Type to search

Editorial

விபத்து மரணங்களை கொலைக் குற்றமாக…

Share

யாழ்ப்பாணம் பொஸ்கோ வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பில் கற்கின்ற தனது ஆறு வயதுப் பாலகனை தாயார் முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பலாலி வீதியால் பயணிக்கின்றார்.

திருநெல்வேலிப் பகுதியை அண்மித்த வேளை, பலாலி வீதியால் யாழ். நோக்கி வேக மாக வந்த மினிபஸ் வீதியை விட்டு விலகி, ஆட்டோவை மோதித்தள்ள அந்தோ! ஆறு வயதுப் பாலகன் அந்த இடத்தில் உயிரிழந்து போன சம்பவத்தை எங்ஙனம் மறக்க முடியும்.

இந்த விபத்துத் தொடர்பில் விசாரணை நடந்த போது; இவ்வாறு ஏற்படுத்தப்படும் விபத்தில் உயிரிழப்பு நடக்குமாயின், அதனைக் கொலைக் குற்ற வழக்காகவே பதிவு செய்ய வேண்டுமென நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியதை இங்கு மீள் நினைவுக்கு உட்படுத்த விளைகின்றோம்.

ஆம், விபத்துக்கள் என்பன நினையாப் பிரகாரமாக – எதிர்பாராத வகையில் – தவிர்க்க முடியாத சூழலில் ஏற்படுவதாகும்.

ஆக, இங்கு எந்தத் திட்டமிடலும் இன்றி அல்லது மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற் படுத்த வேண்டும் என்ற நினைப்பு ஏதுமின்றி சடுதியாக நடக்கின்ற விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றபோது, அஃது விபத்து மரணம் என்பதற்குள் அடங்குகிறது.

இதைவிடுத்து, பஸ்ஸும் மினி பஸ்ஸும் போட்டி போட்டு ஓடுவதால் – மோட்டார் சைக் கிளில் அதிவேகமாகச் செல்வதால் – கள்ள மண்ணை ஏற்றிக்கொண்டு வீதியில் சண்டித்தனப் பாங்கில் ஓடுவதால் – மது போதையில் வாகனத்தைச் செலுத்துவதால் – சாரத்திய அனுமதிப்பத்திரம் இல்லாத, வாகனம் செலுத்துவதற்குரிய வயதை அடையாத நபர் வாகனத்தைச் செலுத்துவதால், வீதிச் சமிக்ஞைகளை பொருட்படுத்தாமல் வாகனங்களை ஓட்டுவதால் – கனரக வாகனங்களை வீதியில் இறக்க வேண்டிய நேரக்கட்டுப்பாடுகளை மீறி கனரக வாகனங்களை வீதிக்குக் கொண்டு வருவதால் விபத்துக்கள் ஏற்பட்டு, அதனூடு மரணங்கள் சம்பவிக்குமா யின், அதனைக் கொலை செய்த குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து; சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு மரண தண்டனை விதிக்கின்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தாலன்றி, வீதி விபத்து மரணங்களை ஒரு போதும் தடுக்கவும் தவிர்க்கவும் முடியாது.

ஆம், கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இளம் தாய் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்து போனார்.

முன்பள்ளியில் படிக்கின்ற தன் குழந்தையை ஏற்றிவரச் சென்ற போது, மிக வேக மாகவும் அங்கும் இங்குமாக வீதியில் நெழிந்தும் வளைந்தும் மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓர் இளைஞனால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் அந்த இளம் தாய் உயிரிழந்துபோனார்.

அந்தோ! கொடுமை. பாலர் பள்ளியில் தன் தாய் முகத்தைப் பார்த்திருந்த அந்த பச்சிளம் பாலகனின் நிலையை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

இப்படியே விபத்து மரணம் எனக் கடந்து இன்னொரு விபத்து மரணத்தை அறியப் போகிறோமா? அன்றி இதற்கு ஒரு முடிவு கட்டப்போகின்றோமா? என்பதை எங்கள் நீதிபரிபாலனமே தீர்மானிக்க வேண்டும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link