Type to search

Headlines Local News News

இன்று முதல் அதிகரிக்கும் மழை; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Share

அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை , பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 – 35 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link