மனதை வருத்திய சடலத்தை பொறுப்பேற்குக எனும் செய்தி பேராண்டி…
Share
களுத்துறை ஹொரணை பகுதியில் இயங்கின முதியோர் இல்லம் ஒன்றில கடந்த வாரம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில 13 முதியவர்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கினம் என்ற செய்தியைப் படிக்க நெஞ்சம் பதைபதைச்சுப் போச்சுது.
ஓம் பேராண்டி, எதிர்பாராத நேரத்தில தீப்பரவல் ஏற்பட்டதால வயது முதிர்ச்சி உடல் நலைக் குறைவுப் பாதிப்பில இருந்த முதியவர்கள் தீயில இருந்து தப்பிக்க எவ்வளவு பாடுபட்டிருப்பினம்.
கடவுளே எங்களைக் காப்பாற்று எண்டு எவ்வளவு அந்தரப்பட்டு அந்த உயிர்கள் போயிருக்கும் எண்டு நினைக்க நெஞ்சம் பதறுது.
அதைவிடக் கொடுமை இறந்த முதியவர்களின்ர உடல்கள் அனைத்தும் அரச செலவில அடக்கம் செய்யப்பட்ட தெண்டுறதுதான்.
பேராண்டி, அண்டைக்கு பேப்பரில “சடலத்தைப் பொறுப்பேற்குக” எண்டொரு செய்தி வந்திருந்தது.
வாசிச்ச எனக்கு பெரிய அதிர்ச்சி. ஓம் பேராண்டி வழமையா இப்படிச் செய்தி வாறது தான். ஆனால் இறந்தவர் கொழும்பு, கண்டி முகவரியைச் சேர்ந்தவரா இருப்பார்.
ஆனால் இந்தச் செய்தியில கொக்குவில் மேற்கைச் சேர்ந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துவிட்டார்.
அவரின் உறவினர்கள் அவரது உடலைப் பொறுப்பேற்கவும் எண்டு இருந்தது அந்தச் செய்தி.
பேராண்டி, முந்தி எங்கையோ வெளிநாட்டில நடந்ததெல்லாம் இப்ப எங்கட சமூகத்துக்குள்ள நடக்குது.
ஓம், யாழ்.போதனா வைத்தியசாலையில இருந்து மூன்று கிலோமீற்றருமில்லை கொக்குவில். கொக்குவில்லில இருக்கிற ஒரு வருக்கு சொந்தம் பந்தம் சுற்றம் இல்லை எண்டு நினைக்க மனசு கனத்துப் போச்சுது பேராண்டி.
மரணமெண்டுறது ஓரு மனிசனின்ர இறுதி அத்தியாயம். ஒருவர் மரணமடைந்து விட்டார்.அவருக்கு குடும்பம் பிள்ளை, குட்டி இல்லையெண்டால் சொந்த பந்தமிருக்கும் தானே? அதுவுமில்லாட்டி ஊரவராவது இருப்பினம் தானே?
அந்தப் பிரேதத்தைப் பொறுப்பேற்க ஆள் வராட்டி போதனா வைத்தியசாலை அரச செலவில அடக்கம் செய்யும். இதவிட்ட கொடுமை ஏதுமிருக்குமோ பேராண்டி.
நாங்கள் என்னத்துக்கெல்லாம் கௌரவம் பார்ப்பம். இந்த விடயத்தில ஒருத்தருக்கும் கௌரவக் குறைச்சல் ஏற்படவில்லையோ. இந்தியா கேரளவில பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு கடும் சிறைத் தண்டனை விதிச்சிருக்குது கேரள நீதிமன்றம்.
இங்கையும் அதே மாதிரியான சட்டங்களை கொண்டுவர வேணும். அப்ப தான் பெற்றவர்களின் இறப்பாவது நிம்மதியானதாக இருக்கும்.
ஆச்சி வருவா…


