குழந்தைகளை ஓத்துழைக்கக்கூடிய குழந்தைகளாக வளர்த்தெடுக்க
Share
குழந்தைகளை வளர்ப்பதென்பது, பெற்றோருக்கு மிகவும் சவாலான விடயமாக இருக்கிறது. பலரும் கேட்கின்ற கேள்வி, நாம் குழந்தை வளர்ப்பு பற்றி ஏன் அறிந்திருக்க வேண்டும் என்பதாகும்.
முன்பு பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பு பற்றிய எவ்வித அறிதலோ புரிதலோ இல்லாமல் கூட அதை இயல்பாகவே செய்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக, முன்னர் குழந்தைகளைச் சுற்றி காணப்பட்ட சூழல் மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.
கூட்டுக் குடும்பம், தெரிந்த கிராமச் சூழல் என ஒன்றாக இயங்கும் ஒரு சூழலிலே குழந்தைகள் வளர்ந்தனர். அதோடு அன்றைய காலத்தில் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் மத்தியில் வளர்ந்தனர். ஆனால் இன்று, கருக்குடும்பம் என்ற ரீதியில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் இன்றி குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இதில் சாதக பாதகமான பல விளைவுகள் காணப்படுகின்றன.
இன்று, எந்தவித தொடர்பும் அற்ற தனித்தனியாக இயங்குகின்ற சமூகச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவை அனைத்துமே குழந்தை வளர்ப்பை பெருமளவு பாதிக்கக்கூடியவை.
அத்துடன் முன்பு, பல குழந்தைகள் ஒரு குடும்பத்தில் காணப்பட்டனர். இன்று ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் காணப்படுவார்கள்.
அத்துடன் இந்த ஓரிரண்டு குழந்தைகளை மிகவும் கண்காணிப்புடன், உண்ணிப்பாக வளர்க்க பெற்றோர்கள் எத்தனிப்பார்கள்.
இவ்வாறு இருப்பதால், அந்த குழந்தைக்கான ஒரு வெளி இல்லாமல் போகிறது. இது, அந்த குழந்தை மிகவும் நெருக்கடியான சூழலில் வளர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.
இன்றைய சமூகத்தில், சிறுவர்கள் சார்ந்த பல பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு சம்பந்தமாகவே காணப்படுகின்றன. இதனால், குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
குழந்தை வளர்ப்பில் இரு வகைகள் காணப்படுகின்றன. முதலாவது, மிக இறுக்கமான அதிகாரம் மிக்க குழந்தை வளர்ப்பு.அடுத்ததாக எந்தவித அதிகாரமும் இல்லாத ஆதரவற்ற குழந்தை வளர்ப்பு.
இவை இரண்டுமே எதிரெதிர் முனைகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, அதிகாரம் மிக்க குழந்தை வளர்ப்பைப் பார்த்தோமானால், இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் ஒதுங்கி வாழுகின்ற ஒரு நிலைமை காணப்படும்.
அவர்கள் சுயமாக தங்களுடைய கருத்தை தெரிவிக்காமல், அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். அதேபோல், கட்டுப்பாடற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தை வளர்ப்பைப் பார்த்தோமானால், இவ் வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் எப்போதும் முரட்டுத்தன்மையாக பிடிவாதமாக இருப்பதைக் காணலாம்.
ஆனால் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு என்பது சில சட்டதிட்டங்களைக் கொண்டிருந்த போதிலும், குழந்தை வளர்வதற்கான உளவியல் ரீதியான வெளி காணப்படுகின்றது.
தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், தனக்கு விருப்பமானதை சுதந்திரமாக செய்வதற்கான நிலைமை காணப்படுகிறது. இத்தகைய ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு ஏன் முக்கியம் என்றால், பெரும்பாலும் இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் ஒத்து ழைக்கக்கூடிய குழந்தைகளாக காணப்படுகின்றனர்.
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு என்பது சில முக்கியமான பண்புகளை கொண்டிருக்கின்றது. ஒரு குழந்தை, தனது வாழ்வை பாதுகாப்பற்றதாக உணர்வது, பெற்றோருக்கிடையில் ஏற்படும் சண்டைகளால் ஆகும்.
எனவே, பெற்றோருக்கிடையிலான சுமூகமான உறவு, ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பிற்கு மிகவும் அவசியமாகும்.
அடுத்ததாக, குழந்தையை வளர்க்கும் விடயத்தில் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளால் குழந்தை சற்று குழப்பமடைகிறது.
ஆகவே, இந்த முரண்பாடுகளற்ற ஒத்த நடைமுறை சாத்தியமான அணு குமுறை மிக முக்கியமாக தேவைப்படுகிறது. அடுத்ததாக, இம்முறையில் குழந்தைகளுக்கான தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன.
இதற்குள் குழந்தைகள் தங்களது செயற்பாடுகளைச் செய்வதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது. பொதுவாக, பெற்றோர்கள் ஒரு முகமலர்ச்சியுடன் குழந்தைகளை அணுகுவது அவசியமாகும்.
அதேபோல் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக தூண்டல் செயற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு ஐம்புலன்களாலும் தூண்டற் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது, குழந்தையில் அதற்கான துலங்கள் வெளிப்படும். மிக முக்கியமாக குழந்தைகளுடனான தொடர்பாடலை, ஆரோக்கியமானதாக தெளிவானதாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக குழந்தைகளில் வார்த்தைப்படுத்தல் என்பது கடினமானதாக இருக்கும். அதோடு, விளங்காமல் இருக்கும். எனவே தெளிவான வார்த்தைப்படுத்தலும் அவசியமாகும்.
அத்துடன், குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்கள் விளையாடுவதும் அவசியமாகும். அடுத்து மிக முக்கியமாக, இன்னொரு குழந்தை வந்தவுடன், மற்ற குழந்தையுடன் இருக்கும் உறவை சற்றே வித்தியாசமாக கையாளும் போது, குழந்தை பாதிக்கப்படுகின்றது.
எனவே, இதில் எந்த வித்தியாசமான உணர்வும் குழந்தைக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமையாகும். எனவே, குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமாக கற்றுத்தெரிய வேண்டிய ஒரு கலை ஆகும்.
ஆகவே, மிக அதிகாரமான குழந்தை வளர்ப்பை தவிர்த்து , எந்தவித கட்டுப்பாடுமற்ற ஆதரவற்ற குழந்தை வளர்ப்பையும் தவிர்த்து, இவற்றிற்கு நடுவிலே ஒரு ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒத்துழைக்கக்கூடிய குழந்தைகளை வளர்த்தெடுக்கலாம்.
DR. S. சிவதாஸ்
உள மருத்துவ நிபுணர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.


