ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
Share
நம் தமிழ்ப் பழமொழிகள் பொருள் செறிந்தவை மட்டுமல்ல. அவை நடைமுறை வாழ்வியலின் நிதர்சனமான உண்மைகள்.
எனவே பழமொழிகளை நாம் யாரும் கடந்து சென்று விடக்கூடாது. அவ்வாறு கடந்து செல்ல நினைத்தாலும் பரவாயில்லை. எங்கள் மனமாவது பரந்து விரிந்து சிந்திக்கத்தக்கதாக இருக்க வேண்டும்.
இதுவும் இல்லை. பழமொழிகள் பற்றிய நினைப்பும் இல்லை என்றால், துன்பத்திற்குள் வீழ்ந்து கிடப்பதே விதி என்றாகிவிடும்.
ஆம், இங்கு தான் தமிழ் கூறுகின்ற ஒரு பழமொழி பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்கிறது அந்தப் பழமொழி. எல்லோருடனும் நாம் பகை கொள்வோமாயின், எங்கள் வாழ்வு அஸ்தமனமாகிவிடும். இதனையே கம்பராமாயணம் யாரொடும் பகை கொள்ளன் என்ற பின் போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது எனக் கூறி நிற்கிறது.
இதற்கும் அப்பால், படை முகத்திலும் அறிமுகம் பெரிது என்ற நம் தமிழ் மொழித் தத்துவம் எத்துணை அற்புதமானது.
ஆம், அசோகவனத்தில் இருக்கும் சீதாப் பிராட்டியை மீட்பதற்காக இராமபிரானும் சேனைகளும் இலங்கைக்கு வந்துவிட்டன. போரில் இலங்காபுரி அழியப் போகிறது. கும்பகர்ணன், வீடணன் ஆகியோர்; கற்புடைத் தேவியை விட்டிடும்படி அண்ணன் இராவணனிடம் மன்றாடுகின்றனர்.
எனினும் இச்சைவயப்பட்டிருந்த இராவணனால் தன் சகோதரர்கள், தன் பிள்ளைகள், தன் நாட்டு மக்கள் என எது பற்றியும் சிந்திக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் கும்பகர்ணனின் ஆலோசனையோடும் வீடணன் இராமபிரானின் பக்கம் வருகிறான். இங்கு தான் வீடணனை இராமர் எதிர்க்கவில்லை. மாறாக அவனைத் தன் சகோதரனாக ஏற்றுக்கொள்கின்றார்.
ஆக, எதிர்த்தரப்பில் இருந்தும் நமக்கு ஆதரவானவர்கள் தேவை என்ற உண்மையை குறித்த காட்சி எடுத்துக் காட்டுகிறது.
ஆம் இதிகாசங்கள், காப்பியங்கள் எங்கள் வாழ்வியலுக்கான தத்துவங்களை – நுட்பங்களை எடுத்துக்காட்டுகின்றன. எனினும் நம் தமிழினம் அது பற்றி இம்மியும் சிந்திப்பதாக இல்லை.
மாறாக, யாராக இருந்தாலும் அவர்களை எதிர்க்க வேண்டும் என்ற வக்கிரமான மன நிலைக்கு நாம் ஆளாகிவிட்டோம். இந்த நிலைமை போரினால் எமக்கு ஏற்பட்ட இழப் பின் விளைவாகக் கூட இருக்கலாம்.
ஆயினும் நாம் நிதானத்தை இழப்போமாயின், எங்களை நோக்கித் துன்பம் வரிசை கட்டி நிற்கும்.
உண்மை. வெள்ளிக்கிழமை (19) இந்த நாட்டின் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதை குழியை நேரில் வந்து பார்வையிட்டார்.
எனினும் அவருக்கு எதிராக நம்மில் சிலர் கோசம் வெளியிட்டனர்.
அந்தக் கோசம் அவர்களின் மன வேதனையின் பாற்பட்டதாக இருந்தாலும் அதனைத் தவிர்த்திருக்கலாம்.
ஏனெனில் நீதியமைச்சர் ஹர்ன நாணயக்காரவுக்கான எங்களின் எதிர்ப்பு, செம்மணி மனிதப் புதைகுழியின் சூத்திரதாரிகளை மகிழ் வித்து விடக்கூடாது என்பது தான் நம் தாழ்மையான கருத்து.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


