முள்ளிவாய்க்காலில் நெருக்குருகும் நினைவேந்தல்
Share
2009 ஆம் ஆண்டு மே – 18 தமிழின அழிப்பு உச்சம் தொட்டநாள்.
ஆம், வன்னிபெருநிலப்பரப்பில் எங்கள் உறவுகள் சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களால் மிக மோசமாகக் கொல்லப்பட்டனர்.
அந்த இனஅழிப்பு அவலம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அன்று உயிரிழந்தவர்களுக்கு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
என்ன செய்வது உயிரிழந்தவர்களை நெக்குருகி நினைந்தழுவதைத் தவிர எமக்கு வேறுவழியேதும் இல்லை.
ஆம், விடுதலைப்புலிகளோடு ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலமும் முடிந்துபோயிற்று.
இனியிருக்ககூடிய தமிழர் அரசியல் என்பது வெறும் சாக்கடை மட்டுமே.
உண்மை. தங்கள் பதவிகளுக்காக – தங்களின் அரசியல் இருப்புக்காக – தங்களின் சுகபோகவாழ்வுக்காக போலி வேடந்தரித்த வேடதாரிகளின் அரசியலால் எங்களுக்கு எந்த விடிவும் முடிவும் கிடைக்கப் போவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் இனத்தைப் பாழ்படுத்தி – தமிழினத்தின் அரசியலை வேரறுத்து – கொழும்பை மையப்படுத்தி – எதிர்க்கட்சித் தலைவருக்கான வாசஸ்தலத்தில் ஆசை கொண்டு – எம் இனம் பட்ட அவலத்தை மறந்துபோன இரா.சம்பந்தரே எம் தமிழ் அரசியலின் இறுதி நடுகல்.
இனியொரு அரசியல் நமக்கு கிடைக்கப் போவதில்லை. அவ்வாறானதொரு அரசியலை உருவாக்க நம் புத்திஜீவிகளும் முயற்சிக்கப்போவதில்லை.
அவ்வாறு முயற்சித்தாலும் அதனை சமூகவலைத்தள விமர்சகர்கள் விட்டுவிடவும் மாட்டார்கள்.
ஆக, எங்களிடம் வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே உயிர் வாழும்.
அந்த நேரத்தில் மட்டும் பழைய, புதிய முகங்கள் தோன்றும். தேர்தல் முடிந்து வெற்றி தோல்விகள் வெளியானதும் இருதரப்புமே நம்மிடை நின்றும் மறைந்து – மறந்து போகும்.
இதுவே எங்களின் தமிழ் அரசியலாக இருக்கும்.
உண்மை. இத்தகைய அரசியலின் உயிர் மூச்சு அறிக்கையிலும் சிற்சில கூட்டங்களி லுமே உறைந்திருக்கும்.
கூடவே தமிழ் மக்களின் தலையில் மண்ணைக் கொட்டி தங்கள் பிழைப்பை பார்த்துக்கொள்ளும் சில சிவில் அமைப்புகள் நீண்ட அறிக்கையோடு கோடை – மாரி கால விடுமுறை போல அமைதி கொள்ளும். இதுவே உண்மையும் சத்தியமுமான எங்கள் நிலைமை.
அந்தோ! முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னமும் பரிதவித்து – துடிதுடித்து உயிர் பிரிந்த எங்கள் உறவுகளை நினைந்துருகும் இந் நேரத்தில், ஓ! தமிழ் அரசியல்வாதிகளே! இன்னமும் உங்கள் பதவி அரசியல்வெறி அடங்கவில்லையா?
சிங்களக் கொடியவர்கள் ஒருமுறை கொன்றார்கள்.
நீங்கள் தமிழினத்தை 17 ஆண்டுகளாகக் கொல்கிறீர்கள் – அழிக்கிறீர்கள்.
இன்னமும் ஒற்றுமைப்பட உங்களுக்கு மனம் வரவில்லையா?
இந்த மௌனமான கேள்விக்குள் எழுகின்ற வேதனையும் சேர்ந்து விம்மி அழுகின்றோம்.
எம் இனிய உறவுகளே! நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இவர்கள் யாரும் உங்க ளுக்கு நீதிபெற்றுத் தருவார்கள் என ஒரு போதும் நம்பிவிடாதீர்கள்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


