நல்ல தூக்கம் வருவதற்கு..
Share
நான் 64 வயதுப் பெண். இரவில் தூக்கமில்லாமை பெருங் குறைபாடாக உள்ளது. இரவில் நித்திரை கொள்ள வராது என்பதற்காக பகலில் நித்திரை கொள்வதுமில்லை. மற்றவர்கள் மாதிரி விடியும் வரை படுக்கையில் படுக்காமல். எழும்பி, திரிந்து, கதிரைகளில் இருந்து இரவைக் கழிக்க வேண்டியுள்ளது. இவ் வியாதி 5,6 வருடங்களாகத் தொடர்கின்றது. பிறசருக்கும் மருந்துகள் பாவிக்கின்றேன். தினமும் இரவு நல்ல தூக்கம் வருவதற்கு ஏதேனும் பரிகாரம் தங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.
உங்களுக்கு நீண்டகாலமாக நித்திரைக் குழப்பம் இருப்பதால் நீங்கள் அதற்கான காரணிகளைக் கண்டறிந்து நீக்குவதுடன், நித்திரைச் சுகாதாரத்தையும் பேண வேண்டும். இவற்றிற்கும் மேலதிகமாக உங்களுக்கு நித்திரைக் குழப்பம் ஏற்படின் உளநல வைத்தியர் ஒருவரை நேரடியாக அணுகி ஆலோசனை பெற்றுக்கொள் ளுங்கள்.
- உங்கள் குருதிக் குளுக்கோஸ் மட்டமும் குருதியமுக்கமும் நியம மட்டத்தில் பேணப்படுகின்றது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- நித்திரை சுகாதாரத்தை பேணுங்கள் (sleep hygiene)
- உங்கள் இரவு உணவை வேளையுடன் உண்ணுங்கள்.
- தினமும் உடற்பயிற்சி செய்யுங் கள். (20 நிமிடம், 4 -5 மணி நேரம் அல்லது நித்திரைக்கு முன்னதாக)
- சுடுநீர்க் குளியலின் பின் தூங்கச் செல்லுங்கள்.
- நித்திரையைத் திணித்து மேற்கொள்ளாதீர்கள். தூக்கம் வரும் போதே படுக்கைக்குச் செல்லுங்கள்.
- வயதிற்கேற்ற வகையிலேயே தூங்கும் நேரம் காணப்படும் என்பதால் தினமும் நித்திரைக்குச் செல்லுகின்ற, நித்திரையால் எழுகின்ற நேரங்களை ஒழுங்காக வகுத்து கடைப்பிடியுங்கள்.
- நித்திரைக்குச் செல்ல முன் அதிக நீர் அருந்துவதைத் தவிருங்கள். இதன் மூலம் இரவில் சிறுநீர் கழிப்பதற்க்காக நித்திரையில் எழுவதைத் தவிர்க்க முடியும்.கபீன் (caffeinated beverages) உடைய பானங்களை கோப்பி, தேநீர், மென்பானங்கள் என்பவற்றை பின்னேரத்தில் (6PM) பின்னர் அருந்தாதீர்கள்.
- பசியுடன் நித்திரைக்குச் செல்லாதீர்கள்.
- நித்திரைக்குச் செல்ல முன் இயன்றளவு உங்கள் கவலைகளைத் தீர்க்க முயலுங்கள். அன்றைய நாள் சம்பவங்களை தினக்குறிப்பேட்டில் எழுதுங்கள்.
- மதுபானம் அருந்துதல், புகைப் பிடித்தலைத் தவிருங்கள்.
- பகலில் அதிகம் தூங்குவதைத் தவிருங்கள்.
- உங்கள் படுக்கைச் சூழலை உங்களுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். (தேவையான அளவு காற் றோட்டம், ஏற்ற அறை வெப்பநிலை, மென்வெளிச்சம், சத்தமற்ற ஃ உங்களுக்கு விரும்பிய மெல்லிசை, உங்களுக்கு ஏற்ற அறை நிறம், உங்களுக்கு ஏற்ற போர்வை, உங்க ளுக்கு ஏற்ற மெத்தை… போன்றன)
- படுக்கையை நித்திரைக்காக மட்டும் பயன்படுத்துங்கள். (படுக் கையிலிருந்து தொலைக்காட்சி பார்த்தல், உணவுண்ணல் போன்ற வற்றைத் தவிருங்கள்)
- படுக்கையறையைத் தூய்மையாக வைத்திருங்கள்.
- உங்களுக்குப் பிடித்த கதைப் புத்தகம், மன அமைதி தரவல்ல நூல்களை நித்திரைக்குச் செல்ல முன் படிக்கலாம்.
- மன அமைதியை ஏற்படுத்துங்கள்.
நான் 32 வயதுடைய பெண். எனது நிறை 75kg உயரம் 157cm எனக்கு முடி உதிர்தல் பிரச்சி னைக்காக வைத்தியரிடம் ஆலோசனை பெற்ற போது FBS – Mg/dl ஆக இருந்தது. அதனை ஒரு வைத்தியர் நீரிழிவு இல்லை எனவும் இன்னொரு வைத்தியர் நீரிழிவு முன்நிலை (prediabetic) எனவும் கூறினர். நீரிழிவு தொடர்பான எனது உடல் நிலையைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
உங்களது உடற்திணிவு சுட்டி 30.42kgm-2. சாதாரணமான உடற்திணிவு சுட்டி 18-23kgm-2 என்பதால் உங்களது உடல்நிறையை நியம மட்டத்தில் பேணுவது அவசியமானதாகும். இரு வைத்தியர்களும் சரியாகத்தான் கூறியிருக்கிறார்கள். prediabetic முன்நிலை என்பது FBS பெறுமானம் 100-126 mg/dl இருக்கும் நிலையாகும்.
நீங்கள் உங்களது உடல்நிறையை நியமமட்டத்தில் பேணுவதனூடாக அதாவது உண வுக்கட்டுப்பாடு, போதிய உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதையும் நீரிழிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தாமதிக்க முடியும். நீங்கள் பேண வேண்டிய உடல் நிறை 56kg ஆகும்.
எனக்கு வயது 30 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல் மெலிவடைந்து போகின்றது நான் எவ்வளவு காலம் வாழலாம்? நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்பதற்காக மனமுடைந்து போக வேண்டிய அவசியமில்லை.
இள வயதில் நீரிழிவு ஏற்படுவது தற்போது பொதுவான ஒரு விடயமே. இதனைப் பூரணமாகக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரவும், இதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் பல விதமான நல்ல மருத்துவ முறைகள் கண்ட றிப்பட்டுள்ளன.
சரியான மருத்துவ ஆலோசனையைக் கடைப்பிடித்து இளவயதில் கண்டறியப்பட்ட பல நோயாளர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்கள். எனவே நீங்களும் மன ஊக்கத்துடன், உங்களின் வைத்திய ஆலோசனை களுக்கமைய நடந்து கொண்டால் பாரதூரமான தாக்கங்கள் ஏதுமின்றி நீண்டகாலம் சாதாரண வாழ்க்கை வாழமுடியும்.
எனக்கு வயது 31. எனது இரண்டு விதைகளும் விதைப்பையினுள் இருக்கின்றது. ஆனால் ஒன்று உயரமானதாகவும் மற்றையது பதிவாகவும் உள்ளது. இது ஒரு நோயா? இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர வித்தியாசம் என்பது இயற்கையானது. இது நோயின் அறிகுறி அல்ல. உங்களுடைய விதைப்பையில் ஒரு விதை மாத்திரமே இருந்து மற்றையதை அடை யாளப்படுத்த முடியாமல் இருந்தால் உடனடியாக நீங்கள் வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும். விதையானது விதைப்பையினுள் இறங்காது வயிற்றினுள்ளேயே காணப்படின் பல பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் உங்கள் விதையானது விதைப்பையினுள் இறங்கியிருப்பதால் இது பற்றிக் கவலை கொள்ளத்தேவையில்லை.
எனக்கு உடம்பு முழுவதும் அடிக்கடி கடித்து, தடித்து பின் தானாக மறைகின்றது. தோலில் நிரந்தரமான எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலைமை ஆறு மாதங் களுக்கு மேலாக நீடித்து வரு கின்றது. இந்த நிலைமைக்கு காரணம் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்.
இந் நிலைமையானது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகின்றது. இவ் ஒவ்வாமை நிலைமையானது சில வகை உணவுகள், சுற்றாடலில் காணப்படுகின்ற ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற சில பதார்த்தங்களைத் தொடுவதன் மூலமும், சுவாசிப்பதன் மூலமும் இந் நிலைமை ஏற்படலாம்.
எனவே இந் நிலைமையைத் தோற்றுவிக்கும் காரணிளைக் கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சிலரில் இந்நிலைமையானது எந்த விதமான காரணங்களும் கண்ட றியப்படாமலும் ஏற்படலாம். இதனை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வாமையைத் தடுக்கும் சில மாத்திரைகள் பாவிக்க வேண்டி ஏற்படலாம்.
சில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளாகக் கூட மேற்கூறிய நிலைமை காணப்படலாம். உங்களுக்கு இந்த நிலை மையானது 6 மாதங்களுக்கு மேலாக நீடிப்பதால் வைத்தியர் ஒரு வரை நாடி சில சோதனைகளும், அறிவுரைகளும், சிகிச்சை முறைகளும் பெற்றுக் கொள்வது நல்லது.
சி.சிவன்சுதன்,
பொது வைத்திய நிபுணர்,
யாழ். போதனா வைத்தியசாலை.


