மட்டக்களப்பு வாவியில் மீட்கப்பட்ட இரு சடலங்களும் அடையாளம்
Share
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்ட இரு சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னஉப்போடையில் உள்ள வாவியில் நேற்று மாலை இரு சடலங்கள் மிதந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் போது, உயிரிழந்தவர்கள் மாமாங்கம் மூன்றாம் குறுக்கைச் சேர்ந்த 56 வயதுடைய சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் அரசடியைச் சேர்ந்த 36 வயதுடைய சொர்ணலிங்கம் குகேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் கள்விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருவதால், உயிரிழந்தவர்கள் அங்கு வந்தவர்களாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் இரண்டு சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி விசாரணைகளை முன்னெடுத்ததையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


