Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 11

சிவபூமியாகிய எம் ஈழத் திருநாட்டில் சைவ சமயத்திற்கான ஒரு தலைமைப் பீடம் இல்லாமை மிகப் பெரும் குறைபாடாகவே உள்ளது.

ஆம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்கு நாடு தழுவிய ரீதியில் அல்லது மாநில அடிப்படையில் இந்து சமயத்திற்கான தலைமைப் பீடங்கள் உள்ளன.

அதிலும் குறிப்பாக காஞ்சி காமகோடி பீடம் தமிழகத்தின் எல்லை கடந்து, அகண்ட பாரதம் முழுமைக்குமான இந்து சமயத் தலைமைப் பீடமாக விளங்குகிறது.

ஆதிசங்கரர் தோற்றுவித்த கட்டமைப்பினூடு காஞ்சி காமகோடி பீடம் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இந்து மதத்தின் தலைமைப்பீடமாக விளங்குகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியவா எனப் போற்றப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 13 வயதில் துறவை மேற்கொண்டு 100 வயது வரை தனது ஆன்மிக வாழ்வை இந்திய தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

அவரின் பாதயாத்திரையும் தெய்வீக சொற் பொழிவுகளும் இந்து மக்களை வழிப்படுத்தின.

“தெய்வத்தின் குரல்” என்பதாக பெரியவாவின் சொற்பொழிவுகள் நூலுருப்பெற்றன.

இப்போது கூட காஞ்சி காமகோடி பீடத்தின் தலைமைப் பீடாதிபதி என்பவர், மிகவும் போற்றுதலுக்கும் வணங்குதலுக்குமுரியவராக மதிக்கப்படுகிறார்.

அண்மையில் கூட, காஞ்சி காமகோடி பீடத்தின் இளவரசு பதவியேற்பு நிகழ்வு இடம் பெற்றது.

துறவு பூண்டு காஞ்சி காமகோடி பீடத்தை வழிப்படுத்துகின்ற தலைமைப் பீடாதிபதி என்ற உயரிய இடத்தை நிரப்பப்போகும் இளவரசுக்கான திருநிலைப்படுத்தல் பெரு விழாவாக நடைபெற்றது.

காஞ்சி காமகோடி பீடத்தின் சம்பிரதாயங்கள்-மரபுகளின்படி அத்தனை வழிபாடுகளும் இடம்பெற்று சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக திரு நிலைப்படுத்தப்பட்டார்.

இளவரசாகப் பதவியேற்ற நிகழ்வில் ஏகப்பட்ட இந்து மக்கள் கலந்து கொண்டதுடன் தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இதைவிட, குறித்த பதவியேற்பு இந்திய ஊடகங்களில் மிகவும் முதன்மைக்குரிய செய் தியாக இடம்பிடித்திருந்தது.

காஞ்சிகாமகோடி பீடத்தின் பலம்

140 கோடி மக்களைக் கொண்ட இந்திய தேசத்தில் 97 கோடி மக்கள் இந்துக்கள். 97 கோடி இந்துக்களதும் நம்பிக்கைக்குரிய தலைமைப்பீடமாக விளங்கும் காஞ்சி காமகோடி பீடம் இந்து சமயம் சார்ந்த தீர்மானங்களை அரச மட்டத்தில் எடுக்கின்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

இதற்கும் மேலாக, ஆலயம் சார்ந்த சிக்கல்கள்-கிரியைகள் சார்ந்த சர்ச்சைகள் எழுகின்ற போது அதில் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கின்ற அதிகாரம் காஞ்சி காமகோடி பீடத்திற்கே உரியதாம்.

ஒரு முறை கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, தஞ்சைப் பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

இரண்டு நாட்களில் மகா கும்பாபிஷேகம் என்பதாக இருக்க, ஆலயத்தில் பெருந் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 இற்கும் மேற்பட்ட அடியார்கள் உயிரிழந்து போயினர்.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தை நடத்துவதா? இல்லையா? என்ற சர்ச்சை ஏற்பட்ட போது, காஞ்சி காமகோடி பீடத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

ஆலய கும்பாபிஷேகத்தை உரிய நாளில் நடத்தி முடிக்கும்படி காமகோடி பீடம் ஆலோசனை வழங்க, அதன்படியே கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

தஞ்சைப் பெரிய கோயிலில் நடந்த தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்த போதிலும் கும்பாபிஷேகம் தொடர்பில் தமிழக அரசோ அன்றி நீதிமன்றங்களோ காஞ்சி காம கோடி பீடம் வழங்கிய ஆலோசனைக்கு இடையூறு செய்யவில்லை என்பது தான் இங்கு ஈண்டு கவனிக்கத்தக்க விடயம்.

இது தவிர, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆதீனங்கள் மிகப் பலமானவை. ஆதீனங்களுக்கு இருக்கக்கூடிய சொத்துக்கள், நிலபுலங்கள் அவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயங்கள் என தமிழகத்து ஆதீனங்கள் குறு நில மன்னர் சபை போலவும் ஆதீன முதல்வர்கள் குறுநில மன்னர்கள் போலவும் விளங்குவர்.

இதில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம் என்பன முதன்மைக்குரியவையும் காலத்தால் நீண்ட வரலாற்றைக் கொண்டவையுமாகும்.

ஆம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, தமிழகத்து ஆதீன முதல்வர்கள் விசேட விமானம் மூலம் டெல்லிக்கு அழைக்கப்பட்டு புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் இந்தியப் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கியது. செங்கோலானது, நந்தி வீற்றிருப்பதாக அமையப்பெற்றிருப்பது இந்தியாவில் ஆதீனங்களின் செல்வாக்கு எத்துணை உயர்வானதென்பதை மதிப்பீடு செய்வதற்குப் போது மானதாகும்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link