200 பழைய தபால் நிலையங்களை நவீனமயமாக்க 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
Share
நாடு முழுவதும் உள்ள 200 பழமையான தபால் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக தபால் அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்ட பகவந்தலாவ பிரதேச தபால் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்கள் ஐதீகமாக்கப்படும் உத்தியோகபூர்வ நிகழ்வில் நேற்று (16) கலந்துகொண்டு உரையாற்றும் போதே தபால் அதிபர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பழமையான தபால் நிலையங்களை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உகந்த மற்றும் பிரியமான இடங்களாக மாற்றுவதே தனது முதன்மை நோக்கம் என தபால் அதிபர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தபால் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இவ்வாறு நவீனமயமாக்கப்படும் தபால் நிலையங்களுக்கு விசேட வருமானம் மற்றும் சேவை இலக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் மூலம் இந்த புனரமைப்புப் பணிகளுக்காக செலவிடப்பட்ட நிதியை மீண்டும் ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தபால் நிலையங்களுக்குள் வழங்கப்படும் சேவைகளை வெளிப்படைத்தன்மை கொண்ட கண்ணாடி சாளரங்கள் ஊடாக, மிகவும் வினைத்திறனான முறையிலும் வாடிக்கையாளர் தோழமையுடனும் வழங்குமாறு அவர் தபால் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி தபால் அதிபர் துசித ருலங்கமுவ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


