Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 08

Share

இரண்டாம் நாள் காலை நிகழ்வில் இளையோர் அரங்கைத் தொடர்ந்து வழக்காடு மன்றம் இடம்பெற்றது.

சுக்ரீவனோடு வாலி பகை கொண்டது குற்றம் என்பது வழக்கு.

வழக்காடு மன்றத்தின் நடுவர் பொறுப்பை மருத்துவர் சுதா சேஷய்யன் ஏற்றிருந்தார்.

வழக்கை கவிதா ஜவகர் முன்வைக்க ம.எழிலரசி அதனை மறுத்தார்.வழக்காடு மன்றம் விறுவிறுப்பாக நகர்ந்தது.

கவிதா ஜவகர் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் அழைப்பில் வருகைதந்து, யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பணியாற்றினார்.

அதனால் அவர் யாழ்ப்பாண மக்களுக்குப் பரீட்சையமானவர்.

வழக்கை மறுத்த எழிலரசி மேடைப்பேச்சை லாவகமாகக் கையாண்டார்.

நடுவர் மருத்துவர் சுதாசேஸய்யன் கம்பராமாயணத்தில் மிகவும் புலமைமிக்கவர். ஒரு மருத்துவரிடம் இருந்த கம்பராமாயணப் புலமை கண்டு உண்மையிலேயே வியந்தேன்.

தவிர… இராமாயணத்தைப் பற்றியும் அவர் அங்கு கூறியமை வித்தியாசமாக இருந்தது.

பொதுவில் வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம், துளசிதாசர் இராமாயணம் என அறிந்த எங்களுக்கு உலகில் 300 இற்கும் மேற்பட்ட இராமாயணக் காப்பியங்கள் இருப்பதான செய்தி ஆச்சரியத்திற்குரியதே.

மருத்துவர் சுதா சேஷய்யன் பல்கலைக்கழக மொன்றின் துணைவேந்தராக இருந்தவர் என்ற செய்தியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் மாலை நிகழ்வில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் சிறப்புரையைத் தொடர்ந்து கம்பன் போற்றும் மாண்பு எனும் பொருளில் இராசு.கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது.

கவியரங்கத்தைத் தொடர்ந்து கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் பட்டிமன்றம்.

ஒப்பற்ற தியாகம் செய்தவர்

இந்திரஜித்தே! மாரீசனே! கும்பகர்ணனே! என்ற பட்டி மன்றத்தில் இந்திரஜித்தே என்ற அணியில் வாதிட்ட கம்பநேசன் வாசுதேவாவைத் தவிர ஏனைய பேச்சாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

புதுச்சேரிக் கம்பன் விழாவில் பட்டிமன்றம் இடம்பெற்று அங்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கான மேன்முறையீடு மூன்றாம் நாள் விழாவில் இடம்பெறுவது வழமை.

அதேநேரம் பட்டிமன்றத்தில் நடுவரின் தீர்ப்பு என்பதற்கு மேலாக, நோக்கர்களின் தீர்ப்புக்கும் இடம் உண்டு. இந்த நடைமுறை கொழும்புக் கம்பன் விழாவிலும் பின்பற் றப்படுகிறது.

பட்டிமன்றம் ஆரம்பமாவதற்கு முன்னதாக 48 நோக்கர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவர்கள் சபையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சான்றாண்மை மிக்கவர்களாக இருப்பர்.

பட்டிமன்றத்தில் வாதப்பிரதிவாதங்களின் நிறைவில் நோக்கர்கள் வாக்களிப்பர்.

இங்கு வாக்களிப்பதென்பது ஓர் அணியை விலக்குவதாக இருக்கும்.

வாக்களிப்பதென்பது மிகவும் நேர்த்தியாக இடம்பெறுவதைப் பார்க்கும் போது, அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணரமுடியும்.

வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர், விசேடமாக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு வாக்குகளை எண்ணி உரிய பதிவுகளைச் செய்வதுடன் நோக்கர்கள் யாரை நீக்கினார்கள் என்பதை அறிவிப்பார்கள்.

மேற்படி நோக்கர்களின் வாக்களிப்பில் ஒருவரின் வாக்கு செல்லுபடியற்றதாக, 41 நோக்கர்கள் ஒப்பற்ற தியாகி என்பதில் இருந்து மாரீசனை நீக்க வேண்டு மெனத் தீர்ப்பு வழங்க, ஆறு நோக்கர்கள் இந்திரஜித்தை நீக்க வேண்டும் என வாக்க ளித்திருந்தனர்.

ஈற்றில் மாரீசன் நீக்கப்பட, கும்பகர்ணன்-இந்திரஜித் ஆகிய இருவரில் ஒப்பற்ற தியாகி யார் என்பதை அறிவிக்கின்ற பணி பட்டிமன்ற நடுவர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களைச் சார்ந்ததாயிற்று.

இந்திரஜித்துக்காகப் பேசிய கம்பநேசன் வாசுதேவா மிகச் சிறப்பாக வாதிட்டதுடன் அவரின் வாதத்தை சபை இரசித்து மகிழ்ந்த போது, என் தோள் புயங்கள் உயர்ந்தன.

தீர்ப்பு உரையை ஆற்றிய கம்பவாரிதி, ஒப்பற்ற தியாகி என்பதிலிருந்து மாரீசனை நோக்கர்கள் நீக்கியமை சாலப்பொருத்துடையது எனக் கூறியதுடன், அதனை நியாயப்படுத்தும் வகையில் ஆழமான கருத்துக்களையும் முன்வைத்தார்.

ஈற்றில் கும்பகர்ணனையும் இந்திரஜித்தையும் ஒப்புவமை செய்து, ஒப்பற்ற தியாகி கும்பகர்ணன் எனத் தீர்ப்பு வழங்கியபோது சபை கரகோசம் செய்து ஆர்ப்பரித்தது.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link