Type to search

Headlines Local News News

கபிலவிற்கு பிணை வழங்க வந்த போலி உறவினர்கள்

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் பொய்கூறி முன்னிலைப்பட்ட இருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார். 

ஏர்பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் மூன்று நெருங்கிய உறவினர்களின் தலா 100 இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க நீதவான் அசங்க எஸ். போதரகம கடந்த 5ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். 

இதன்படி, நேற்று பிணைப் பணத்தைச் செலுத்துவதற்காக மூவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 

அவர்களில் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் கேசல்கவத்தை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தாங்கள் கபில சந்திரசேனவை யாரென்று அறியோம் என்றும், 15,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டே பிணையாளர்களாக முன்னிலைப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அத்துடன், அவர்களுக்கு நிரந்தரத் தொழில் அல்லது வருமான வழி எதுவுமில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது. 

இதனையடுத்து, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள சாஞ்சிஆராச்சி வத்தை பகுதியைச் சேர்ந்த அந்த இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன், இவர்கள் பிணைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, பிணை நிபந்தனைகளை மீறியுள்ளமையால் கபில சந்திரசேனவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று நீதவான் இன்று பிறப்பித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link