பொதுமக்கள் பதில் நடவடிக்கை எடுக்காதவரை விபத்துக்களை
Share
நம் மண்ணில் நாள்தோறும் நடக்கின்ற விபத்து மரணங்கள் தொடர்பில் இவ்விடத்தில் பல தடவை பிரஸ்தாபித்து விட்டோம். இருந்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கிளிநொச்சியில் நடந்த விபத்தில் உயிரிழந்து போனார். அது தொடர்பில் கிளிநொச்சியில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அவ்வளவோடு அந்த விபத்துச் சம்பவம் முடிந்து போகும்.
இனி அடுத்த விபத்தை நோக்கிய பயணம் தொட ரும் அவ்வளவுதான். என்ன செய்ய முடியும். போக்குவரத்துப் பொலிஸார் இலஞ்சம் பெற்று மிகப்பெரும் செல்வந்தராகி விட்டார்கள்.
அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் இலஞ்சம் பெறுவதை இலக்காகக் கொண்டு போக்கு வரத்துப் பொலிஸார் செயற்படுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இதை நாம் கூறும் போது, ஜனாதிபதி அநுரவின் ஆட்சியிலும் இலஞ்சமா? என்று நீஙகள் யாரேனும் கேட்கலாம்.
ஜனாதிபதி அநுர அல்ல, சாட்சாத் ஈஸ்வரன் நேரில் வந்தால் கூட, இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் தாண்டவமாடும் இலஞ்சத்தை ஒழிக்க முடியாது.
உண்மை வடமாகாணத்தில் இத்துணை விபத்துக்கள் நடந்துள்ளன. இன்னும் விபத் துக்கள் நடக்கப்போகின்றன. ஆனால் விபத்துக்களைக் குறைப்புச் செய்வதில் போக்குவரத்துப் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விபத்துக்கள் அவர்களின் வியாபாரமாயிற்று.
ஆம், விபத்துக்கள் இடம்பெறும் ஒவ்வொரு தடவைகளும் பணம் இலஞ்சமாகப் பேரம் பேசப்படுகிறது. இதற்கென தரகர் அனைத்து இடங்களிலும் உள்ளனர்.
ஆக, விபத்துக்களை ஏற்படுத்தி எத்தனை மனித உயிர்களைக் காவு கொண்டாலும் இலஞ்சம் கொடுத்து தப்பிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சண்டித்தனப் போக்கு ….. சாரதிகளிடம் ஏற்பட்டு விட்டது.
அதனாலேயே மதுபோதையில் – கையடக்கத்தொலைபேசியில் உரையாடியபடி வாகனங்கள் செலுத்தப்படுகின்றன.
இது தவிர, கள்ள மண்ணை ஏற்றிக் கொண்டு வேகமாக ஓடுவது – வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் சாகசம் காட்டுவது, அதிவேகத்தில் வாகனங் களைச் செலுத்துவது, தனியார் மற்றும் வட பிராந்திய போக்குவரத்து சாலை பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தியடித்துச் செல்வது என எல்லா நாசகாரங்களும் நடந்தாகின்றன.
இவற்றின் பின்னணியில் பொலிஸாரின் இலஞ்ச வேட்டை இருப்பதை இங்கு கூறித் தானாக வேண்டும். இங்கு தான் விபத்துக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் விபத்தின் காரணத்தைத் தீர விசாரித்து அந்த இடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி தக்க நடவடிக்கை எடுத்தால் விபத்துக்கள் சொன்ன மாத்திரத்தில் இல்லாது போகும்.
ஆம், பொதுமக்கள் தக்க நடவடிக்கை எடுக்காத வரை நம் மண்ணில் விபத்துக்களைத் தடுக்க முடியாது.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


