வடமாகாண பஸ் சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும்
Share
“சேவை” என்ற சொற்பதம் வந்துவிட்டால் அங்கு மக்களின் நலன் பற்றிய நினைப்பு முதன்மை பெற வேண்டும்.
எனினும் நம் நாட்டைப் பொறுத்தவரை “சேவை” என்ற சொல்லின் மகிமையை சம்பந் தப்பட்ட உத்தியோகத்தர்கள் மறந்து, தங்களின் சுயநலன் பற்றியே சிந்திக்கின்றனர்.
இதன் காரணமாகவே, எங்கள் நாட்டில் சேவைகள் துறை தோல்வியுற்ற துறையாகி வருகிறது.
ஆம், கல்விச் சேவையில் மாணவர்களே முதன்மைக்குரியவர்கள். இதுபோல மருத்துவச் சேவையில் முதன்மைக்குரியவர்கள் நோயாளர்கள். மின்சார சேவையில் பாவனையாளர்களே முக்கியமானவர்கள். இதுபோல வர்த்தகச் சேவையில் வாடிக்கையாளர்களின் நலன்களே முதன்மைக் குரியவை. இவ்வாறே அனைத்துச் சேவைகளிலும் அதன் பயனாளிகள் முதன்மைக்குரியவர்கள்.
ஆயினும் அந்த உண்மையை பூரணமாக உணர்ந்துகொண்டு மக்களுக்குச் சேவைகளை வழங்குகின்ற மனநிலையில் பலர் இல்லை என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
அந்தவகையில் பயணிகளைப் பொறுத்த வரை போக்குவரத்துச்சேவை என்பது முதனமைக்குரியது. அதாவது, போக்குவரத்துச் சேவையென்றால் அங்கு பயணிகளின் நலன்களே முதன்மைப்பட்டவை.
இதை நாம் கூறும்போது, சில பயண இடங்களுக்குப் போதிய பயணிகள் இல்லை என்பதற்காக பஸ் சேவையை இரத்துச் செய்கின்ற நடைமுறைகள் போக்குவரத்து நிர்வாகங்களில் உண்டு.
ஆனால் அஃது முறையன்று. தனித்து ஒரு பயணியாக இருந்தாலும் அவரின் நம்பிக் கையின் பொருட்டு குறித்த பஸ்சேவை இடம்பெற வேண்டும்.
இது தவிர, பிரஸ்தாப பயணி செல்ல வேண்டிய தேவை முக்கியமானதாக இருக்கலாம். எனவே பஸ்சேவை, குறித்தொதுக்கப்பட்ட நேர அட்டவணைப்படி நடந்தா குவது கட்டாயமானது.
இதற்கு அப்பால், போக்குவரத்து பஸ் சேவையில் மாற்றங்களும் புதிய சேவைகளை ஆரம்பிப்பதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆம், ஏலவே இருந்த போக்குவரத்துப் பாதைகளையே தொடர்ந்தும் பின்பற்றுவ தென்பது பொருத்தமற்றது. காலசூழலுக்கு ஏற்ப போக்குவரத்துப் பாதைகளை – சேவை நேரங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கலாம்.
உதாரணத்திற்கு யாழ்ப்பாணம் பிறவுண் வீதி இப்போது தனியார் கல்வி நிறுவனங் களின் அமைவிடமாக மாறியுள்ளது.
அதாவது, குறித்த ஒரு நேரத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் பிறவுண் வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு வந்து செல்கின்றனர்.
எனினும் அந்த வீதியில் பஸ் போக்குரத்து இன்மையால், மாலைப்பொழுதில் மாண வர்கள் குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து யாழ். பஸ் தரிப்பு நிலையத்திற்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வதைப் பார்க்கும் போது, எங்களிடம் ஆன அதிகாரிகள் எவரும் இல்லையோ என்று எண்ணத்தோன்றும்.
ஆம், குறித்த மாணவர்களின் நலன் கருதி பஸ்சேவை பிறவுண் வீதியையும் இணைத்து மேற்கொள்ளப்படுமாக இருந்தால், அந்த மாணவர்கள் பஸ் சென்று விடுமோ என்ற ஏக்கம் இன்றி – பதற்றமின்றி பஸ் சேவையைப் பெறமுடியும்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதுவிடயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பார்கள் என நம்பலாம்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


