ஈழத் தமிழர்களை கவனியாத மு.க.ஸ்டாலின் போல விஜயும்
Share
ஈழத் தமிழர்களின் அவலம் பற்றி அறவே கதைக்காத தமிழ்நாட்டு மாநில அரசு ஒன்று இருந்ததென்றால், அது மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் என அறுதியிட்டுக் கூற முடியும்.
உண்மை. எம்.ஜி.ஆர், கலைஞர் கருணா நிதி, செல்வி ஜெயலலிதா போன்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தனர். அதன் காரணமாக தமிழக அரசை நாம் மலையாக நம்பினோம்.
எனினும் அந்த நம்பிக்கையை 2009இல் கலைஞர் கருணாநிதி நமக்காக நடத்திய உண்ணாவிரத நாடகம் பலமிழக்கச் செய்தது. பரவாயில்லை. அது கூட அந்நேரத்தில் கலைஞர் கருணாநிதி தன் வயோதிபம் காரணமாக ஏதோ முடிந்ததைச் செய்கிறார் என்றே நாம் கருதினோம்.
ஆனால் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது; ஈழத் தமிழர்கள் பற்றி அவர் இம்மியும் சிந்திக்கவில்லை கதைக்கவில்லை. இதற்குக் காரணம் அவர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்திருந்ததுதான்.
இருந்தும் தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னதாக திமுகவின் வெற்றியின் பொருட்டு தொல்.திருமாவளவன் ஒரு நாடகத்தைத் தயார் செய்தார்.
ஆம், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன்; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களை தமிழகத்துக்கு அழைத்து முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்திக்க வைத்தார்.
என்ன செய்வது தோற்க இருக்கின்ற ஒரு முதலமைச்சரை தேர்தல் காலத்தில் நம்ம வர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று.
இதுபற்றி இவ்விடத்தில் ஏலவே பிரஸ்தாபித்திருந்தோம். தமிழகத்தின் தேர்தல் களம் முடியட்டும் அதன்பிற்பாடு தமிழக முதல்வரைச் சந்திக்க லாம் என்று கூறுவதுதான் பொருத்தம் என் றும் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.
சரி ஏதோ நடந்தாயிற்று என்றிருக்க, இப் போது விஜய் தலைமையிலான தமிழக வெற் றிக் கழகம் 108 ஆசனங்களைப் பெற்று பெரும் பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு அந்த ஆசனங்கள் போதுமானதாக இல்லை.
இங்குதான் த.வெ.க.தலைவர் விஜய் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அதிமுகவின் ஆதரவைப் பெறுவதற்கு முற்பட்டிருக்க வேண்டும்.
எனினும் காலப்பிழை போல திமுகவுடன் கூட்டுச் சேர்ந்த வெறும் ஐந்து ஆசனங் களைக் கொண்டுள்ள காங்கிரஸின் ஆதரவைக் கோர, அது முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கான வழிப்பாதையைத் தடை செய்தது.
தவிர, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தமிழக அரசை விஜய் ஆளுவாராக இருந் தால், அவரும் நம் ஈழத் தமிழர் தொடர்பில் பேசாதிருக்கும் வியூகத்தையே அமைத்துக் கொள்வார்.
ஆக, பிரதமர் மோடியின் ஆதரவைப் பெற்ற தமிழக மாநில அரசால் மட்டுமே எங்கள் தொடர்பில் குரல் கொடுக்கவும் தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தவும் முடியும் என்பது நிறுதிட்டமான உண்மை.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


