அறுபதில் போகும் பதவி ஐம்பத்தைந்தில் போனால் என்ன?
Share
உயர்பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தற்துணிவு உடையவர்களாகவும் தமது பதவிகளை மக்கள் பணிக்காகப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
மாறாக, தமக்குக் கிடைத்த பதவி இறை வனால் தரப்பட்டது என்ற நினைப்பும் இறை வனால் தரப்பட்ட பதவியை மக்கள் தொண்டு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மனத்திடமும் இருக்க வேண்டும். அப்போது தான் பதவி மீது அதீத ஆசை ஏற்பட மாட்டாது.
தவிர, பதவி ஆசை ஏற்படும்போது அந்தப் பதவியை யார் பறிக்க வல்லவர்களோ அவர் களைத் தொழுது பணியாற்றுகின்ற பரிதாப நிலை ஏற்படும்.
எனவே பதவி மீது ஆசை கொள்ளாமல், கிடைத்த பதவியைக் கொண்டு மக்கள் பணி செய்யும்போது, அதற்கு மக்களின் வாழ்த்தும் இறைவனின் ஆசியும் நிச்சயம் கிடைக்கும்.
அரச பதவி என்பது அறுபது வயதுடன் ஓய்வுக்கு வருவது. அறுபது வயது என்பது இன்றைய காலத்தில் மிக வேகமாக நகரக் கூடியது.
எனவே 60 வயது வரை மட்டுமே பதவிக் கதிரையில் இருக்கக்கூடிய அதிகாரிகள், எந் தளவுக்கு தங்களின் பதவிக்குரிய அதிகாரங் களைக் கொண்டு பொது மக்களுக்கு சேவை யாற்ற முடியுமோ அந்தளவுக்கு அந்த சேவையை விரைவாகவும் முழுமையாகவும் வழங்க வேண்டும்.
அந்த வகையில் எங்கள் தமிழ் அதிகாரிகள் இது விடயத்தில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வது அவசியமாகிறது.
அதாவது இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை ஆளுந்தரப்புகள் கொண்டுள்ளன.
தமிழர்களின் நில ஆக்கிரமிப்புத் தொடக் கம் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு எனப் பல தளங்களிலும் நம் தமிழ் இனத் துக்கு ஆளும் உயர் வர்க்கம் அநீதி இழைக் கின்றது.
இவ்வாறு இழைக்கப்படும் அநீதிக்கு தமிழ் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அரச தரப்புக் குத் தேவையாக இருக்கிறது.
இங்குதான் பதவி ஆசை காரணமாக அரச தரப்பின் நியாயமற்ற செயல்களுக்கு எமது அரச உயர் அதிகாரிகள் உடந்தையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆம், எங்களைக் கொண்டே எங்களை வீழ்த்துகின்ற வஞ்சகத்தனத்துக்கு நம்மவர் களை இழுத்துப் போடுகின்ற தூண்டில்களாகப் பதவிகளே பயன்படுத்தப்படுகின்றன.
ஆகையால் பதவிகளைப் பொருட்படுத்தாமல் எது சரியோ! அதனைச் செய்வதுதான் தர்மம்.
அறுபதில் போகின்ற பதவி ஐம்பத்தைந்தில் போனால் என்ன என்றெண்ணி; நல்லது செய்தால் அது என்றும் நிலைத்த புகழைத் தந்தருளும்.