Type to search

Articles Headlines இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

எதிர்மறை மனோபாவம்!

“கல்யாணத்துக்குப் போய் இருந்தாயே. எப்படி இருந்தது?” என்று கேட்டார் ஒருவர்.“எப்படி இருந்தது. இரசத்திலே உப்புக் குறைவு!” என்றார் அவர். இது ஒரு மனித சுபாவம்.


negative விடயங்களை பார்ப்பது பேசுவதினாலேதான் மனிதனுக்கு ஆர்வம் அதிகம். இரசத்திலே உப்பு குறைவு என்பது ஒரு குறைதான். ஆனால் சாம்பாரிலே அது சரியா இருந்தது. காய்கறியிலே அது சரியாக இருந்தது. அதையெல்லாம் சொல்ல மனது வரவில்லை பாருங்கள்.


ஒரு பெரிய வெள்ளைப் பேப்பர் நடுவிலே ஒரு சின்ன கருப்புப் புள்ளியை வைத்து அதை ஒருவரிடம் நீட்டி அது என்ன என்று கேட்டால் கருப்புப் புள்ளி என்றுதான் சொல்லுவார்.


அவர் ஒரு சின்ன கருப்புப் புள்ளியைத்தான் கவனிக்கிறார். புள்ளியைச் சுற்றி பேப்பர் முழுவதும் வெள்ளைப் பகுதியாக இருக்கு அதை கவனிப்பதில்லை.


ஒரு கண்ணாடி முன்னாலே போய் நிற்கிறோம். முகத்தைப் பார்க்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முகத்திலே நமக்குப் பிடிக்காத பகுதியைத்தான் முதலிலே கவனிப்போம். ஒரு பரு இருந்தால் அதைப் பார்ப்போம். ஒரு கரும்புள்ளி இருந்தால் அதை கவனிப்போம். ஒரு சின்னக் காயம் இருந்தால் அதை கூர்ந்து பார்ப்போம். அதைச் சுத்தியிருக்கின்ற அழகான பகுதிகளை எல்லாம் அதற்கு அப்புறம்தான். ஒன்றும் வேண்டாம். காலையிலே ஒரு செய்தித்தாளை வாங்கி பார்க்கிறோம். எதிர்மறையான செய்திகளைத்தான் முதலிலே பார்ப்போம். ஆக்கப்பூர்வமான செய்திகள் அதற்குப் பிறகுதான். negative விடயங்கள்தான் பத்திரிகை விற்பனைக்கு முக்கியம். ஒரு கும்பலிலே கலவரம்.


பேப்பரிலே செய்தி எப்படி வருகிறது? கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள் என்றுதான் வரும. கலவரத்தில் 918 பேர் உயிரோடு திரும்பிப் போனார்கள் என்று வராது.


எத்தனை பேர் இறந்தார்கள் என்பதுதான் பத்திரிகைக்கு முக்கியம். ஏன்னென்றால் மனித மனம் அதைத்தான் கவனிக்கிறது.


பாதகமான செய்திகளே பத்திரிகைகளிலே அதிகம் வருகிறது. எதிர்மறையான விடயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இதனாலே என்ன ஆகுது தெரியுமா?


இந்த உலகத்திலே எங்கே பார்த்தாலும் கொலையும் – கொள்ளையும் விபத்தும் உயிரிழப்பும்தான் நடந்துகொண்டிருக்கிற மாதிரி ஒரு பிரம்மை. உலகத்து மகிழ்ச்சிகளையெல்லாம் வாழ்வின் சந்தோஷங்களை யெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.


இன்று விமான விபத்தில் 214 பேர் உயிரிழந்தார்கள் என்பது negative விடயம்.


இன்று விமானம் மூலமாக 2 இலட்சம் பேர் சௌக்கியமாக சந்தோசமாக பயணம் செய்தார்கள் என்பது Positive விடயம். இறந்ததுதான் செய்தியாக வரும். சௌக்கியமாக போனவர்களைப் பற்றி வெளியே தெரியாது. வாழ்க்கையின் சாதகமான விடயங்களிலே கவனம் செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த உலகத்திலே சந்தோஷப்படுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கு சார். அதையெல்லாம் கவனித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருநாள் முழுவதும் நல்லா நடந்து கொண்டிருப்பீர்கள். ஏதோ ஒரு நேரத்திலே வாழைப்பழத் தோலிலே வழுக்கி விழுந்திருப்பீர்கள். வழுக்கி விழுந்ததைத்தான் பெரிதிபடுத்திக் கொண்டிருப்பீர்கள். நாள் முழுவதும் நல்லா நடந்தது பெரிசா தெரியாது. நம் பலம் என்ன என்பதிலே அதிக கவனம் தேவை. தோல்வி மனப்பான்மை- negative attitudes.


தாழ்வு மனப்பான்மை – negative self image எதிர்மறையாகவே நினைக்கிறது. பேசுவது இந்த குணத்தை மாற்றிக்கொள்ளாதவன் எந்தக் காலத்திலேயும் முன்னேற முடியாது – வெற்றிகரமான மனிதன் ஆக முடியாது. அதனாலே இந்த நிமிடத்திலே இருந்து negative விடயங்களிலே இருந்து உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். Positive விடயங்களிலே கவனத்தைச் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம்.


ஒரே விடயத்தைக்கூட சிலபேர் Positive ஆக எடுத்துக் கொள்வார்கள். சிலபேர் negative ஆக எடுத்துக் கொள்வார்கள். ஒரு சத்திரத்திலே இரண்டு சாமியார்கள் சந்தித்து கொண்டார்கள். அவர்கள் கதையை பேசிக்கொண்டார்கள். “எனக்கு மனைவி இல்லை. அதனாலே நான் சாமியாராக ஆகிவிட்டேன்!” என்றார் ஒருவர்.
“எனக்கு மனைவி இருக்கிறதா அதனாலே நான் சாமியாராகி விட்டேன்!” என்றார் இன்னொருவர்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link