Type to search

Headlines Uncategorized

நோயற்று வாழ்வது எப்படி? நோயுற்றும் சுகமாக வாழ்வது எப்படி?

Share

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அத்திபாரம் அவன் கருப்பையில் இருக்கும் போது இடப்படுகிறது. தாயின் மனமகிழ்ச்சி,போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுகள் சிசுவின் ஆரம்பஆரோக்கிய வளர்ச்சிக்கு அடிநாதமாய் திகழ்கின்றன. அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் பொழுது பல்வேறு பட்ட சவால்களை எதிர்கொள்கிறான்.

அந்தச் சவால்களை வெற்றி கொள்ளப் போராடுவது தான் சுக வாழ்வுக்கான தேவையாகிநிற்கிறது.

உலகம் இயந்திரமயமாகி சுதந்திரங்கள் பறிபோய் பூமிக் காற்றுப்புகையாகி, புழுதிமண்டலமாகி,ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, பூமியைக் கதிர்வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டு,பாவப்பட்ட மண் பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது.

இயற்கையான இனிய கனிகளுக்குக்கூட இரசாயனம் தெளிக்கப்பட்டுப் பகட்டான நச்சுக் கனிகள் ஆக்கப்பட பொலித்தீன்கள் எம்மை ஆக்கிரமிக்க மனிதன் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறான். இந்தச்சவால்களை எதிர்கொள்ள சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரந்துபட்ட அளவில் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவைஎழுந்திருக்கிறது.

எமது சிறார்களுக்கு சுகம் சம்பந்தமான அறிவைச் சிறுவயதிலேயே புகட்டுவோம். உடற்பயிற்சி,ஆரோக்கிய உணவுமுறை, உடல் நிறை பேணுதல், ஆரோக்கிய வாழ்க்கை முறை, சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றை அவர்களின் மனது ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லிக் கொடுப்போம்.

ஒவ்வொரு மனிதனும் தான்ஒரு ஆரோக்கியமானவன், சுகதேகி என்று எண்ணிக்கொள்வது அவனைப் பல நோய்நிலைகளிலிருந்து காக்கும்.

சிறுசிறு உடல் நலக்குறைவுகளும் நோய்நிலைகளும் அவ்வப்பொழுது ஏற்படுவது இயற்கை.அவற்றிற்குப் பொருத்தமான நடவடிக்கை எடுத்து தொடர்ந்து நாம் ஆரோக்கியமாக வாழமுடியும் என்ற நம்பிக்கை அனுகூலமாக அமையும்.

கடுமையான நோய்நிலைகளிலே பெரும்பாலானவை மனிதனின் கவனக்குறைவினாலும் போதியளவு மருத்துவ அறிவு இல்லாததனாலுமே ஏற்படுகின்றன. எனவே நாம் மருத்துவம் சம்பந்தமான தகவல்களை அறிவதில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும்.

இயந்திரமயமாகிவிட்ட இந்த உலகை நாம் புத்திசாதுரியமாக சாதகமாக பயன்படுத்த கற்றுக்கொள்வோம். விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதன் சராசரியாக வாழும் வயதெல்லை அதிகரித்திருக்கிறது. கற்கை, கற்பித்தல் செயற்பாடுகளில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியினால் உலகம் ஒரு குடும்பம் போல நெருங்கி வந்திருக்கின்றது.இந்த நல்ல மாற்றங்களை எமது சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்வோம்.

மனச்சோர்வு, உலக சவால்களை எதிர்கொள்வதில் ஏற்படும் கஷ்டநிலை என்பன பல சுகாதாரப்பிரச்சினைகளை ஏற்படுத்தி நிற்கின்றன. இவை தற்கொலைகளில்கூட முடிகின்றன. தற்கொலை என்பது வாழ்ந்தது போதும் என்ற எண்ணமே அன்றி இறப்பதற்கான விருப்பம் அல்ல.அவ்வாறான எண்ணம் தற்காலிகமானது என்பது உணரப்படவில்லை.

தற்கொலையில் ஈடுபடுபவரில் பலர் ஒரு கண நேரத்தில் இவ்வாறான முடிவை எடுத்துவிட்டு இறுதியில் தாம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வைத்திய சேவைகளை நாடுகின்றனர்.

இவ்வாறு அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்த சமூக மட்டத்திலே பல்வேறுபட்ட தரப்புகளின் கூட்டு முயற்சி அவசியமாகின்றது.

உலகிலே உடற்பருமன் அதிகரிப்பால் ஆண்டுதோறும் 30 இலட்சம் பேர் இறக்கின்றனர்.எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது. உடல் நிறை பராமரிப்பு உயிர்காக்கும் என்ற தகவல் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.

மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம், மருந்து, சுவாசக்காற்று, நிழல், குளிர்ச்சி, மன அமைதி, மழை, நீர், எரிபொருள், மகிழ்ச்சி என அனைத்தையுமே தொடர்ந்து அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தாவரங்களையும் மரங்களையும் நட்டு வளர்ப்பதில் பெருமிதம் கொள்வோம்.

மனதிற்கு பிடித்த நல்ல காரியங்களில் மனதை செலுத்துவோம். மனதையும் உடலையும் சுற்றாடலையும் தூய்மையாகப் பேணி சுகம் பெறுவோம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link