Type to search

Articles விகடன் பிளஸ்

“ஈரான் போர் முடியக்கூடாது” நெதன்யாகு தெரிவிப்பு – கடும் கோபத்தில் ட்ரம்ப்

Share

11,657 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் ஈரானால் தங்களுக்கு ஆபத்து என்று கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி, போரில் இறங்கியது அமெரிக்கா. இதனுடன் சேர்த்து இஸ்ரேலும் களத்தில் இறங்கியது.

ஈரானின் வலிமை

போரின் முதல் நாளே, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ‘தலைவர் இல்லாமல் ஈரான் தடுமாறும்’ என்று எதிர்பார்த்திருந்த அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் காத்திருந்தது ஏமாற்றமே.

சில நாட்களிலேயே அயதுல்லாவின் மகன் மொஸ்தபா கமேனி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரானின் வெளியுறவுத் தலைவரான அப்பாஸ் அராக்சி போன்ற தலைவர்கள் ஈரானின் பிரதி நிதிகளாக எழுந்தனர்.

குரலில் மட்டுமல்ல… தாக்குதலிலும் ஈரான் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் டப் கொடுத்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சொத்துகளைக் குறிவைத்து தாக்கியது ஈரான். ஈரான், ஓமன் எல்லையில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடியது ஈரான்.

ட்ரம்பிற்கு நெருக்கடி

இதனால், மத்திய கிழக்கில் தொடங்கிய ஒரு நாட்டின் மீதான போரின் தாக்கம், உலகின் எட்டு திசைகளிலும் பரவியது. எல்.பி.ஜி, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகியவை உலகிற்கு பெரிய பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் உயரும் பெற்றோல் விலை, வருகிற நவம்பர் மாதம் மிட்-டெர்ம் தேர்தல் (அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸின் தேர்தல்), கஜானாவில் இருந்து காலியாகும் காசு, உலகம் முழுவதும் எழுந்துள்ள அதிருப்தி ஆகியவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை ஈரான் போர் நிறுத்தத்தை நோக்கி நகர்த்தியது.

ஆரம்பத்தில் முரண்டு பிடித்த ஈரானும் சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு வெள்ளைக் கொடி காட்டியது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ஈரானின் முக்கிய நிபந்தனையாக ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் இருக்கிறது.

இதனால், அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு ஸ்ட்ரிக்டாக ‘நோ’ சொல்லிவிட்டது ஈரான்.

தன்னுடைய முயற்சிக்கு மாறாக இஸ்ரேல் செயற்படுகிறது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ட்ரம்ப்.

ஒரு போன்கால்; வெவ்வேறு பதிவுகள்

ட்ரம்ப், நெதன்யாகு இருவரும் போன் கால் பேசினார். அதன் பின், ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “நான் இன்று பிபி நெதன்யாகுவிடம் பேசினேன். லெபனானின் பெய்ரூட் நகருக்குள் பெரிய அளவில் இராணுவத் தாக்குதல் எதையும் நடத்த வேண்டாம்

என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

அவரும் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். நன்றி பிபி!” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நெதன்யாகுவோ மாறாக தனது பதிவில், “எங்களுடைய இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) திட்டமிட்டபடி தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார்.

இவர்களது போன்கால் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கடுமையாகப் பேசியுள்ளார்.

“உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.

நான் தான் உங்களை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறேன். உங்களை அனைவரும் இப்போது வெறுக்கிறார்கள். இதனால், உலகத்தில் இருக்கும் அனைவரும் இஸ்ரேலை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று ட்ரம்பின் பேச்சு நீண்டிருக்கிறது.

நெதன்யாகுவின் மாஸ்டர் பிளான்

லெபனான் மீது இப்போது தாக்குதல் நடத்தினால் ஈரான் போர் நிறுத்தம் நடக்காது என்பது நெதன்யாகுவிற்கு தெரியாமல் எல்லாம் இல்லை.

இதை நன்கு தெரிந்து தான் காயை நகர்த்தியிருக்கிறார் நெதன்யாகு.

ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதோ ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிப்பதோ அமெரிக்காவிற்கு நேரடி பிரச்சினையில்லை. ஆனால், அது இஸ்ரேலுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை.

ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் பாலஸ்தீனம் பக்கம் நிற்கிறார்கள்.

ஈரானை இப்போது எளிதாகவிட்டு விட்டால், பாலஸ்தீனத்திற்கு ஈரான் தொடர்ந்து இராணுவம் மற்றும் நிதி உதவியை செய்யும். எல்லையில் இருக்கும் எதிரி வலுவாவதை நிச்சயம் இஸ்ரேல் விரும்பாது.

ஈரானை முழுவதும் சரணடைய வைத்துவிட்டால், பாலஸ்தீனத்திற்கு நிதியுதவி, இராணுவ உதவி எதுவும் செல்லாது என்று கணக்கு போடுகிறது இஸ்ரேல்.

நெதன்யாகு ஈரானில் தனக்கு சாதகமான தலைமையைத் தான் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கிறார். போர் நிறுத்த நிபந்தனைகளில் அப்படி ஒரு பாயின்ட் இடம்பெறவே இல்லை என்பது இஸ்ரேலுக்கு ஏமாற்றம்.

தான் நினைப்பதெல்லாம் நிறை வேறும் வரை ஈரான் போர் நீடிப்பது தான் சரி என்கிற ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார் நெதன்யாகு.

ட்ரம்ப் நெதன்யாகு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? நெதன்யாகு ட்ரம்ப்பை தனது வழிக்கு இழுத்து வருவாரா என்பதை காலம்தான் சொல்லும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link