நம் தமிழ் இனத்துக்குத் தேவை தோற்ற அரசியல்வாதினகளே!
Share
நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவது பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
எனினும் கொரோனாத் தொற்றுக் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாத் தொற்றில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த எதிர்க் கட்சித் தலைவரின் கடமை என்னவாக இருக்க வேண்டுமோ அதனை சஜித் பிரேம தாஸ செய்வது அரசியல் கலாசாரத்தில் ஒரு முன்மாதிரி எனலாம்.
தவிர, கொரோனாத் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாத்தாக வேண்டும் என்பதில் அரசாங்கத்தைவிட, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருபடி மேல் எனக் கூறலாம்.
இவை ஒருபுறமிருக்க, தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கிலும் கொரோனா அச்சுறுத்தல் பயங்கரமாக உள்ளது. இருந்தும் எங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
உண்மையில் தமிழ் மக்கள் மீது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கரிசனை இருந்திருக்குமாயின், அவர்கள் வடக்கு – கிழக்கு சுகாதாரப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எனச் சம்பந்தப்பட்ட தரப்புகளைச் சந்தித்து கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.
ஆனால் இன்றுவரை நம் தமிழ்ப் பாராளு மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
என்ன செய்வது பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்துவிட்டால், மக்கள் நலன் பற்றிச் சிந்திப்பது வீண் என்று நினைப்பவர்களாக நம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அதிலும் தமிழ் மக்கள் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்துவிட, அவர்கள் தங்களுக்குள் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பாராளுமன்ற செளகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.
ஆம், முன்பெல்லாம் பொதுத் தேர்தலில் தோற்ற தமிழ் அரசியல்வாதிகள் வென்ற தமிழ் அரசியல்வாதிகளைப் பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். அறிக்கை விட்டனர்.
அதற்குப் பயந்தேனும் வென்றவர்கள் ஏதோ செயற்பட முற்பட்டனர்.
ஆனால் இம்முறை; தோற்றவர்களும் வென்று விட, எம் இனத்தின் கதி அந்தோ என்றாயிற்று.
இதை அவதானித்தபோதுதான், இப்போது எமக்குத் தேவை தோற்ற தமிழ் அரசியல்வாதிகளே என்பதை உணர முடிகிறது.