நெறிபிறழ்வான செயற்பாட்டின் விளைவு எப்படின்று பார்த்தீர்களா?
Share
நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நம் இளம் பிள்ளைகளைப் பாதிக்கின்ற சம்பவங்களை நினைக்கும் போது இதயம் பதறுகிறது.
ஆம், இன்றைய மிக மோசமான காலசூழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பது எங்ஙனம் என்ற ஏக்கத்தின் மத்தியில், ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் நடந்தாகின்ற குற்றச் செயல்களை எண்ணுங்கால் எங்கள் சமயக் கல்வி உள்ளிட்ட பாடசாலைக்கல்வி படுதோல்வி கண்டுவிட்டதென்றே கூறவேண்டும்.
ஆம், முன்பெல்லாம் பாடநூல்களில் நீதிக் கதைகள் இடம்பெற்றிருக்கும்.
நேர்மையான தலைவர்கள் – மனித வாழ்க்கையின் உன்னதத்தைப் போதித்த ஞானிகளின் போதனைகள் – இதிகாசப் படிப்புகள் – அறத்தை எடுத்துரைக்கும் நூல்கள் – கடவுள் சிந்தனையூடு பஞ்சமா பாதகங்களின் விளைவுகளை எடுத்துரைக்கும் கதைகள் என அனைத்தும் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கத்தை வலியுறுத்து வனவாய் இடம்பெற்றிருக்கும்.
என்ன செய்வது கல்விச் சீர்திருத்தம், பாடவிதானத்தில் மாற்றம் என்ற பெயரால் உள்நுழைந்த பாடநூல் எழுத்தாளர்கள், தங்களின் வித்துவத்தை முன்மொழிந்து மாணவர்களை நெறிப்படுத்துகின்ற விடயங்களை ஓரங்கட்டி விட, இன்று எல்லாமும் கந்தறுந்து போயிற்று.
உண்மை. சமகாலத்தில் இடம்பெறுகின்ற பிறழ்வான செயற்பாடுகள் அத்தனைக்கும் மூலகாரணம் பாடவிதானங்களை முறையாகத் தயாரிக்காத கல்வியாளர்கள் என் பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
உண்மை. சட்டங்களை மதிக்கவும் பாவகாரியங்களை தவிர்க்கவும் கற்றுக்கொடுக் காத கல்வியால் ஏற்படுகின்ற அறிவு அழிவின் பாற்பட்டதேயன்றி வேறில்லை.
அந்தோ! வயதான கணவனையும் மனைவியையும் வெட்டிக் கொலை செய்த நபர் -பச்சிளம் பாலகியை வதைத்த கொடூரம் – கையடக்கத் தொலைபேசி வாங்குவதற்கு பணம் தரவில்லை என்பதால் உயிரை மாய்த்த இளைஞன் என்ற சம்பவங்களுக்கு குறைவில்லை என்றால், எங்கள் பிள்ளைகளை சரியான பாதையில் வழிப்படுத்தவில்லை என்பதே அதன் உண்மைப் பொருளாகும்.
ஆம், புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை உலகையே உலுக்கிய கொடூரச் சம்பவம். ஈனத்தனமான ஓரிருவரின் செயலால் நிலைமை எப்படியாயிற்று என்று பார்த்தீர்களா?
அந்தோ! அருமந்த மாணவி வித்தியா துடிதுடித்து பலியாகிப் போன அந்த நிட்டூரத்துடன் சம்பந்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் சிறையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கூடவே அவரது உடலைப் பொறுப்பேற்று இறுதிச் சடங்கைச் செய்வதற்குக் கூட முடிய வில்லை என்பதால், அரச செலவில் அடக்கம் செய்கின்ற நிலைமை.
ஆக, பிறழ்வான செயற்பாடுகளைச் செய்தால் அதன் விளைவு இதுவாகவே இருக்கும் என்பதை இனியேனும் மக்கள் சமூகம் உணர்ந்து கொண்டு செம்மை வாழ்வு வாழ வேண்டும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


