Type to search

Articles ஆலடி மாநாடு

ஆலடி மாநாடு

Share

திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் சீல் வைக்கப்பட்டமை முறையன்று

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார்.

இக்கட்டான யுத்த காலத்தில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்து அரும் சேவையாற்றிய வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் ஸ்ரீகாந்தா அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தியறிந்து துயரடைகின்றோம்.

மேலும் கைதடியைச் சொந்த இடமாகவும் வண்ணை சிவப்பிரகாசம் வீதியை வசிப்பிட மாகவும் கொண்ட, கல்வி இராஜாங்க அமைச்சின் ஓய்வு பெற்ற முதன்மைச் செயலாளர் வேலுப்பிள்ளை பொன்னம் பலம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியறிந்து துயரமடைகின்றோம்.

நிர்வாகத் திறனும் ஆங்கிலப் புலமையும் மிக்க பொன்னம்பலம் அவர்கள் மற்றவர்க ளுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

இதுபோன்று சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் நாயன்மார் கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி மயில்வாகனம் அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைகின்றோம்.

ஊடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மயில்வாகனம் அவர்கள் கோப்பாய் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றியவர்.

இதற்கு மேலாக, 1999 காலப்பகுதியில் கோப்பாய் செஞ்சிலுவைச் சங்கத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகத் துறைசார்ந்து பயிற்சி நெறிகளை வழங்கியவர்.

யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பணியாற்றிய அவர் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர். இம் மூவரினதும் சமூகப் பணிக்காக அவர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக்கூற, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது அமைதியைக் குலைக்க மூப்பர் எழுந்தார்.

மூப்பர்:- திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்குச் சீல் வைக்கப்பட்டதாக அறிந்தன் உண்மை தானோ!

விதானையார்:- உண்மை தான். ஆனால் என்னைப் பொறுத்த வரை திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்கு சீல் வைத்திருக்கக் கூடாது.

ஒரு சிறந்த நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகின்ற ஓர் அமைப்புத் தான் திருநெல் வேலி அம்மாச்சி உணவகம்.

அங்கு பலரும் உணவருந்துவதுடன் இலைக் கஞ்சி, குரக்கன் ரொட்டி, ஒடியல் கூழ், அப்பம், தோசை, குழை சாதம், பழச்சாறு என உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மூலிகை வகைகளையும் எங்கள் பண்பாட்டு உணவு வகைகளையும் ஒரே இடத்தில் வழங்கக் கூடிய ஓர் இடம் தான் திருநெல்வேலி அம்மாச்சி உணவகம்.

அதுமட்டுமல்ல, அந்த உணவகம் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதுடன் எங்கள் உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திகளும் அங்கு பயன்படு வதால் விவசாயிகளும் பயன்பெறுகினம்.

கங்காணியார்:- சுகாதாரத்திற்குக்கேடு என்றால் என்ன விதானையார் செய்யலாம்.

விதானையார்:- சுகாதார சீர்கேடுகள் இருந்தால், அதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. உணவே மருந்து என்கிறது நம் தமிழ். ஆக, சுகாதாரத்தைப் பேணுவதும் சுத்தமான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதும் மிகவும் கட்டாயம்.

அதேநேரம் உணவகத்திற்கு சீல் வைப்பது தான் சுகாதாரச் சீர்கேட்டை நிவர்த்திப் பதற்கான ஒரே வழி முறையன்று.

உணவகத்திற்கு சீல் வைக்கின்ற அதிகாரம் பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு இருக்கலாம். அதற்காக எடுத்த எடுப்பில் அதனைச் செய்து அந்த உணவகத்தின் நன்மதிப்பை- அங்கு பணியாற்றுகின்றவர்களின் வாழ் வாதாரத்தைக் கெடுத்து விடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் போன்ற இடங்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஒவ்வொரு நாளும் தரிசிப்புச் செய்து குறை குற்றங்களை நிவர்த்திக்கலாம்.

உணவகத்திற்குச் சீல்வைப்பதற்கு முன்னதாக, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சுகாதாரக் கல்வியைப் போதித்து ஒரு சுமுகமான உறவு நிலையைப் பேணி, அம்மாச்சி உணவகத்தை சிறந்த சுகாதார நடைமுறைகளுடன் இயக்கியிருக்கலாம்- இயக்கி இருக்க வேணும்.

சாத்திரியார்:- எங்கட தமிழ்ப் பகுதிகளில பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் பிடி எண்டு தான் பலரும் கதைக்கினம். இதால உணவகங்களை நடத்த முடியாமல் பலரும் மூடுவிழா செய்திருக்கினம்.

இதைவிட மிக்சர், பகோடா , மரவள்ளிப் பொரியல் என்பவை தொடர்பிலும் சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் நிபந்தனைகளை விதிக்கினம்.

அதேநேரம் கொழும்பில இருந்து இங்கு விற்பனைக்கு வருகின்ற மிக்சர், பொரித்த கடலை, பகோடா தொடர்பில எங்கட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் திரும்பியும் பாராயினம்.

தென் பகுதியில இந்த மிக்சர் சார்ந்த உணவுப் பண்டங்கள் எப்படியான இடத்தில உற்பத்தி செய்யப்ப டுகின்றது என்பது தெரியாது.

இந்த நிலையில எங்கட உள்ளூர் உற்பத்திகள் தடைப்பட, தென் பகுதியில இருந்து பைக் கற்றுகளில அடைக்கப்பட்டு இங்கு வருகிற நொறுக்குத்தீனிகள் கண்ட பாட்டில விற்பனையாகுது.

உண்மையைக் கூறப் போனால், எங்கட தமிழர் பிரதேசத்தில உணவு உற்பத்தி உள்ளி ட்ட பல்வேறு தொழில் முயற்சிகள் பாழ்பட்டுப் போனதற்கு முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சுகாதாரப் பரிசோதகர்களே காரணம் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.

இவ்வாறு சாத்திரியார் சதாசிவம் ஆக்ரோசமாகக் கூற, அதிரடியாக எழுந்த சிறாப்பர் கனக சபை; சிலவேளை தென்பகுதியில இருந்து இங்கு வருகின்ற தின்பண்டங்களை விற்பனை செய்வதற்காக குறிப்பிட்ட சில தென் பகுதி அமைப்புக்கள் எங்கட பொது சுகாதாரப் பரிசோதகர்களை வாலாயம் செய்து போட்டி னமோ தெரியல்ல.

கங்காணி:- உண்மைதான். யாழ்-கொழும்பு பஸ்களில பயணிக்கும் போது, பஸ் நிறுத்தப்படும் இடங்களில உள்ள சாப்பாட்டுக் கடைகளை- அவற்றின் கழிப்பறைகளை பார்த்தால் , அவற்றின் சுகாதார நிலை எப்படி உள்ள தென்பது தெரியும் தானே.

என்ன செய்யிறது. எங்களில எல்லாருக்கும் பெயரும் புகழும் தேவையாக இருக்குது. அதால அதிகாரம் தலைக்கேறி நிற்குது. எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்பம். இவ் வாறு கங்காணி கூற,

அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப்பிள்ளை யார் கோவில் கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link