அமெரிக்காவில் ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் சுட்டுக்கொலை
Share
லுாசியானா: அமெரிக்காவின் லுாசியானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஒன்று முதல் 14 வயதுடைய 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நேற்று அதிகாலை ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. குடும்ப சண்டை காரணமாக அங்கிருந்த 11 பேர் மீது, அவர்களது உறவினர் ஒருவர் சுட்டதாக தெரிகிறது.
இதில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஒன்று முதல் 14 வயதுடைய எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இரு பெண்கள் தலையில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், ஒரு சிறுவன் தப்பிக்க முயன்று மாடியில் இருந்து குதித்ததில் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் காரில் தப்பி சென்ற போது, போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஏன், எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.


