களுத்துறை சனச வங்கியில் 15 கோடி ரூபா நிதி மோசடி – வங்கி அதிகாரிகள் கைது!
Share
களுத்துறை வங்கியொன்றில் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் இரு பெண் பிரதான அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, கொஹோலான சனச வங்கியின் மேலாளர் மற்றும் அதன் செயலாளர் ஆவர்.
வங்கியின் கணக்காய்வு அறிக்கையின்படி, வங்கியிலிருந்த மொத்த வைப்புத்தொகை 170 மில்லியன் ரூபாவாகும். அதில் 20 மில்லியன் ரூபா மாத்திரமே முறையாக உறுப்பினர்களுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் மேலாளர் 2.5 மில்லியன் ரூபாவையும், செயலாளர் 1.4 மில்லியன் ரூபாவையும் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த இரு அதிகாரிகளும் தங்களது உறவினர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் 51 மில்லியன் ரூபாவை கடனாக வழங்கியுள்ளனர். வங்கி விதிமுறைகளின்படி, ஒருவருக்கு வழங்கக்கூடிய அதிகப்பட்ச கடன் தொகை 5 இலட்சம் ரூபா மாத்திரமேயாகும்.
எந்தவொரு ஆவணங்களிலும் குறிப்பிடப்படாத வகையில் 60 மில்லியன் ரூபா பணம் மாயமாகியுள்ளமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. இவ்வகையில் சுமார் 150 மில்லியன் ரூபா (15 கோடி) நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் நேற்று(06) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


