இலங்கை வேந்தன் இராவணன் வெறும் கையோடு நின்ற காதை
Share
“.. இராவணன் மேலது நீறு” எனத் திருமுறை பாடும் அளவில் மிகச் சிறந்த சிவபக்தன் இராவணன்.
சிவப்பரம்பொருள் மீது அவன் கொண்ட அளவற்ற பக்தி காரணமாக அவனுக்கு சிவ சங்கரன் போர் வாளை வழங்கினான். எனினும் போரில் சங்கரன் கொடுத்த வாளையும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை வேந்தன் நின்றான் எனக் கம்பன் கூறுகிறான்.
ஆம், சங்கரன் கொடுத்த வாள் எத்துணை வலிமையானது. இருந்தும் இராவணன் கையில் இருந்த சங்கரனின் வாள் பலம் இழந்து – பகைவரை வெல்லும் திறன் இழந்து போனதெனில், அதற்குக் காரணம் இராவணனிடம் தர்மம் இருக்கவில்லை என்பதேயாம்.
ஆம், எம்மிடம் எத்துணை பலம் இருந்தாலும் அது கண்டு இறுமாப்படையாமல், அறத் தையும் நீதியையும் வழுவாது பின்பற்றுகின்ற உயரிய வாழ்வை வாழ வேண்டும்.
அவ்வாறு வாழ்பவர்க்கே பலம் பலமாகப் பயன்படும். மாறாக, ஆட்சி அதிகாரம் அரச செல்வாக்கு – மந்திரிப் பதவி என்ற மமதையில் தலை, கால் தெரியாமல் கர்வம் கொண்டு நடந்தால், அஃது அழிவைத் தரும் என்பதுடன் அவ்விடத்தில் சங்கரன் தந்த வாளாயினும் அது பலமிழந்து போகும் என்பதைச் சுட்டுவதாக இராவணனின் இறுதிக்காலம் அமைகிறது.
இதை நாம் கூறும் போது இப்போது இது எதற்கானதென நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
எல்லாம் காரணத்தோடு தான். ஆம், மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸ் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கதைப்பதையே தனது அரசியலாகக் கொண்டிருந்தார்.
யுத்த காலங்களில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொலையுண்ட போது கூட அவர் இம்மியும் இரக்கம் கொண்டிலர். மாறாக, அப்பாவித் தமிழ் மக்களைப் பேரின வாத ஆட்சியாளர்கள் கொன்று குவித்ததை நியாயப்படுத்துவதற்காகத் தனது பேச்சாற்றலைப் பயன்படுத்தினார்.
ஆனால், இப்போது அவரின் நிலைமையைப் பார்க்கையில், அடடா! “வெறுங்கை யோடு இலங்கை புக்கான்” என இராவணனை கம்பன் காட்சிப்படுத்திய காதை எதற் கானதென உணர முடிந்தது.
ஆம், கடந்த மே – 17 ஆம் திகதி தேசிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச்சென்ற விமல் வீரவன்ஸவின் நிலைமையைப் பார்த்தோம்.
“ஐ” படத்தில் வருகின்ற “எப்படி இருந்தவர் இப்படியானாரே” என்ற சந்தானத்தின் அந்த வார்த்தைகளே ஞாபகத்திற்கு வந்தன.
உண்மை. பொலிஸார் தன்னைக் கைது செய்து விடுவார்களோ என்ற பயப்பீதியில் தள்ளாடித் தள்ளாடி ஓடிய விமல் வீரவன்ஸ நிலத்தில் வீழ்ந்து மண்ணைக் கௌவிய போது, இறைவா! உன் நாடகம் எத்துணை பெரியது.
அதோ! மகிந்தவின் செல்லப்பிள்ளை விமல் வீரவன்ஸவை ஒரு கால் தட்டில் வீழ்த்தி “என் பக்தனாகிய இராவணனையே தண்டித்த எனக்கு இவன் எம்மாட்டு” எனக் காட்டி நின்றாய்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதை உணர்த்தி நின்றாய். உணர்ந்தோம் பராபரமே.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


