பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்
Share
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவராக அந்த நாட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனுடன், அமினுல் இஸ்லாம் தலைமையிலான தற்போதைய பணிப்பாளர் சபையை கலைக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற சபைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அது குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், தேர்தல் நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் பலவீனங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே, 2018 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு சபை சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்போதைய சபை கலைக்கப்பட்டுள்ளது.
37 வயதான தமிம் இக்பால், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மிக இளைய தலைவராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். அவர் தலைமையிலான 11 பேர் கொண்ட இந்த இடைக்கால குழுவில் முக்கிய உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அணித்தலைவர் மின்ஹாஜுல் அபெடின், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான அத்தர் அலி கான். ரஷ்னா இமாம், மிர்சா யாசிர் அப்பாஸ், சையத் இப்ராஹிம் அஹ்மத் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைக்காலக் குழு அடுத்த மூன்று மாதங்களுக்கு சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன், இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் முறைப்படியான தேர்தலை நடத்தி புதிய சபையைத் தெரிவு செய்ய வேண்டியது இந்தக் குழுவின் பிரதான பொறுப்பாகும்.
இந்த மாற்றங்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய விளையாட்டு சபை தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், 391 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், அதே ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கிரிக்கெட் விளையாடுவதை முற்றாக நிறுத்திக்கொண்டார்.
கடந்த தேர்தலில் போட்டியிட முயன்ற போதிலும், அப்போதைய தலைவரின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அவர் விலகியிருந்த நிலையில், தற்போது தலைவராகப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


