ஆச்சி அறிவுரை
Share
நீரிழிவு நோய் எங்கள் சமூகத்தை அழிக்கப் போகிறது பேராண்டி…
கடந்த வாரம் வலம்புரிப் பத்திரிகையில ஒரு செய்தியைப் பார்த்தன். எனக்குச் சரியான அதிர்ச்சி. கடவுளே நிலை இப்பிடியே போனால் எங்கட சமூகம் என்னாகும் எண்டுற எண்ணம் என்னை நித்திரை கொள்ள விடேல்லை.
ஓம், யாழ்.மாவட்டத்தில நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகிறது எண்டதுதான் அந்தச் செய்தி.
இதைச் சொன்னது வேற யாரும் எண்டால் பேசாமல் கடந்து போயிருக்கலாம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்ர நீரிழிவு நோய் விசேட வைத்திய நிபுணர் மகாலிங்கம் அரவிந்தன்தான் இதைச் சொல்லி யிருக்கிறார் எண்டால் நிச்சயம் நாங்கள் இது தொடர்பில விழிப்பா இருக்க வேணும் பேராண்டி.
அதிலும் கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாண மாவட்டம் இருக்குதெண்டால் நிலமை கைமீறிப் போயிட்டுது எண்டுறதுதான் அர்த்தம்.
பேராண்டி, முந்தின காலத்தில நீரிழிவு நோயை சலரோகம் எண்டுதான் சொல்லுவினம். அந்தக் காலத்தில சலரோகத்தை “பணக்கார வியாதி” எண்டும் சொல்லுறவை.
ஓம், உடல் உழைப்பில்லாமல் சொகுசா இருக்கிற ஆக்களுக்குத்தான் சலரோகம் வரும் எண்டுறதுதான் அந்தப் பெயருக்கான
காரணம். அந்தக் காலத்தில இந்த நோய் ஆயிரத்தில ஒருத்தருக்குத்தான் இருக்கும்.
ஆனால் இப்ப நிலமை வேற மாதிரியெல்லோ இருக்குது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்ர நீரிழிவுப் பிரிவுக்குப் போனால் நெஞ்சு படபடக்கும். வயது வேறுபாடின்றி இந்தக் கொடிய வருத்தத்தால பாதிக்
கப்பட்டு சிகிச்சைக்காக வாற ஆக்களை அவதானிக்கலாம்.
இதெல்லாம் ஏன் எண்டு கவினிக்காமல் நீரிழிவு நோய் எல்லோருக்கும் வருகுதெண்டு பொத்தம் பொதுவாகச் சொல்ல முடியாதெல்லோ?
பேராண்டி, முதலாவது எங்கட சமூகத்திட்டை உடல் உழைப்பு இல்லை. இரண்டாவது உணவுப் பழக்கம். இது இரண்டும்தான் இதற்கு முதல் காரணம். முந்தி வீடுகளில கிணறே இருக்காது, வீட்டுத் தேவைக்கான தண்ணீரைப் பெண்கள் பொதுக் கிணற்றில அள்ளி தலையிலும் இடுப்பிலும் குடத்தை வைச்சுக் கொண்டு வருவினம்.
குறைஞ்சது ஐஞ்சு பரப்புக் காணிக்குள்ளதான் வீடிருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த வளவு முழுவதும் கூட்டிப் பெருக்குவினம். மண் வீடுகளெண்டதால கிழமைக்கு ஒருக்காச் சாணம் போட்டு மெழுகுவினம். அதோட சமையல்,
பிள்ளை பராமரிப்பெண்டு தலைக்கு மேல வேலை இருக்கிறதால பெண்களு க்கு வருமோ சலரோகம்.
ஆண்கள் காலமை தோட்டத்துக்குப் போனால் பின்னேரம்தான் வீட்டுக்கு வருவினம். அவ்வளவு நேரமும் தோட்டத்தில் வேர்க்கிற வேலை. பிறகெப்பிடி சலரோகம் வரும்.
இதைவிட குரக்கன், சாமை, திணை, வரகு, புழுக்கொடியல், இலைக் கறி வகையெண்டு நஞ்சில்லாத உணவுகள். ஆனால் இப்பத்தையச் சமூகம் கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ், பீட்சா, பர்க்கர், பிரியாணி அது இதுவெண்டு கண்ட கறுமத்தை எல்லாம் திண்டால் சலரோகம் வராமல் இருக்குமோ?
பேராண்டி, சலரோக வருத்தம் எண்டுறது பொது வாங்கி, அது வந் திட்டால் இலவச இணைப்பா எல்லா நோயும் வந்து சேர்ந்திடும். பிறகென்ன நாற்பது கடக்க முன்னமே கிளினிக்குகளுக்கு அலைய வேண்டியதுதான்.
ஆச்சி வருவா…


