புத்தளத்தில் சீரற்ற வானிலையால் 27,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Share
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் வை.ஐ.எம். சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழையினால் புத்தளம், ஆனமடுவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவே அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அங்கு 19 கிராம சேவகர் பிரிவுகளில் 7,190 குடும்பங்களைச் சேர்ந்த 27,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வன்னாத்தவில்லு பகுதியில் ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 2 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளைப் பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி மற்றும் ரத்மல்யாய பகுதிகளில் வெள்ளநீர் வீதிக்கு மேலாகப் பாய்வதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் தள வைத்தியசாலை, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம், பாடசாலைகள் மற்றும் பல அரச திணைக்களங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளமையால் அவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


