ஈரான் – சீனா அமைச்சர்கள் சந்திப்பு!
Share
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (6) பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை மற்றும் ஈரானின் நிலைப்பாடு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனத் தரப்பிற்கு விளக்கினார். தனது தேசிய இறையாண்மை மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதன் மூலம், போர் மோதல்களுக்கு அமைதியான முறையில் முழுமையான மற்றும் நீண்டகாலத் தீர்வைக் காண ஈரான் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதல்களைத் தீர்ப்பதற்காக சீன அதிபர் முன்வைத்த நான்கு அம்ச முன்மொழிவுகளை ஈரான் ஏற்றுக்கொள்வதாகவும், மோதல்களைத் தீர்ப்பதில் சீனா செயலில் இறங்கி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சீனா ஈரானின் முழுமையான மூலோபாய பங்காளியாக இருப்பதுடன், ஈரான் எப்போதும் ‘ஒரே சீனா’ கொள்கையைப் பின்பற்றி வருகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 55 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக செய்யது அப்பாஸ் அராக்ஷி தெரிவித்தார்.
ஈரான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிய சீன வெளியுறவு அமைச்சர், ஈரான்-அமெரிக்க போர் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். தனது தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், இராஜதந்திர ரீதியாக மோதல்களைத் தீர்ப்பதற்கும் ஈரானுக்கு சீனா ஆதரவு வழங்கும் என்று அவர் கூறினார்.
வளைகுடா பிராந்திய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளுமே தமது விதியைத் தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார். ஈரான் ஏனைய வளைகுடா நாடுகளுடன் கலந்துரையாடி நல்லுறவை மேம்படுத்தும் என சீனா எதிர்பார்ப்பதுடன், ஈரானுடன் அரசியல் நம்பிக்கையை உறுதிப்படுத்தி பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல சீனா விரும்புவதாகவும் வாங் யீ மேலும் குறிப்பிட்டார்.


