்று.
இந்த மிக ஆபத்தான நிலையிலேயே எங்கள் மண்ணில் விபத்து மரணங்களும் காவுகளும் கொலைகளும் சட்டவிரோத செயல்களும் சர்வசாதாரணமாக நடந்தாகின்றன.
எனவே மேற்குறித்த சமூக விரோத செயல்கள் ஒழிந்து மக்கள் நிம்மதியாக வாழ்வதாயின், அதற்கான ஒரே வழி எங்கள் பொலிஸ் சேவையை பரிசுத்தப்படுவதாகும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


