Type to search

Headlines Local News News

சட்டவிரோத டின்மீன் தொழிற்சாலை முற்றுகை

Share

முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி, சந்தலங்காவ – இரபடகம பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த டின்மீன் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்று நேற்று (26) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.


இதன்போது, அந்தத் தொழிற்சாலையிலிருந்து சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் இருப்புக்களைத் தங்களது பொறுப்பில் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இம்முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தைக்கு விநியோகிப்பதற்காகச் சுமார் 3,500 டின்கள் பொதியிடப்பட்டுக் கொண்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


அதிக இலாபத்தை எதிர்பார்க்கும் நோக்கில், இத்தொழிற்சாலை போட்டித்தன்மையற்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், காலாவதியாகும் திகதிகளுக்குப் பதிலாகப் போலியான திகதிகளை டின்மீன் டின்னடைகளில் அச்சிட்டுப் பயன்படுத்தியிருந்ததாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


மேலும், டின்மீன் பொதியிடலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த வெற்று டின்னடைகள், சுற்றட்டைகள் மற்றும் போலியான திகதிகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


சந்தையில் இருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


இம்முற்றுகையின் போது முத்திறையிடப்பட்ட டின்மீன்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அடுத்த சில தினங்களில் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அந்த அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link