Type to search

Headlines Local News News

சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Share

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தமாக 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், உணவகங்கள், வெதுப்பகங்கள், ஜூஸ் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல விற்பனை நிலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், மருத்துவச் சான்றிதழ் இன்றி பணியாற்றல், தனிப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள், குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த தவறுதல், கழிவு நீரை சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுதல், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி விற்பனை நிலையம் நடத்தல், சுவர் மற்றும் தரையை அசுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டன.

இதனையடுத்து வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஸ்ரன் ஜோய், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரால் நேற்றையதினம் (24 ) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிமையாளர்களை குற்றவாளிகளாக அறிவித்து மொத்தமாக 235,000 ரூபா அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கியது.

மேலும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலையம் மற்றும் இரண்டு ஜூஸ் கடைகள் என மொத்தம் 3 விற்பனை நிலையங்களுக்கு பூட்டு மற்றும் சீல் வைக்கப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link