பொது விதிமுறைகளை பாடசாலையில் போதியுங்கள்
Share
நாடுகளின் முன்னேற்றம்,அந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கம், அவர்களிடம் இருக் கக்கூடிய இரக்க சிந்தனை, மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்பாங்கு என்பன அந்த நாட்டு மக்கள் எந்தளவு தூரம் பொது விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது.
ஆம், அபிவிருத்தியடைந்த நாடுகளை ஒரு கணம் நோக்கினால், அந்த நாட்டு மக்கள் பொதுவிதிகளைப் பின்பற்றுகின்றவர்களாக இருப்பதுடன் அந்நாட்டில் அனைத்து விடயங்களும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமையப் பெற்றிருக்கும்.
உண்மை. எங்கள் நாட்டைப் பொறுத்தவரை பொதுவிதிகளைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
இதை நாம் கூறும்போது பொதுவிதிகளை மீறுகின்ற சம்பவங்கள் எங்கே ஆரம்பமாகின்றன என ஆராய்ந்தால்; அது அரச துறையிலேயே ஆரம்பமாகின்றதெனும் உண்மை தெரிய வரும்.
அதாவது அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தமது கடமைகளை நேர்மையாக ஆற்றுவார்களாக இருந்தால் – பாடசாலைகளுக்கிடையே பாகுபாடுகள் இல்லாமலிருந்தால் – அரச பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்ற கல்வி முறைமையின் அடிப்படையில் மாணவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவார்களாக இருந்தால், எங்கும் பொதுமை நிலைபேறடையும்.
ஆனால் அரச உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளைத் தட்டிக்கழிக்கும்போது அல் லது தமது கடமைகளை பாகுபாட்டுடன் ஆற்றும்போது – பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைப் பேதமைப்படுத்தும் போது சமூக ஒழுங்கு எனும் கட்டுக்கோப்பு உடைந்து போகிறது.
ஆம், வீட்டுக்குப்பைகளை ஏற்ற வருகின்ற சுத்திகரிப்புப் பணியாளர்கள் இலஞ்சம் கேட்கும்போது குறித்த வீட்டுக் குப்பைகள் வீதிக்கு வருகின்றன.
அதனாலேயே நாம் ஏலவே கூறினோம். முதலில் நம் அரச பணியாளர்கள் தமது கட மையை நேர்மையாகச் செய்ய வேண்டுமென்று.
ஆம், நவீன முறையில் புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
ஒரு விமான நிலையத்துக்கு ஒப்பானதாக அமைக்கப்பட்ட அந்தப் பேருந்து நிலையத்தை மக்கள் ஆராதிக்க வேண்டுமல்லவா?
ஆனால் அதுதான் நடக்கவில்லை. பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்ட மறுநாளே நீர்க்குழாய்கள் உடைக்கப்பட்டன. எச்சில் உமிழப்பட்டது. கழிப்பறைகள் அசுத்தமாக்கப்பட் டன எனும்போது இதுதான் நம் நாட்டின் நிலை என்பது தெரிகிறதல்லவா.
ஆக, இதை மாற்றியமைப்பதாயின் பொது விதிமுறைகளைப் பாடசாலைகள், மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் சமூகம் ஒரு சந்ததி கடந்தேனும் திருந்திக்கொள்ளும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


