தரிசனம்
Share
யாழ்.போதனா வைத்தியசாலை 6
யாழ்.போதனா வைத்தியசாலை எங்களின் சொத்து. வைத்தியசாலைக்குத் தேவை யான வளங்களைத் தருவதற்கு நம் மக்கள் ஒருபோதும் பின்னிற்கமாட்டார்கள்.
எனவே வைத்தியசாலையின் தேவைகளை யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தினால் கூட, நம்மவர்கள் அவற்றை நிச்சயம் பெற்றுத் தருவார்கள்.
இப்போது கூட, யாழ். போதனா வைத்தியசாலையில் இருக்கக்கூடிய முக்கியமான மருத்துவ சாதனங்கள் மற்றும் கட்டிடங்கள் எமது மக்களால் அதிலும் குறிப்பாகப் புலம் பெயர் தமிழ் உறவுகளாலும் அமைப்புக்களினாலும் வழங்கப்பட்டவை.
எனவே வைத்தியசாலையின் தேவையைப் பகிரங்கப்படுத்தும் போது, அவற்றைப் பெற்றுத் தருவதற்கு எங்கள் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு வைத்தியசாலை என்றால், அதன் நுழைவாயிலில் வீல்செயார்கள் அடுக்கி இருக்க வேண்டும்.
அதேபோல விடுதிகள் மற்றும் எங்கெல்லாம் வீல்செயார்களின் பயன்பாடு தேவையோ அங்கெல்லாம் அவை போதுமான அளவு இருக்க வேண்டும்.
அதாவது ஒரு சுப்பர் மாக்கெற்றின் நுழைவாயிலில் எங்கனம் ரொலி (Trolley) அடுக்கி வைக்கப்பட்டுள்ளனவோ அது போல வைத்தியசாலை நுழைவாயிலில் வீல்செயார்கள் அடுக்கி இருப்பது அவசியம்.
தவிர, இயலாத நிலையில் வருகின்ற நோயாளர்களை வீல்செயாரில் அல்லது ஸ்ரெச்சரில் ஏற்றிச் செல்வதற்குப் பணியாளர்கள் தயாராக இருக்கவேண்டும்.
அந்த நிலையை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர்கள் பதவியேற்ற தொடக்க காலத்தில் அதனை அவர் நடை முறைப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்தும் அதனை அவர் அமுலாக்குவார் என்ற நம்பிக்கை இத்தரிசனத்தில் வேண்டுதலாக முன்வைக்கப்படுகிறது.
முறைப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யுங்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையை நிர்வகிப்பது என்பது சாதாரணமான விடயமன்று என்பதை ஏலவே இவ்விடத்தில் பதிவு செய்திருந்தோம்.
தவிர, மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்களைப் பார்வையிடுவது குறித்த விமர்சனத்திற்கு இடமில்லை.
அது உலகம் முழுமையிலும் உள்ள நடைமுறை. அதேநேரம் தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்லாமல், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களுடன் முழுநேரத்தையும் செலவிடுகின்ற வைத்திய நிபுணர்கள் நம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ளனர் என்ற உண்மையை எவரும் மறந்தோ அன்றி குறைத்தோ மதிப்பிட்டு விடக்கூடாது.
எனினும் அத்தகையவர்களின் பெயர்கள் வெளியில் வருவதில்லை.ஆனால் உண்மையில் அவர்களின் சேவை யாழ். போதனா வைத்தியசாலையின் இயங்கு நிலையில் காத்திரமான பங்கை ஆற்றுகிறது என்பதை நாம் உரக்கக் கூறித்தான் ஆக வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தும் வகையில் துரித இலக்கத்தை (Hotline) யாழ்.போதனா வைத் தியசாலை நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும். துரித இலக்கத்தை அறிமுகப்படுத்தும் போது ஆரம்பகட்டங்களில் முறைப்பாடுகள் அதிகமாக இருந்தாலும் கால அசைவில் முறைப்பாடுகள் குறையத் தொடங்கும்.
இங்கு முறைப்பாடுகளின் குறைவு என்பது கவனிப்பின் உச்சமாக இருக்கும்.
வைத்தியசாலையின் பெருந்துயரம்
தகவல் தொழில்நுட்பத்தின் அதீதமான வளர்ச்சி எங்கள் வாழ்வியலில் கணிசமான முன்னேற்றத்தை – வசதி வாய்ப்புக்களை வாரி வழங்கிவருகின்றன.
ஒரு காலத்தில் எங்கள் வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் இருந்து பணத்தை மீளப் பெறுவதாக இருந்தால், வங்கிக்கு சென்று உரிய படிவத்தை நிரப்பி இரண்டு ரூபாய் பெறுமதியான முத்திரை ஒட்டி, அதை ஒப்படைத்து, பெயர் அழைக்கும் வரை நீண்ட நேரம் காத்திருந்தே பணத்தை மீளப்பெறமுடியும்.
அதிலும் ஒரு வாரத்தில் இரண்டு தடவைகள் மட்டுமே அவ்வாறு பணத்தை மீளப்பெற லாம். ஆனால் இப்போது நடுநிசியிலும் வங்கியில் பணம் பெறலாம்.
தவிர கையில் காசு இல்லாமலே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.
ஆனால் ஒரு குறித்த நோயாளி ஏலவே யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் இருந்திருந்தால் அல்லது தனியார் வைத்தியசாலையில் ஒரு வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெற்று அவரின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெறுபவராக இருந்தால், அவரை மீளவும் வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கும் போது, சம்பந்தப்பட்ட வைத்திய நிபுணரின் விடுதியில் அனுமதிப்பது வழமை. அது சரியான ஏற்பாடும் கூட.
ஆனால் குறித்த நோயாளி விடுதியில் அனுமதிக்காகச் சென்ற நாள்; இன்னொரு விடுதிக்குரிய அட்மிசன் நாளாக (Admission Day) இருந்தால், பிரஸ்தாப நோயாளி அந்த விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மறுநாளே அவருக்கு உரித்தான விடுதிக்கு மாற்றப்படுகிறார். இதுவே யாழ்.போதனா வைத்தியசாலையின் பெரும் துயரமாகும்.
ஆம், ஒரு நோயாளி ஏலவே குறித்த ஒரு விடுதியில் தங்கியிருந்து அல்லது அந்த விடு திக்குரிய மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்றிருப்பின், அவர் எந்த நாளில் விடுதி அனுமதிக்குச் சென்றாலும் அவரை அவருக்கு உரித்தான விடுதியில் அனுமதிப்பதில் இருக்கக் கூடிய தடைகள் என்ன? என்பது தான் தெரியவில்லை.
ஆம், ஒரு விடுதிக்கான அட்மிசன் நாளில், அந்த விடுதியானது ஆடி அமாவாசை காலத்து கீரிமலைத் தீர்த்தக் கரைபோல காட்சியளிக்கும்.
இங்கு தான் புதிய நோயாளர் தவிர, ஏனைய நோயாளிகள் எந்த நாளில் விடுதி அனு மதிக்காக வந்தாலும் அவர்கள் எந்த வைத்திய நிபுணரின் சிகிச்சைக்கு உட்பட்டவரோ அதற்கான விடுதியில் அவரை அனுமதிக்கும் போது அட்மிசனுக்குரிய வாட்டுகளின் மூச்சுத்திணறல் குறைவதற்கும் வாய்ப்புண்டு.
எனவே இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்பலாம்.
தொடரும்…


