சிவாஜிலிங்கத்திற்கு உதவுவது தமிழினத்தின் தார்மீகக் கடமை
Share
தனக்காகவன்றி தமிழ் இனத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள்.
அவரின் அரசியல் என்பது தமிழ் மக்களுக்கானது – தமிழ் இனத்துக்கானது.
இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் தனக்காக அரசியல் செய்திருப்பாராயின், அவரின் பொருளாதார நிலைமை மிகவும் உயர்வாக இருந்திருக்கும்.
தவிர, இந்த நாட்டில் விடுதலைப் போராட் டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தராக இருந்த சிவாஜிலிங்கம் விடுதலைப் போராட்டத்திலும் தமிழ் இனம் என்பதே அவரின் முழு நினைப்பாக இருந்தது.
ஆம், சிவாஜிலிங்கம் வைராக்கியமான தமிழ்ப்பற்றாளர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை வைத்தியசாலையில் வைத்து பராமரித்ததுடன் அவரின் அந்திமக் கிரியைகளையும் முன்னின்று நிறைவேற்றியவர்.
உண்மை. தலைவர் பிரபாகரனின் தாயாரை வைத்தியசாலையில் சென்று பார்ப்பது தமக்கு ஆபத்தாகிவிடுமோ என்ற அச்சத்தில் அந்தப் பக்கமே செல்லாத அரசியல்வாதிகள் நம்மில் பலர் உள்ளனர்.
ஆனால் எந்த ஆபத்து தனக்கு ஏற்பட்டாலும் அதுபற்றி இம்மியும் கருத்திலெடுக்காது, தலைவர் பிரபாகரனின் தாயாரின் இறுதிக் கிரியைகளை சிறப்பாக நிறைவேற்றி ஒட்டு மொத்தத் தமிழ் இனத்தின் கெளரவத்தை காப்பாற்றிய பெருமை அவரையே சாரும்.
அத்தகு துணிச்சல் மிகுந்த எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல்நிலை தற்போது பாதிக்கப்பட்ட நிலையில், சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது.
உண்மையில் அவருக்கான நிதி உதவி என்பது அவரைத் தேடிச் சென்று வழங்கப்பட வேண்டியதொன்று.
இந்த நாட்டில் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் தன்நலம் சார்ந்து எதையும் சிந்திக்காமல் தன்னிடம் இருந்ததையும் பொதுநலன் சார்ந்து ஈகை செய்தவர். அவருக்கு உதவி செய்வதென்பது எங்கள் அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.
அதேநேரம் அவரின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியை வழங்கப் பலரும் முன்வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதேநேரம் அவரின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு எழுபது இலட்சம் ரூபாய் தேவைப்படுமென கணிப்பிடப்பட்டுள்ளது.
இது மருத்து வச் செலவுக்கானது மட்டுமே. மாறாக, சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பின்பான பராமரிப்பு என்பது மிகவும் முக்கிய மானது.
அந்தப் பராமரிப்பானது நிதிவசதியின்மை காரணமாக எந்த வகையிலும் பாதிப்படையக் கூடாது.
ஆகையால் சிவாஜிலிங்கம் அவர்களுக்குத் தாராளமாக நிதி உதவி செய்வது கட்டாயமானது.
ஆம், எம் தமிழ் இனத்திற்காகத் துணிந்து குரல் கொடுத்த – நம் இனம் துன்பமுற்ற போதெலாம் நம்மோடு உடனிருந்து தூய அரசியல் செய்த ஒருவருக்கு உதவுவது எங்கள் தமிழ் இனத்தின் கடமையும் பொறுப்புமாகும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


